கருணையின் வடிவம் என்று போற்றப்படும் அன்னை திரேசாவின் 100 ஆவது பிறந்த தினம் இன்றாகும். 1910 ஆம் ஆண்டு 26 ஆம் திகதி மசிடோனியா கோஜிப்லில் பிறந்த அன்னை தெரேசா, அக்னஸ் கோன்ஜா போஜாஜியூ எனும் இயற்பெயருடன் இந்திய குடியுரிமை பெற்ற ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியாவார்.
இவர் 1979இல் அமைதிக்கான நோபல் பரிசும், 1980இல் மனிதநேய பணிகளுக்காக இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத் ரத்னா விருதும் பெற்றார்.
அன்னை தெரேசாவின் அன்பின் பணியாளர் சபை, அவர் மரணத்த வேளை, 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக் கொண்டிருந்தது.
இவர், அல்பேனியா ஷ்கோடரில் வாழ்ந்து வந்த நிக்கல் - டிரானா போஜாக்சியு தம்பதியரின் இளைய புத்திரியாவார். இவரது தந்தை அல்பேனிய அரசியலில் ஈடுபட்டிருந்தார். 1919 இல், அரசியலிலிருந்து விலகிய அவர் நோய்வாய்ப்பட்டு, அக்னஸுக்கு எட்டு வயதாயிருக்கும் போது காலமானார். தந்தையின் மரணத்திற்குப் பின், தாயார் அவரை ரோமன் கத்தோலிக்கராக வளர்த்து வந்தார்.
ஜோன் கிராப் க்ளூகாஸின் வாழ்க்கை வரலாற்றின் படி குழந்தைப் பருவத்தில் அக்னஸ் மதபோதனையினாலும் சேவைகளாலும் ஈர்க்கப்பட்டு பன்னிரண்டு வயதில் இறைபணியில் தன்னை அர்ப்பணிப்பதற்குத் தீர்மானித்தார்.
1929 ஆம் வருடம் அவர் இந்தியா சென்று, டார்லிங்கில் தனது கன்னியர் மட பயிற்சியை ஆரம்பித்தார். மே 24,1931 இல் வாக்குத்தத்தம் எடுத்துக் கொண்டு அருட்சகோதரியானார். மத போதகர்களின் காவல் புனிதரான தெரேசா டி லிசியுவின் பெயரைத் தனக்குத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.கிழக்குக் கொல்கத்தாவின் லொரேட்டோ கன்னிமடப் பள்ளியில் தனது இறைபணியை ஆரம்பித்தார்.
1950 ஆம் ஆண்டு அன்னை திரேசாவின் தலைமையில் மிஷனரி ஒப் செரிட்டி இல்லம் ஸ்தாபிக்கப்பட்டது.தூய்மையான பணிக்கு எடுத்துக் காட்டாக நீல நிறக்கரையுடன் கூடிய வெள்ளை கைத்தறிச் சேலையை அணிந்தார்.
அன்னையுடன் முதன் முறையாக இணைந்து கொண்ட சுபாஷினிக்கு தனது இயற்பெயரைச் சூட்டினார். இவரது பணிக்குத் தலைவணங்கிய பிரிட்டிஷ் மகாராணி 1980 ஆம் ஆண்டு கௌரவ விருது வழங்கிக் கௌரவைத்தார்.1997 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பில் கிளிண்டன் கௌரவ பிரஜா உரிமை வழங்கினார்.
1997 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் அன்னை தெரெசா இறைவனடிசேர்ந்தார்.
அவரது மறைவையடுத்து சகோதரி நிர்மலா மிஷனரி ஒப் செரிட்டியின் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அன்னை இவ்வுலகை விட்டு மறைந்தாலும், அவர் உலக மாந்தர் மனங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்.
அன்னைக்குப் புனித பட்டம் அளிக்கும் அந்நன்னாளை முழு உலகும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. அதற்கான இறை ஆசீரை வேண்டிப் பிரார்த்திப்போம்
நமக்கெல்லாம் பூக்களின் மணம் என்றால் பிடிக்குமல்லவா?
இயற்கை மணத்தை அள்ளித் தருவதில் பூக்களுக்குத்தான் முன்னுரிமை என்பதில் யாருக்கும் ஐயமில்லை. ஆனால் இவற்றுக்கும் கூட மணம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காரணம் யார் தெரியுமா?
நாம்தான். நாம் பயன்படுத்தும் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை தான் மலர்களின் மணத்தைக் கபளீகரம் செய்து விடுவதாக ஆய்வொன்று கூறுகிறது.
காற்றுமாசின் விளைவாக இயற்கைச் சூழல் மாசடைவது நாம் அறிந்ததே. இது தொடர்பான ஆய்வில், வாகனப் புகை, பூக்களின் இயல்பான நறுமணத்தைச் சிதைத்து விடுகிறது என்ற வேதனையான தகவல் தெரிய வந்திருக்கிறது.
