Monday, September 20, 2010

அமெரிக்காவில் பத்தே நிமிடத்தில் விற்றுத் தீர்ந்த எந்திரன் டிக்கெட்டுகள்!

  சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் படத்துக்கான அட்வான்ஸ் புக்கிங் அமெரிக்காவில் தொடங்கிய வேகத்தில் முடிந்துவிட்டது. வட அமெரிக்கா முழுவதற்குமான எந்திரன் பட டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய பத்தே நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிட்டன.

முதல் ஒருவாரத்துக்கான டிக்கெட் விற்பனை நிலவரம் இது. 'அமெரிக்காவில் இதுவரை எந்த ஒரு இந்தியப் படத்துக்கும் இத்தனை வேகமாக டிக்கெட்டுகள் விற்பனையானதில்லை. அந்த வகையில் மிகப் பெரிய சாதனை இது', என்கிறார்கள் சன் பிக்சர்ஸ் குழுவினர்.

பொதுவாக, அமெரிக்காவில் வெளியாகும் இந்தியப் படங்களுக்கு, வெளியாகும் திகதிக்கு ஒரு வாரத்துக்கு முன்புதான் டிக்கெட் விற்பனை தொடங்கும். ஆனால் எந்திரனுக்கு 12 தினங்களுக்கு முன்பே டிக்கெட் விற்பனை தொடங்கிவிட்டது.

நியூயோர்க்கின் ஜாக்ஸன் ஹைட்டில் டிக்கெட் விற்பனை நிலையம் திறக்கப்பட்ட அடுத்த 10 நிமிடங்களில் முழுவதுமாக விற்றுத் தீர்ந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை பெற்றனர். பலர் டிக்கெட் கிடைக்காத ஏமாற்றத்தில் திரும்பிச் சென்றனர்.
 


பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஒற்றை தலைவலி : மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி பிரச்னைகளால் பள்ளிக்குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் அவர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்' என மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
குடும்ப சுமை, வேலைப்பளு போன்றவற்றால், பெரியவர்களுக்கு தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி பிரச்னை ஏற்படுவதாக கருதப்படுகிறது. ஆனால் இந்த பிரச்னைகளால் தற்போது பள்ளிக்குழந்தைகள் பாதிக்கப்படுவதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து குழந்தைகள் மற்றும் மூளை நரம்பியல் மருத்துவ நிபுணர் ஆண்ட்ரூ ஹெர்சி கூறியதாவது:
தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்காக அதிகாலையிலேயே எழுந்து விடுகின்றனர். பள்ளியில் நீண்ட நேரம் பாடங்களை கூர்ந்து கவனிக்கின்றனர். மேலும் வீடு திரும்பும் அவர்கள் வீட்டு பாடங்களை முடித்துவிட்டு வெகு நேரம் கழித்து தூங்க செல்கின்றனர். இதுதவிர காலையில் பள்ளிக்கு செல்லும் பதட்டத்தில் அவர்கள் சாப்பிடுவதில்லை.போதிய தண்ணீர் குடிப்பதில்லை. இதனால் அவர்களுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது. ஒற்றை தலைவலி பரம்பரையாக வரக்கூடிய பிரச்னை.அடிக்கடி ஏற்படும் தலைவலியும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்த வல்லது.
ஹார்மோன்களில் மாற்றம், இரத்த நாளங்களை விரிவடைய செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். தற்போது 10 சதவீத குழந்தைகளுக்கும், 28 சதவீத பெரியவர்களுக்கும் இந்த பிரச்னை உள்ளது.
பெரியவர்களுக்கு 4 மணி நேரமும்,குழந்தைகளுக்கு ஒரு மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை கூட ஒற்றை தலைவலி தொடர்ந்து இருக்கும். பெரியவர்களுக்கு தலையின் ஒரு பகுதியிலும் குழந்தைகளுக்கு நெற்றியிலும் ஒற்றை தலைவலி ஏற்படுகிறது.மூன்று வயது குழந்தைகளுக்கு கூட ஒற்றை தலைவலி பிரச்னை ஏற்படுகிறது. சீதோஷ்ண நிலையில் ஏற்படும் மாற்றங்களாலும் அவர்களுக்கு தலைவலி பிரச்னை ஏற்படுகிறது. இவ்வாறு ஆண்ட்ரூ ஹெர்சி கூறினார்.