இதனால் நமக்கென்ன பிரச்சினை என்கிறீர்களா?
முதலில் தேன் குடிக்கும் வண்டுகளுக்கும், வண்ணத்துப் பூச்சிகளுக்கும் தேனீக்களுக்கும் திண்டாட்டம். பூச்சிகள் பூக்களிலிருந்து தேன் அருந்துவது இரண்டாம் காரணம்தான்.
வாகனப் புகையால் பாதிப்பு
மலர்கள் மணம் பரப்பி விளம்பரம் செய்வதே, மகரந்தச் சேர்க்கை செய்யும் பொருட்டு தேனீக்கள், வண் ணத்துப்பூச்சிகளைத் தன்னை நோக்கி ஈர்ப்பதற்காகத்தான். வாகனப்புகையால், பூக்களின் மணம் குறைந்தால் மலர்களின் இருப்பிடம் தெரியாமல், பூச்சிகள் திணறித் திண்டாடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் ஜோஸ் ஃபியுயென்டாஸ் எனும் ஆராய்ச்சியாளரின் தலைமையில் உள்ள குழு, இந்தத் தகவலை கண்டறிந்தது.
அதிகமான காற்று மாசில்லாத சூழலில், பூக்களிலிருந்து வெளியேறும் மணம் சுமார் 1000-1200 மீட்டர் (சுமார் 1-1/4 கி.மீ) தூரம் வரை பயணிக்கும். ஆனால் காற்றில் வாகனப்புகை கலந்து படிந்த நிலையில் மலர்களின் மணம் சுமார் 200 மீட்டர் தூரம்வரை கூட எட்டாதென அந்தத் தகவலில் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
"பூக்களின் நறுமணத்தைப் பரப்பும் மூலக்கூறுகள், வாகனப் புகையால் உண்டாகும் ஓசோன், நைட்ரேட் போன்ற நச்சுப் பொருட்களுடன் உடனடியாகக் கலந்துவிடுகின்றன. இதனால் மலர்களின் மணம் அழிந்து விடு கிறது" என்கிறார் ஜோஸ் ஃபியு யென்டாஸ்.
காற்றில் வாகனப்புகை கலப்பால், பூக்கள் மணம் பரப்பாத நிலையில், பூக்களின் தேன் மற்றும் மகரந்தத்தை உண்டு வாழும் தேனீ மற்றும் வண்டுகளின் உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
இதனால் பூக்களின் இனப்பெருக்கம் தடைபடுகிறது. சிறு உயிரினங்கள் தங்களின் இனப்பெருக்கத்தன்மை இழக்கும் அபாய நிலை நம் முன்னே காத்திருக்கிறது.
உலகில் நாம் உட்கொள்ளும் உணவிலுள்ள காய்கறிகள், பழங்கள் போன்றவை. அனைத்தும் பூக்கள் மகரந்தச் சேர்க்கை செய்வதால்தான் நமக்கு கிடைக்கின்றன.
சூழல் மாசுபடுவதால் தாவரங்கள் அழியும் வாய்ப்பும், பூச்சிகளுக்கும் நமக்கும் உணவுப் பிரச்சினையும் ஏற்படும் என்ற அச்சமூட்டும் உண்மைகளும் நம்மை விழிப்படைய வைத்துள்ளன.
இதனடிப்படையில், அனைத்து உயிரினங்களும் இயல்பு வாழ்வை இழந்து தவிக்கின்றன என்பது மட்டும் உறுதி.
இதனைத் தடுக்கும் பொறுப்பு மனிதராகிய நம் கரங்களில் தான் உள்ளது என்பதில் தவறில்லை அல்லவா?
இலங்கையில் தற்போது போதைப் பொருள் பாவனையின் வீதம் அதிகரித்தவண்ணமே உள்ளது. போதைப் பொருளை தடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்படினும் பல்வேறு சட்டங்கள் இருப்பினும் அதனை முற்றாக ஒழித்துக்கட்ட முடியாதுள்ளது.
அதேவேளை பாடசாலை மாணவர்களும் இப் போதை பாவனைக்கு அடிமையாகியுள்ளனர். இதன் வீதம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
கொழும்பு நகரில் மாத்திரமல்லாது அதிகளவில் பொலன்னறுவை மாவட்டத்திலும் பாடசாலை மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகயுள்ளமை தெரிய வந்துள்ளது.
பொலன்னறுவயில் கடந்த 17ஆம் திகதி 3 மாணவர்கள் பாடசாலை சீருடையுடன் போதைப் பொருளை வைத்திருந்தார்கள் என்பதன் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு பாடசாலை செல்லும் இளம் வயது சிறார்கள் சிகரட் மற்றும் போதை ஏற்படுத்தும் பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.
இளம் வயதினரில் 13 தொடக்கம் 20 வயதிற்கிடைப்பட்ட மாணவர்கள் பலர் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் என போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தெரிவிக்கின்றது.
இவ்வாறு இளம் வயதினர் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாவதற்கு அவர்களின் நண்பர்களே முக்கிய காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இவ்வாறானவர்களில் 88.2 வீதமானவர்கள் நண்பர்கள் மூலமும் 10 வீதமானவர்கள் உறவினர்கள் மூலமும் 1.8 வீதமானவர்கள் உல்லாசப் பயணிகள் மூலமும் போதைக்கு அடிமையாகின்றனர்.
நாட்டின் எதிர்காலம் வளரும் சமுதாயத்தின் கரங்களில் உண்டு என்பார்கள். ஆனால் இவ்வாறான நிலைமை தொடருமானால் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதில் சந்தேகமில்லை.
ஆதலால் இளம் மாணவர்கள் போதைக்கு அடிமையாவது தடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். இதற்கான பொறுப்பு எம் அனைவரையுமே சாரும் என்பதால் அனைவருடைய ஒத்துழைப்புடனும் சமுதாயத்தைக் காப்போம்.
பேராதனைப் பூங்காவில் தனிச்சிங்கள மொழியிலான அறிவித்தலால் வெளிநாட்டு சுற்றுலாத்துறையினரும் சிங்கள மொழி தெரியாதவர்களும் எதிர்நோக்கும் ஓர் ஆபத்து பற்றிய செய்தி பரவலாகப் பேசப்படுகிறது.
தூரியான் மரத்தின் கீழ் யானை கூடச் செல்லாது என்று எம் முன்னோர்கள் கூறுவர்.
இப்போது தூரியான் பழம் காய்த்துள்ள காலம். யானைகள் நிச்சயமாக பேராதனை தாவரவியற் பூங்காவில் அதி உயர்ந்த தூரியான் மரத்திற்குக் கீழ் நடந்து செல்லும் சாத்தியம் இல்லை. எனினும், மனிதர் செல்லக் கூடிய வாய்ப்பு இருக்கின்றதல்லவா?
விடயம் தெரியாத, அறிவித்தலை விளங்கிக் கொள்ள முடியாத, உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப்பயணிகள் அணியணியாக தூரியான் மரத்தை அண்டிய பகுதிக்குச் செல்கின்றனர்.
தவறுதலாக ஒரு பழம், எவரது தலையிலாவது விழுந்தால்.....? உயிர் ஆபத்து கூட ஏற்படும் சாத்தியமுள்ளது.
ஆபத்து விளைவிக்கும் ஒரு மரத்தின் கீழ் தனிச் சிங்களத்தில் மட்டும், 'தூரியான் மரத்திற்குக் கீழாகச் செல்ல வேண்டாம்' என அறிவித்தல் பலகை வைக்கப்பட்டிருப்பது சரிதானா?
சிங்களம் வாசிக்கத் தெரியாத வெளிநாட்டவர் மட்டுமல்லாது தமிழ் மக்களும் கூட இந்த ஆபத்துக்கு உள்ளாக நேரிடுகிறதே?
இன,மொழி சமத்துவம் பற்றி எந்நேரமும் பேசிக் கொண்டிருக்கும் எம் சகோதர மொழி 'பெரியவர்கள்' கூட, இவ்வாறு அம்மரத்தைக் கடந்து தான் செல்கின்றனர். அறிவித்தல் பலகையைப் பார்க்கத்தான் செய்கின்றனர்.
ஆனால், "இதென்ன, சிங்களத்தில் மட்டும் இந்த அறிவித்தல் வைக்கப்பட்டிருக்கின்றது, தமிழ், ஆங்கில மொழிகளில் இல்லையே...." என்ற சிந்தனை அவர்களுக்கும் வரவில்லையே? ஏன்...?
தம்மவர் மட்டும் உயிர் பிழைத்தால் போதும், மற்றவர் எக்கேடு கெட்டால் என்ன என்ற தன்னலப் போக்குத்தான் அவர்கள் கண்களை மறைத்து விட்டதோ என்று கூட எண்ணத் தோன்றுகின்றது.
அறிவித்தலை வாசித்துப் புரிந்து கொள்ள முடியுமாயின், அல்லது யாராவது அருகிலிருந்து எச்சரிப்பார்களாயின் உயிராபத்தைத் தவிர்க்கலாமல்லவா?
எந்த ஓர் ஆபத்தும் ஏற்பட முன் காப்பதே வேண்டற்பாலது. ஆபத்து நேர்ந்த பின் அங்கலாய்ப்பதில் அர்த்தம் இல்லை.
எனவே சம்பந்தப்பட்டோர் இது விடயத்தில் கூடிய கவனம் எடுத்து, விரைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடலில் 23 ஆணிகளுடன் சவூதியிலிருந்து நாடுதிரும்பிய பணிப்பெண் தொடர்பாக விசாரணை நடத்தப்படவுள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பணிப்பாளர் கிங்ஸ்லி ரணவக்கவை மேற்கோள் காட்டி ஆங்கில இணையத்தளமொன்றில் நேற்று முன்தினம் வெளியாகியிருந்த செய்தி பலருக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்திருக்கும்.