பூமிக்கு அருகில் புதிய கிரகங்கள்

பிரபஞ்சம் குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டாலும், இன்னமும் அதன் ரகசியத்தை ஆய்வாளர்கள் முழுமையாக கண்டுபிடிக்க முடியவில்லை. உலகின் பல நாடுகள் விண்வெளி குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
விண்வெளி ஆய்வுகளை அமெரிக்கா நீண்டகாலமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஆயிரத்து 440 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஆய்வு திட்டம் அங்கு தீட்டப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், உடா மாநில பல்கலைக்கழக டைனமிக் பரிசோதனை கூடத்தில் 16 அங்குல தொலைநோக்கி உருவாக்கப்பட்டது.
“வைஸ்’ என்று சுருக்கமாக அழைக்கப்படும், “வைட் பீல்டு இன்பிராரெட் சர்வே எக்ஸ்புளோளர்’ என்ற இந்த விண்வெளி தொலைநோக்கி, கடந்த டிசம்பரில் பூமியில் இருந்து 300 மைல் தூரத்தில் விண்வெளியில் சுற்றி வரும்படி ஏவப்பட்டது. 11 நொடிக்கு ஒரு படம் என்ற அளவில் இந்த தொலைநோக்கி விண்வெளியை கேமராவால் சுட்டுத்தள்ளி, படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.
இவ்வாறு அனுப்பப்பட்ட படங்கள் மூலம் விண்வெளி குறித்த பல்வேறு புதிய விஷயங்கள் கிடைத்து வருகின்றன. “வைஸ்’ தொலைநோக்கி அனுப்பிய படங்கள் மூலமாக, கடந்த ஆறு மாதங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 95 கிரகங்கள் பூமிக்கு மிக அருகில் உள்ளன என தெரியவந்துள்ளது. மிக அருகில் என்றால், இக்கிரகங்கள் பூமியில் இருந்து 3 கோடி மைல்கள் தொலைவில் உள்ளன. இவற்றால் பூமிக்கு தற்போது எந்த அபாயமும் இல்லை.
“வைஸ்’ தொலைநோக்கி, விண்வெளியில் தன் முதல் முழுமையான தேடுதலை சமீபத்தில் தொடங்கி உள்ளது. இதன் மூலம், இந்த ஆண்டு இறுதிக்குள், பிரபஞ்சம், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவை எவ்வாறு தோன்றின என்ற கேள்விக்கான விடை தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிய கிரகங்களை மட்டும் இல்லாமல் 15 புதிய வால் நட்சத்திரங்களையும் அமெரிக்க தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது. நட்சத்திரங்களை விட அளவில் சிறியதும், கிரகங்களை விட பெரியதுமான வளர்ச்சி குறைந்த நூற்றுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை, “வைஸ்’ ஆய்வு செய்துள்ளது. இவற்றில் 20 குறித்த தகவல்கள் முழுமையாக கிடைத்துள்ளன. 45 ஆயிரம் கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள, ஒளிமிக்க ஒரு பால் மண்டலத்தை, “வைஸ்’ கண்டுபிடித்துள்ளது.
சாதாரண தொலைநோக்கியை விட, “வைஸ்’ தொலைநோக்கி சக்தி வாய்ந்ததாக இருப்பதால், அது அனுப்பி வரும் விண்வெளி தகவல்கள் விஞ்ஞானிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இன்பிரா ரெட் தொழில்நுட்ப தொலைநோக்கி உருவாக்கப்பட்டது. அதில் இருந்து இதுவரை உருவாக்கப்பட்ட தொலைநோக்கிகளில், “வைஸ்’ தொலைநோக்கி தான் மிக சக்தி வாய்ந்தது.
“விண்வெளியில் காணப்படும் கடும் வெப்பம் மற்றும் அதிக ஒளி கொண்ட பொருட்களை நோக்கியே பெரும்பாலான தொலைநோக்கிகள் செயல்படும். ஆனால், அடர்த்தியான தூசிகளின் உள்ளேயே ஊடுருவி, தெளிவற்று காணப்படுபவைகளையும் தெளிவாக பார்க்கலாம்; குளிர்ச்சியான மற்றும் இருட்டில் மறைந்துள்ள பொருட்களையும் காணலாம் என்பதுதான், “வைஸ்’ விண்வெளி தொலைநோக்கியின் சிறப்பு!’ என்கிறார் ரிச்சர்டு பின்செல் என்ற விஞ்ஞானி. “பிரபஞ்சத்தில் பூமிக்கு அருகில் காணப்படும் பொருட்களை கொண்டு பால் மண்டலம் உருவானதை சிறிது சிறிதாக அறிந்து வருகிறோம். இனி கிடைக்கும் புள்ளி விவரங்களை கொண்டுதான் உண்மையான கண்டுபிடிப்புகள் வெளிவரும்!’ என்கிறார் நாசா விஞ்ஞானி பீட்டர் இசென்ஹர்டு.

விமானப் போக்குவரத்தின் போது உயிரி எரிபொருட்கள் பயன்படுத்தப்படவுள்ளன

விமானப் போக்குவரத்தின் போது உயிரி எரிபொருட்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் மூன்றாண்டு காலப்பகுதியில் வர்த்தக விமானங்களில் உயிரி எரிபொருட்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
2050ம் ஆண்டளவில் உயிரி எரிபொருட்களின் அளவை 50 வீதமாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
உணவுப் பொருள் உற்பத்தியை பாதிக்காத வகையில் தொடர்ச்சியாக உயிரி எரிபொருட்களை பெற்றுக் கொள்வதற்கு சிறந்த திட்டங்கள் தீட்டப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டள்ளது.
உயிரி எரிபொருட்களின் மூலம் விமானங்களினால் வெளியிடப்படும் நச்சுப் புகையை 80 வீதத்தினால் குறைக்க முடியும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் உயிரி எரிபொருட்களின் விலை உயர்வாகக் காணப்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து இலத்திரனியல் வாகமொன்றுக்கு அமெரிக்காவில் விருது

சுவிட்சர்லாந்து இலத்திரனியல் வாகமொன்றுக்கு அமெரிக்காவில் விருது வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தின் பேராவஸ் நிறுவனத்தினால் உருவாக்க்பட்ட ட்ரேசர் என்ற மோட்டார் சைக்கிளுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
புத்தாக்க திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்கா நடத்தி வரும் போட்டியில் குறித்த சைக்கிளுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருது வழங்கும் விழாவில் மொத்தமாக 136 வாகனங்கள் போட்டிக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்துது.
சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் சுவிட்சர்லாந்து வாகனம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கைக்கு தீங்கு இழைக்காத இந்த நவீன இலத்திரனியல் மோட்டார் சைக்கிளிற்காக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன.