ஆனால் கடந்த வாரம் கொழும்பு நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பங்கெடுத்த செய்தியாளர்களுக்கு அதைவிடவும் அதிர்ச்சியான செய்தியை கேட்கக்கூடியதாக இருந்தது.
இலங்கை போன்ற ஆசியநாடுகளிலே கலாசாரத்தை பேணிப்பாதுகாக்கின்ற பெண்கள் எல்லாவற்றிலும் மேலானதாக தமது மானத்தை போற்றுகின்ற நிலையில் அந்த செய்தியாளர் மாநாட்டில் பேசிய நிலந்தி என்ற பெண்ணோ"கெட்டுப்போன பொருட்களைக் குறித்து யாருமே அலட்டிக் கொள்வதில்லை சொர்க்கபுரிக்கு போவதாக தான் ஆசைகாட்டி அனுப்புகிறாங்க ஆனால் அங்கு போனதும் தான் அது நரகம் என்று தெரியுது'' என்று ஊடகவியலாளர்கள் முன்பாக வெளிப்படையாக பேசியபோது அங்கிருந்தவர்கள் ஒருகணம் அதிர்ந்துபோயினர் .
சவூதி அரேபியாவில் சொல்லோணா இன்னல்களை அனுபவித்து அண்மையில் நாடுதிரும்பியிருந்த பணிப்பெண்ணான இவர் தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட கொடுøமகளை மானம் காக்க வேண்டும் என தனக்குள்ளே மறைத்துக்கொள்ளாமல் தன்னைப்போல் வேதனைகளுக்கும் கொடுமைகளுக்கும் முகங்கொடுத்துள்ள ஏனைய பெண்கள் காப்பாற்றப்படவேண்டும் என்ற பிறர்நல சிந்தையுடன் துணிகரமாக பேசியதை பாராட்டியே ஆகவேண்டும் தமது குடும்பங்களை பொருளாதார ரீதியில் முன்னேற்ற வேண்டும் சீதனம் தேடவேண்டும் கல்விக்கு உதவவேண்டும் வறுமை நிலையைப் போக்க வேண்டும் போன்ற பல்வேறு காரணங்களுக்காக புதிதாக திருமணமான பெண்கள் பிள்ளைகளுள்ள தாய்மார்கள் திருமணமாகாத பெண்கள் திருமணமாகி கணவர்மாரை இழந்தவர்கள் கணவர்களால் கைவிடப்பட்டவர்கள் என வருடாந்தம் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இலங்கையில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்கின்றனர் .
மத்திய வங்கியின் 2009ஆம் ஆண்டு அறிக்கையின் பிரகாரம் 18 இலட்சம் இலங்கையர்கள் தொழிலின் நிமித்தமாக வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர், 2009இல் இவர்களால் 3330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நியச்செலாவணி கிடைத்துள்ளது. குறித்த ஆண்டில் 247இல் 119பேர் தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தனர் இதில் 90வீதமானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றிருந்தனர். இதில் பெரும்பான்மையானவர்கள் பணிப்பெண்கள் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
கடந்த வருடத்தில் மாத்திரம் இலங்கையில் இருந்த சென்ற பணிப்பெண்களின் எண்ணிக்கை 113,777 என்பதுடன் இதில் சவூதி அரேபியாவிற்கு சென்றவர்களின் எண்ணிக்கை 77,827 ஆகும் சுமார் நான்கரை லட்சம் இலங்கைப் பணிப்பெண்களுள்ள சவூதிஅரேபியாவில்,அனைத்துப்பணிப்பெண்களின் நிøலயும் கவலைக் கிடமாக உள்ளதான தோற்றப்பாடே கடந்த வாரம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துவெளியிட்ட பெண்களின் கண்ணீர் கதைகள் உணர்த்தி நின்றன ஒலய்யா முகாம் உண்மையென்ன?
பணிப்பெண்களாக செல்லுகின்ற இல்லங்களில் பாலியல்ரீதியான துன்புறுத்தல் உடல்ரீதியான சித்திரவதைகள் உறுதியளிக்கப்பட்ட சம்பளம் வழங்காமல் ஏமாற்றுதல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக அந்த இல்லங்களில் இருந்து உரிமையாளர்களுக்கு தெரியாமல் வெளியேறி சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்திலுள்ள இலங்கை தூதுவராலயத்தில் அடைக்கலம் புகுகின்றவர்கள் அங்கிருந்து "ஒலய்யா' முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர் இந்த ஒலய்யா முகாம் பற்றி அங்கிருந்து திரும்பிய பஸீனா என்பவர் கூறுகையில்:
"அந்த ஒலய்யா முகாம் முன்னர் ஆடைத்தொழிற்சாலையாக இருந்ததாம் அங்கு வேலைசெய்தவர்கள் சம்பள உயர்வுகோரி ஆர்ப்பாட்டம் செய்ததற்காக உரிமையாளர் அவர்களை படுகொலை செய்து அங்கேயே புதைத்து விட்டதாக கூறுகின்றனர் வெட்டிப்போடுறது பேய்பிடித்து ஆடுறது எல்லாம் இருக்கு பிணப்பெட்டி எல்லாம் அங்கதான் இருக்கு.