லூசர்னில் உயரமான கட்டடமொன்றிலிருந்து வீழ்ந்து இளைஞர் ஒருவர் பலி

லூசர்னில் உயரமான கட்டடமொன்றிலிருந்து வீழ்ந்து இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லூசர்னில் உள்ள இரவுநேர கேளிக்கை விடுதியொன்றிலிருந்து விழுந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
12 மீற்றர் உயரமான கட்டடமொன்றிலிருந்து வீழ்ந்த 21 வயது சுவிஸ் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
புகைப்பிடிப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த பிரதேசத்திலிருந்து தவறி வீழ்ந்தத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு காவல்துறையினர் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உலகின் மிக நீளமான கூந்தலை உடைய ஆணாக இலங்கையர் சாதனை! (படம் இணைப்பு)



உலகின் மிக நீளமான கூந்தலை உடைய ஆண் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார் கனடாவில் வாழும் இலங்கையரான சுதேஸ் முத்து (வயது 40). இவரது கூந்தலின் நீளம் ஆறு அடி மூன்று அங்குலம்.

இவரின் உயரமோ ஐந்து அடி ஒன்பது அங்குலம். சர்வதேசப் பிரசித்தி வாய்ந்த பாடகர் Bob Marley இன் இசைப் பிரியனான சுதேஸ் Marley இன் கூந்தலால் கவரப்பட்டவர்.

17 ஆவது வயதில் இருந்து இக்கூந்தலை வளர்த்து வருகின்றார். இவர் 1995 ஆம் ஆண்டு கனடாவில் குடியேறினார். 1999 ஆம் ஆண்டு இவர் இலங்கைக்கு திரும்பிச் சென்று திருமணம் செய்து கொண்டார்.

அப்போது கூட கூந்தலை வெட்டுகின்றமைக்கு மறுத்து விட்டார். இவரின் தாய் உட்பட சொந்தக்காரர்கள் பலர் கூந்தலை சுதேஸ் வெட்டினால்தான் திருமணத்துக்கு வருவார்கள் என்று பிடிவாதம் பிடித்தனர்.

ஆயினும் சுதேஸ் மசிந்து கொடுக்கவே இல்லை. மீண்டும் கனடாவுக்கு வந்த இவர் கடினமான உழைப்பினால் முன்னேறி பிளாஸ்ரிக் பொருட்களை மீள்சுழற்சி முறையில் பயன்படுத்தும் கம்பனி ஒன்றின் உரிமையாளராக உள்ளார்.

மனைவி மற்றும் மூன்று ஆண் குழந்தைகளுடன் Thornhill நகரில் வசிக்கின்றார். சுதேஸின் தாயார் கின்னஸ் சாதனையை அறிந்தவுடன் தொலைபேசியில் சொன்ன வசனம் இப்போதாவது கூந்தலை வெட்டி விடு என்பதுதான்.

மனைவியுடன் படுக்கையில் தூங்கும்போது இக்கூந்தல் பாரிய பிரச்சினையாகத்தான் இருக்கின்றது என்று ஒப்புக் கொள்கின்றார் சுதேஸ். உலகின் மிக நீளமான கூந்தலை உடையவர் அமெரிக்காவின் Florida மாநிலத்தைச் சேர்ந்த Asha mandela என்கிற பெண் ஆவார்(வயது 48). இவரது கூந்தலின் நீளம் எட்டு அடி ஒன்பது அங்குலம்.

குழந்தை பேறின்மையை நிறைவேற்ற செயற்கை கர்ப்பப்பை

பெண்களுக்கு  கர்ப்பப்பையில் கோளாறு ஏற்பட்டால் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. தற்போது பெண்களுக்கு அதிக அளவில் கர்ப்பப்பை புற்று நோய் ஏற்படுகிறது.
அவர்களுக்கும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலை உள்ளது. இவர்களுக்கு உதவும் வகையில் விஞ்ஞானிகள் செயற்கை கர்ப்பபையை உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர். இதுதொடர்பாக அமெரிக்காவில் உள்ள புரோன் பல்கலைக்கழகம் மற்றும் பெண்கள்- குழந்தைகள் வைத்தியசாலை மருத்துவ விஞ்ஞானிகள் கூட்டாக ஆய்வு செய்து இதை உருவாக்கி உள்ளனர்.
உடல் தசையில் இருந்தே இதை உருவாக்கி இருக்கின்றனர். இதை பெண்கள் உடலில் பொருத்தி கருவை வளர்க்க முடியும். செயற்கை கர்ப்பபை வெற்றிகரமாக அமைந்தால் குழந்தை இல்லாத பெண்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும்.

சாதனைக்கு ஊனம் தடையல்ல: ஆங்கில கால்வாயை நீந்திய கை- கால்கள் இல்லாத வாலிபர்


பிரான்ஸ் நாட்டில் உள்ள விஸ்சன்ட் நகரை சேர்ந்தவர் பிலிப் குரோய்ஷன் (42) கடந்த 1994-ம் ஆண்டு நடந்த மின் தாக்குதலில் இவர் தனது 2 கைகள் மற்றும் 2 கால்களை இழந்துவிட்டார்.

இருந்தும் வாழ்க்கையில் ஏதேனும் சாதனை படைக்க வேண்டும் என நினைத்தார். பொதுவாக அவருக்கு நீச்சல் மிகவும் பிடிக்கும். எனவே, தனது சாதனைக்கு நீச்சலை தேர்ந்தெடுத்தார்.

இங்கிலாந்து அருகேயுள்ள ஆங்கில கால்வாயை நீந்தி கடக்க முடிவு செய்தார். அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதற்கான நடவடிக்கையில் இறங்கினார்.

அவர் 13?மணி நேரத்தில் ஆங்கில கால்வாயை நீந்தி கடந்து சாதனை படைத் தார். 24 மணி நேரத்தில் கடக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் 10? மணி நேரத்துக்கு முன்பே நீந்தி முடித்தார்.

ஆங்கில கால்வாயை அவர் நீள் வட்ட வாக்கில் 21 மைல் நிளம் நீந்தி கடந் துள்ளார். இதன்மூலம் தனது சாதனைக்கு ஊனம் ஒரு தடையல்ல என்பதை அவர் நிரூபித்துள்ளார்.

'பேஸ்புக்' தயாரிக்கும் இரகசிய கையடக்கத் தொலைபேசி

  பிரபல சமூக வலைபின்னல் தளமான 'பேஸ்புக்', கையடக்கத் தொலைபேசி ஒன்றை உருவாக்கி வருவதாக 'டெக்கிரன்ச்' இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. 

மூன்றாம் நபர் வன்பொருளில் இயங்குவதற்கான இயங்குதளத்தினை ( ஒபரேடிங் சிஸ்டம்) 'பேஸ்புக்' தயாரித்து வருகின்றதென அத்தளம் குறிப்பிட்டிருந்தது. 

கூகுளின் 'அண்ரோயிட்' இயங்குதளத்தினைப் போன்ற ஒரு முயற்சியில் 'பேஸ்புக்' இறங்கியிருக்கலாமெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூகுளின் 'அண்ரோயிட்' கையடக்கத் தொலைபேசிகள் தற்போது பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இக்கையடக்கத் தொலைபேசியானது தனது சமூக வலைப்பின்னலை அடிப்படையாக கொள்ளவுள்ளதாகவும், இதன் மூலம் பாவனையாளர்கள் இலகுவாக 'பேஸ்புக்'கினை உபயோகிக்க முடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் சிறப்பம்சங்கள் தொடர்பாக பல்வேறு தகவல்கள் கசிந்த வண்ணமுள்ளன. எனினும் மேற்படித் தகவல் வதந்தியெனவும் தாம் அவ்வகையான இரகசிய நடவடிக்கை ஒன்றில் ஈடுபடவில்லையெனவும் 'பேஸ்புக்' நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆய்வாளர்களின் கருத்துப்படி பேஸ்புக் அவ்வாறு கைத்தொலைபேசியினை வெளியிடுமாயின் அது பெரிய வரவேற்பைப் பெறும் சாத்தியமுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உலகளாவிய ரீதியில் மொத்த 'பேஸ்புக்' பாவனையாளர்களின் எண்ணிக்கை 500 மில்லியனுக்கும் அதிகமென்பது குறிப்பிடத்தக்கது. _