அதனாலதான் அதிகமானவர்கள் நோயில் விழுகின்றாங்க அங்க பனடோலுக்கு கூட வழியில்ல யாரும் பனடோல் ஒன்றுகூட தரமாட் டாங்க மருந்து கொடுக்க வருவாங்க அவங்க கொடுக்கிற மருந்திற்கு சிலருக்கு மூளையெல்லாம் ஒருமாதிரியாகும் அப்படியொரு மருந்து கொடுப்பாங்க நோயென்றா நம்பமாட்டாங்க ஒலேய்யா முகாமிற்கு கிழமைக்கு ஒருநாள் நேரத்திற்கு வருவாங்க அந்த மருந்து எடுக்கின்றதற்கு மிகவும் கஷ்டப்படவேண்டும்.
அந்த மருந்து எடுத்தா அவங்க முன்னுக்கே குடிக்கவேண்டும் சிலவங்களுக்கு சாப்பாடில்லாம குடிக்க முடியாது கத்துவாங்க கஸ்டத்திலதான் அங்கு வாழ்ந்தநான். நீங்க போய்பார்த்த தான் நாங்க சொல்கின்றத நீங்க நம்புவீங்க .சாப்பாடு பச்சைக் கோழி இரத்தம் சொட்டச்சொட்ட இருக்கும் அதை பொரித்து தருவாங்க மீன் பச்சையா இருக்கும் பட்டினி இருந்து சாகிறதைவிட அதை வீசாம தின்பாங்க.
இலங்கையைச் சேர்ந்தவர்கள் 350பேர் ஒருபக்கம் இருக்கின்றனர் மொத்தமாக பார்க்க போனால் இந்தோனேசியா பிலிப்பைன்ஸ், இந்தியா மொத்தமா 5000 கூட அங்க இருக்கும் அவ்வளவு பெரிய முகாம்.
மலசல கூடம் அப்படியே நிறைந்திருக்கும் வரிசையில் நின்று தான் குளிக்க வேண்டும் நாங்கள் இருக்கும் மாடியில் தண்ணீரை நிப்பாட்டிட்டாங்க கீழ இருந்து நாங்க இருக்கிற இரண்டாம் மாடிக்கு தண்ணீரைக் கொண்டு போக வேண்டும்.
யாரும் கீழ இறங்க மாட்டாங்க தனியப் போனால் விடிய எழும்பமாட்டாங்க அவங்க பேய்பிடித்து அந்த இடத்திலேயே விழுந்திடுவார்கள்“ அங்க சவூதி ஆட்கள் தான் இருக்கின்றனர் இலங்கையை சேர்ந்த யாரும் இல்ல யாரும் வரமாட்டாங்க' திடீரென புயல் அடித்து ஓய்ந்தமாதிரி அந்தப்பெண்மணி தனது ஆதங்கங்களை கொட்டித்தீர்த்துவிட்டார்.
இந்த ஒலய்யா முகாமிற்கு அனுப்பாமல் சவூதி இல்லங்களிலிருந்து தப்பியோடி வருகின்ற பணிப்பெண்களை ரியாத்திலுள்ள இலங்கைத் தூதுவராலயத்திற்கு சொந்தமான பாதுகாப்பு இல்லத்திலேயே வைத்துப் பராமரிப்பதற்கு ஏன் முடியாது என மத்திய கிழக்கில் துன்பங்களுக்குள்ளாகும் வீட்டுப்பணிப் பெண்கள் சார்பாக குரல் கொடுக்கும் நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க கேள்வியெழுப்புகின்றார்.
வீட்டு உரிமையாளராலும் அவரது நண்பர்களாலும் உடல்ரீதியாக மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் வீட்டுப்பணிப்பெண்கள் ஒலய்யா முகாமிற்கு அனுப்பிவைக்கப்படுகின்ற போது வீட்டு உரிமையாளர் கோருகின்ற பட்சத்தில் மீண்டும் அவருடனேயே பாதிக்கப்பட்ட பணிப்பெண் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது இதனால் மீண்டும் மீண்டும் அவர்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடுகின்றது என ரஞ்சன் ராமநாயக்க எம்.பி. சுட்டிக்காட்டுகின்றார்.
(இவர் தான் நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்றிருந்த ஊடகவியலாளர் மாநாட்டை ஏற்பாடுசெய்திருந்தவர் )இதுதொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் கிங்ஸ்லி ரணவக்கவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது " இவர்கள் கூறுவதெல்லாம் முற்றுமுழுதாக பொய்யான விடயங்கள்.