புர்காவிற்கு தடை:மசோதாவை நிறைவேற்றியது பிரான்சு பாராளுமன்றம்

hijabபிரான்சு நாட்டு பாராளுமன்றமான செனட் புர்காவை தடைச்செய்யக் கோரும் மசோதாவை நிறைவேற்றியது.
இம்மசோதாவிற்கு ஆதரவாக 249 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் கிடைத்தன. இதன் மூலம் பிரான்சில் இனி பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணியத்தடை அமுலுக்கு வரும்.
ஐரோப்பாவில் அதிகமாக முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் பிரான்சு முதலிடத்தை வகிக்கிறது. இங்கு முஸ்லிம்கள் இரண்டாவது பெரிய மதப்பிரிவினர் ஆவர். மதசுதந்திரம் இன்னும் சில பழுதுகளை பயன்படுத்தி இம்மசோதாவிற்கு எதிரான வாதங்களை எதிர்கொள்ளும் விதமாக மிக சாமர்த்தியமான முறையில் இம்மசோதாவில் சில பிரிவுகள் உட்படுத்தப்பட்டுள்ளன.
மசோதாவின் ஏழு பிரிவுகளில் ஒரு இடத்தில் கூட முஸ்லிம், பர்தா, பெண் என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. கடந்த ஜூலையில் பிரான்சு பாராளுமன்றத்தின் நேசனல் அசெம்ப்ளி இம்மசோதாவிற்கு அங்கீகாரம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மதரீதியாக முகத்தை மறைப்பது பிரான்சு காத்துவரும் மதசார்பற்றத் தன்மைக்கும், பெண் சுதந்திரத்திற்கும் எதிரானது என சுட்டிக்காட்டித்தான் பிரான்சு அரசு புர்கா அணிய தடை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே பிரான்சு அரசின் நடவடிக்கைக்கு எதிராக பல இடங்களிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசு விரும்பினால் இதர நாடுகளில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதுபோல் பிரான்சிலும் அத்தகைய சுதந்திரத்தை அனுமதிக்க வேண்டும் என இந்தோனேசியாவின் உயர் முஸ்லிம் சபையான இந்தோனேசியன் உலமா கவுன்சில் கூறியுள்ளது.

லா பெட்டிட் சாம்பர் என்ற திரைப்படம் ஒஸ்கார் விருதுகளுக்காக தெரிவு

லா பெட்டிட் சாம்பர் என்ற திரைப்படம் ஒஸ்கார் விருதுகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 2011ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில் சுவிட்சர்லாந்தை லா பெட்டிட் சாம்பர் திரைப்படம் பிரதிநிதித்துவப்படுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என்ற பிரிவின் கீழ் லா பெட்டிட் சாம்பர் திரைப்படம் விருது வழங்கும் விழாவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ககை, களம், வசன அமைப்பு, திரைப்படத்தின் விறுவிறுப்பு ஆகியவற்றை கருத்திற் கொண்டு இந்தத் படத்தை தெரிவு செய்ததாக சுவிட்சர்லாந்து கலாச்சாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் திகதி ஒஸ்கார் பரிந்துரைகள் அறிவிக்கப்படவுள்ளதுடன் பெப்ரவரி மாதம் 27ம் திகதி விருது வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

கட்டாய திருமணங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து சுவிஸ் அரசாங்கம் கவனம்

கட்டாய திருமணங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து சுவிட்சர்லாந்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்டாயத் திருமணங்கள் தொடர்பில் மிகவும் குறைந்தளவு புள்ளி விபரங்களே காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக சுவிட்சர்லாந்தில் குடியேறிய புலம்பெயர் மக்களிடையே இவ்வாறான கட்டாயத் திருமணங்கள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
2010ம் ஆண்டு இறுதிக்குள் கட்டாயத் திருமணங்களுக்கு எதிரான சட்ட மூலம் நிறைவேற்றப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
சுவிட்சர்லாந்து நீதி அமைச்சு கட்டயாத் திருமணங்களுக்கு எதிரான உத்தேச சட்ட வரைவினை தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அமுலில் உள்ள சட்டத்தின் அடிப்படையில் கட்டாயத் திருமணங்களை மேற்கொள்வோருக்கு எதிராக மூன்றாண்டு கால சிறைத் தண்டனை வழங்கப்பட முடியும்.
கட்டாயத் திருமணங்களை தடுப்பதற்காக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துருக்கி நடுவீதியில் தனியே தவழ்ந்து சென்ற குழந்தை (வீடியோ இணைப்பு)

துருக்கியில் உள்ள அன்டால்யா நகரம் எப்போதும் பரபரப்பாக இயங்கும். அங்குள்ள நெடுஞ்சாலையின் ஓரம் ஒரு பெண் தனது ஒரு வயது குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்து விட்டு பிச்சை எடுக்க சென்று விட்டாள்.

அப்போது, கண் விழித்த குழந்தை தானாக தொட்டிலில் இருந்து இறங்கி வீதியில் தவழ ஆரம்பித்தது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். நடுரோட்டில் குழந்தை தவழும் தகவலை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர்.

இதனால் வாகனம் ஓட்டிகள் வேகத்தை குறைத்து குழந்தை மீது மோதாமல் கவனமாக சென்றனர்.

இதற்கிடையே, இந்த காட்சியை துருக்கி டி.வி.க்கள் ஒளிபரப்பி பரபரப்பை ஏற்படுத்தின. தகவல் அறிந்ததும் குழந்தையின் தாய் அங்கே ஓடி வந்தாள். தனது குழந்தையை அங்கிருந்து தூக்கி சென்று பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பணக்கார அமெரிக்காவில் 7இல் ஒருவர், வறுமையில் வாடும் அவலம்

உலகின் பணக்கார நாடு என்று சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வர்ணிக்கப்பட்ட அமெரிக்காவில் 7 பேரில் ஒருவர் வறுமையில் வாடுவதாக சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
13.2 சதவீதம் பேர், அதாவது, 3 கோடியே 98 லட்சம்பேர் வறுமையில் வாழ்ந்து வருவதாக கடந்த 2008 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், தெரிய வந்துள்ளது.
ஆனால், தற்போதைய கணக்கெடுப்பில் இந்த எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சமாக (14.3 சதவீதம்) உயர்ந்துள்ளது. இதன்மூலம் அமெரிக்க மக்கள் தொகையில், 7 பேரில் ஒருவர் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்.
இன்னொரு பக்கம் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கையும் அங்கு அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பு கூறுகிறது. முன்பெல்லாம் பெரிய நகரங்களில் மட்டுமே பிச்சைக்காரர்கள் அதிகம் காணப்பட்டதாகவும் இப்போது சிறு நகரங்களிலும் பிச்சைக்காரர்கள் பெருகி விட்டதாகவும் அக்கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே அமெரிக்க எம்.பி.க்கள் வாங்குவதை கட்டாயம் ஆக்கும் 2 மசோதாக்கள், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டன.