சவூதியிலுள்ள இல்லங்களில் இருந்து பணிப்பெண்கள் தப்பியோடி அங்குள்ள இலங்கைத்துõதுவராலயத்தை வந்தடையும் போது நாம் அங்குள்ள பாதுகாப்பு இல்லத்தில் வைத்து சில வாரகாலங்கள் பராமரிக்கின்றோம்.
அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குகின்றோம். ஆனபோதிலும் பணிப்பெண்கள் தப்பி வரும் போது அவர்கள் தம்வசமுள்ள கடவுச்சீட்டை விட்டுவரவேண்டியுள்ளது இதன்காரணமாக அவர்கள் நாடுதிரும்புவதற்கு தேவையான தற்காலிமாக வெளிச்செல்வதற்கான அனுமதிப்பத்தி ரத்தை பெற்றுக்கொள்வதற்காகவே ஒல ய்யா முகாமிற்கு அனுப்பிவைக்கப்ப டுகின்றனர் ஒலய்யா என்பது சித்திரவதை முகாமல்ல மாறாக அது தற்காலிக வெளிச் செல்லும் அனுமதிப்பத்திரத்தை பெறும் வரையில் தங்கியிருப்பதற்கான இடைத் தங்கல் நிலையமே' எனத் தெரிவித்தார் ஒலய்யா முகாமில் தற்போது 350 இலங்கைப்பணிப்பெண்கள் உரிய வசதிகளின்றி யும் மீண்டும் துன்புறுத்தலுக்கு உட்படலாம் என்ற அச்சத்துடனும் உள்ளனர் இவர்களை துரிதமாக மீண்டும் இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் உரிய தரப்பினர் போதிய அக்கறை காண்பிக்கவில்லை என அண்மையில் நாடுதிரும்பிய வீட்டுப்பணிப்பெண்கள் சுமத்ததும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கருத்துவெளியிட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பணிப்பாளர் கிங்ஸ்லி ரணவக்க "தற்போது சவூதி அரேபியாவில் நோன்புக்காலமென்பதால் விமான டிக்கற்றுக்களை பெற்றுக்கொள்வது கஷ்டமாக உள்ளது ஆனால் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் நாம் 386 பணிப்பெண்களை மீளழைத்து வந்துள்ளோம்.வழமையாக அங்கிருந்து வருகின்ற விமானங்களில் ஆசனங்கள் இல்லாத காரணத்தால் மிஹின் லங்காவிற்கு சொந்தமான இரண்டு விமானங்களை விசேடமாக அனுப்பி அவர்களை அழைத்துவந்தோம் இதற்காக எமது பணியகம் 8.37மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது' எனச் சுட்டிக்காட்டினார்
வருடாந்தம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப்பணிப்பெண்களாக செல்கின்றவர்களில் 15 தொடக்கம் 20வீதமானவர்கள் துன்புறுத்தல்கள் துஷ்பிரயோகத்திற்குள்ளாதல் சம்பளம் வழங்கப்படாமை இன்னும் பல காரணங்களின் நிமித்தமாக தமது ஒப்பந்தகாலம் நிறைவடையும் முன்பாகவே நாடுதிரும்பும் நிலை ஏற்படுகின்றது 2003ஆம் ஆண்டில் கொழும்பு பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டிருந்த ஆய்வொன்றில் வீட்டுப்பணிப்பெண்களாக செல்கின்றவர்களில் நான்கில் ஒருவர் துஷ்பிரயோகம் அன்றேல் சம்பளம் வழங்கப்படாமை போன்ற காரணங்களால் பிரச்சனைகளுக்கு உள்ளாக நேரிடுகின்றது எனத்தெரிவிக்கப்படுகின்றது எனினும் இந்த நிலையில் தொழிலாளர்களது உரிமைகளைக் குறித்தோ அவர்கள் எதிர்கொள்கின்ற துன்பங்கள் குறித்தோ மத்திய கிழக்கு நாடுகளிடம் கடுந்தொனியில் கூறமுடியாத நிலைமை காணப்படுகின்றது பாரிய வேலையில்லா பிரச்சினை நிலவுகின்ற இலங்கை போன்ற வளர்முக நாடுகளிலுள்ள அரசாங்கங்க ளுக்கு வெளிநாடுகளில் தொழில்புரிகின்ற வர்களே அதிக சதவீதமான வெளிநாட்டுச் செலாவணியை சம்பாதித்துக்கொடுக்கின்றனர்.