அமெரிக்காவில் அணு ரகசியத்தை விற்ற விஞ்ஞானி தம்பதி கைது

அமெ‌ரி‌க்கா‌வி‌ல் அணு ரக‌சிய‌த்தை ‌வி‌ற்ற அ‌ர்ஜெ‌ன்டினாவை சே‌ர்‌ந்த த‌ம்ப‌தி கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.
அர்ஜென்டினாவை சேர்ந்த பெட்ரோ லியோனார்டோ மாஸ்செரோனி (75)- மார்ஜோரி ராஸ்பி மாஸ்செரானி (67) த‌ம்ப‌திகளான இவ‌‌ர்க‌ள் இருவரும் அணு விஞ்ஞானிகள்.
அமெரிக்க குடியுரிமை பெற்ற இவ‌ர்கள் அமெரிக்காவில் உள்ள லாஸ் அலமாஸ் நகரில் உள்ள தேசிய ஆய்வகத்தில் பணி புரிந்தனர். அப்போது, அணு ஆயுதங்கள் தயாரிக்க அவற்றின் ரகசியங்களை வெனிசுலா நாட்டுக்கு விற்றதாக புகார் கூறப்பட்டது.
இதை‌த் தொட‌ர்‌ந்து அவ‌ரிக‌ளிட‌ம் அமெரிக்காவின் உளவுத்துறை‌யின‌ர் (எப்.பி.ஐ.)‌ நட‌த்‌திய தீவிர ‌விசாரணையில் அது உண்மை என தெரிய வந்ததை தொடர்ந்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

பெண்களின் அழகை அதிகரிக்க செய்யும் குங்கும பூ

 பெண்களின் அழகை அதிகரிக்க அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை.குங்குமப்பூ ஒன்றே போதும். இந்த குங்குமப்பூவை எப்படி பயன்படுத்துவது என்ற சந்தேகம் நிலவத்தான் செய்கிறது.

குங்குமப்பூவை உரசி ஒரு மேசை கரண்டியில் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் முகத்திலும்,உதடுகளிலும் பூசிவர, உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வரட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.

இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும்

முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான் அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.

சில பெண்கள் நல்ல நிறமாக இருப்பார்கள். ஆனால் உதடுகள் மட்டும் கருமை படர்ந்து அசிங்கமாக இருக்கும். இப்படிப்பட்ட பெண்கள் குங்குமப்பூவை பயன்படுத்தினால் அழகு தேவதையாக மாறி விடுவார்கள்.
 .

புற்றுநோயாளிகளுக்கான ஐஸ்வர்யா ராயின் நடனம்

  புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராயும், நடிகர் அக்ஷய் குமாரும் ஆடிப் பாடி மகிழ்வித்தனர்.

மும்பையில் உள்ள புற்றுநோயாளிகள் உதவிக் கழகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆடிப் பாடினார் ஐஸ்வர்யா. புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருளாதார ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் அனைவரும் கை கொடுக்க வேண்டும் என்று அப்போது கோரிக்கை விடுத்தார் ஐஸ்வர்யா.

பின்னர் தனது படங்களிலிருந்து ஒலிக்கப்பட்ட பாடல்களுக்கு ஐஸ்வர்யா நடனம் ஆடினார். அவருடன் புற்றுநோயாளிகளும் ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சியின்போது பேசிய நடிகர் அக்ஷ்ய் குமார், எனது தந்தைக்கு புற்றுநோய் இருந்தது. எனவே அதன் வலி எனக்குத் தெரியும் என்று கூறினார்.
 

பேர்முடாவை உலுக்கிய 'ஐகர்' சூறாவளி (காணொளி இணைப்பு)

பேர்முடாவில் நேற்று கடும் சூறாவளி வீசியது.

பெரும் மழையுடன் கூடிய இந்தச் சூறாவளியால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்சார இணைப்புக் கம்பங்கள் வீழ்ந்தன.

மணிக்கு 120கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசியது. இதற்கு 'ஐகர்' சூறாவளி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அங்கு தொடரும் மோசமான கால நிலை காரணமாக சுமார் 230 மில்லி லீற்றர் வரை மழை பெய்யக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பாரிய கடல்அலைகள் எழலாம். இதனால் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயமுள்ளதெனவும் எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.

தற்போது 'ஐகர்' சூறாவளி வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய அமெரிக்காவின் தேசிய சூறாவளி மத்திய நிலையம் இதனை மிகவும் பாரிய சூறாவளியெனக் குறிப்பிட்டிருந்தது.