வீட்டுப்பணிப்பெண்களின் உரிமைகளை உரியவகையில் உறுதிசெய்யாவிட்டால் நாங்கள் எமது நாட்டிலிருந்து வீட்டுப்பணிப்பெண்களை அனுப்பமாட்டோம் என அழுத்திக்கூறுகின்ற நிலைமை யதார்த்த ரீதியில் காணப்படவில்லை என்பதே உண்மையானது.பிலிப்பைன்ஸ் இந்தோனேசியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து வருடந்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் மிகவும் குறைந்த ஊதியத்துடனே மத்திய கிழக்கிற்கு படையெடுக்கின்றநிலையில் உரிமைகள் குறித்து உரக்கப் பேசினால் இலங்கையருக்கு கிடைக்கும் தொழில் வாய்ப்பு கள் இல்லாமல் போய்விடலாம் என் அச்சமும் இதற்கு காரணமாக இருக்கின்றது
புஷ்பா, பஸீனா போன்று தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து பகிரங்கமாக குரல்“கொடுப்பது இலங்கையைப் போன்ற நாடுகளில் மிகவும் அரிதானவிடயம் இப்படியாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக குறிப்பிட்டால் ஏனையோரை விடவும் தமது குடும்பத்திலுள்ளவர்களிடமிருந்தும் சமூகத்தில் இருந்தும் ஓரங்கட்டப்படலாம் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகலாம் என்ற நியாயமான அச்சமும் இதற்கு காரணமாகும்.
இதன்காரணமாகவே இவர்களில் பெரும்பாலானவர்கள் தமக்கு நேர்ந்த இன்னல்களை வேதனைகளை வெளியில் சொல்லாமல் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ளவேண்டும் சகித்து வாழவேண்டும் என்ற கீழைத்தேய சிந்தனையின் பிரகாரம் தமது குடும்பத்தவர்களின் மானம் மரியாதை எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அமைதியாகவே இருந்துவிடுகின்றனர்.
வீட்டுப்பணிப்பெண்களை மத்திய கிழக்கிலுள்ளவர்கள் மனிதர்களாகவே மதிப்பதில்லை மிருகங்கள் போன்றே நடத்துகின்றனர் அவர்களுக்கு மனித கௌரவம் என்பது அங்கு கிடையாது என செய்தியாளர் மாநாட்டை ஏற்பாடுசெய்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கூறியது ஒரு வேளை உண்மை நிலையைக்கு மாறானதாக இருந்தாலும் சவுதியரேபியாவில் இருந்து இன்னல்களை அனுபவித்து திரும்பிய பஷீனா கூறிய விடயம் யதார்த்தமானதாக காணப்பட்டது.
"இந்த மாதிரி ஊர்களுக்கு யாரையும் அனுப்பாதிங்க எல்லா அராபியும் கெட்டவங்க என்று சொல்லவில்லை அவர்களில் நல்லவங்களும் இருக்கின்றாங்க கெட்டவங்களும் இருக்கின்றாங்க ஆனாலும்அந்தமாதிரி ஊர்களுக்கு போகாமா இங்கயே ஏதாவது வேலை செய்துகொண்டிருக்கின்றதென்றா மிகவும் நல்லது'
கூகுள் முகப்பு பக்கத்தில் உள்ள லோகோக்கள் அடிக்கடி மாறுவதை பார்த்திருப்பீர்கள்.அடிக்கடி மாறும் லோகோக்களைக் கொண்டே இன்றைய விசேட தினம் , விசேட நிகழ்வு என்ன என்பதை அறிந்து கொள்கின்றோம் அல்லவா?
இந்த லோகோக்களை உருவாக்கியவர் யார் என்று நம்மில் ஒருவராவது தேடிப் பார்த்திருப்போமா? அல்லது அறியத்தான் ஆவல் கொண்டிருப்போமா? நீங்கள் இப்போது என்ன கூறுகின்றீர்கள் என்று புரிகிறது. சரி உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் என்கிறீர்கள் அல்லவா? உங்களது பொறுமையை சோதிக்க விரும்பவில்லை.
தினம் தினம் 18 கோடிக்கு மேற்பட்டவர்கள் வருகை தரும் இத்தளத்தை வரைபவர் டென்னிஸ் ஹவாங் என்ற 29 வயதுடைய இளைஞரே ஆவார். இந்த லோகோக்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இவரது முதல் லோகோ 2000 ஆம் ஆண்டிலேயே முதல் முதலாக வெளிவந்தது.
இந்த லோகோக்களுக்கு அருகில் மவுஸை கொண்டு செல்லும் போது அப்படத்திற்கான விளக்கம் கிடைக்கும்.
புவி தினமான ஏப்ரல் 22, 2010 கூகுள் முகப்பு.
2010 ஆம் ஆண்டிற்கான பனிக்கால ஒலிம்பிக்கிற்காக வரையப்பட்ட லோகோ
நேர்மன் ரொக்வெல்ஸின் பிறந்ததின நினைவாக பெப்ரவரி 3ஆம் திகதி வரையப்பட்டது. நேர்மன் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல வர்ணம் தீட்டுபவரும் சிறந்த இலஸ்டேடரும் ஆவார்.
இ.சி.செகரினின் பிறந்த தினமான டிசம்பர் 8 ஆம் திகதி கூகுள் முகப்பு பக்கத்தில் வந்த லோகோ. செகரின் அமெரிக்காவின் சிறந்த கார்டூனிஸ்ட்நவம்பர்; மாதம் 30, 2009ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்தின் சுதந்திர தினத்தன்று கூகுள் முகப்புப் பக்கத்தில் வந்த லோகோ ஆகும்.
நன்றி தெரிவிக்கும் தினத்திற்காக நவம்பர் 26, 2009ஆம் ஆண்டு கூகுள் முகப்பு
இந்தியாவின் சிறுவர் தினத்திற்காக நவம்பர் 14, 2009ஆம் ஆண்டு கூகுள் முகப்பு.
‘புளோரன்ஸ் நைட்டிங் கேர்ள்’ என அழைக்கப்படும் விளக்கேந்திய அன்னையின் பிறந்ததினமான மே 12, 2009 ஆம் ஆண்டு கூகுள் முகப்பு
லியானோடோ டாவின்சியின் பிறந்த தினத்திற்காக,
அதேபோன்று சில சுவாரஸ்யமான லோகோக்களும் உண்டு. இந்த லோகோவிற்கு கீழ் உள்ள இதயத்தை அழுத்தும் போது அதில் விளையாட்டுக்கள் இருக்கும
இவ்வாறே ஈஸ்டர் தினத்திற்காக உருவாக்கப்பட்ட லோகோவிலும் அதன் கீழ் உள்ள ஈஸ்டர் முட்டையை அழுத்தும் போது விளையாட்டுக்கள் வரும்.
இவ்வாறு கூகுள் முகப்பு பக்கத்தில் உள்ள லோகோக்கள் பல்வேறு தகவல்களை தாங்கி வருகின்றது.
அடடா இவ்வளவு விடயம் இதற்குள் ஒழிந்து கிடந்திருக்கின்றதே என நினைக்கின்றீர்களா?
இனிமேலாவது கூகுள் லோகோவை உற்று அவதானிக்கத் தொடங்குவோமா?
உலகப் புகழ்பெற்ற ஓவியமான மோனலிசா ஒவியத்தின் மயக்கும் புன்னகைக்கு காரணம் என்ன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து விட்டனர். மோனலிசா ஓவியத்தில் காணப்படும் புன்னகை உலக மக்களை இன்றும் ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறது.
மோனலிசா ஓவியத்தை நேரே பார்க்கும் போது அது புன்னகை செய்வதாக எமக்கு தென்படுவதில்லை, ஆனால் ஒரு பக்கத்தில் இருந்து அந்த ஓவியத்தை உற்று நோக்கினால் பார்ப்பவரை நோக்கி மோனலிசா புன்னகைப்பதாகத் தெரியும்.
இந்தத் தோற்றத்துக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், டாவின்சி எந்த வகையான நுணுக்கத்தைக் கையாண்டு இந்த ஓவியத்தை வரைந்திருப்பார் என்பதைக் கண்டறிய முடியவில்லை.
மோனலிசா ஓவியத்தின் மீது 'எக்ஸ்ரே' கதிர்கள் செலுத்தப்பட்டு ஆராயப்பட்டதில் சில உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன. டாவின்சி காலத்தில் மூன்று விதமான அடிப்படையில் ஓவியங்கள் வரையப்பட்டு வந்துள்ளதாகவும் அவற்றில் ஒன்றான 'புமாட்டோ', முறையைப் பயன்படுத்தியே டாவின்சி, மோனலிசாவின் புன்னகையை உருவாக்கியுள்ளார் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மேலும் மோனலிசாவின் இதழ்களின் மீது பல்வேறு வர்ணங்களை 40 அடுக்குகளாகப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புன்னகை இருக்கும் இடத்தில் மட்டும் டாவின்சி, தூரிகையைப் பயன்படுத்தாமல் தன் கைவிரல்களைப் பயன்படுத்தியுள்ளதும் 'எக்ஸ்ரே' ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
கற்றுத்தேர்ந்தவர்களோடு நாம் பழகினால், நாமும் பல விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். மேலும் நாம் கற்றதையும் மற்றவரோடு பகிர்ந்து கொள்ளலாம்.
இதற்கு இன்டர்நெட்டில் எங்கு செல்வது? நமக்கென ஒரு வலைமனை (Blog) அமைத்து வைத்தாலும், அனைவரும் வந்து படிப்பார்கள். சரியான கருத்துரைகளை (Comments) பதிவார்கள் என்பது என்ன உறுதி? இந்த குறையைப் போக்கும் வகையில், கற்றவர்கள் கலந்துரையாடி, தங்களுக்கு தெரிந்ததைப் பகிர்ந்து கொள்ள இணையத்தில் ஒரு தளம் உள்ளது. அதன் முகவரி www.wepapers.com. இது ஒரு கல்வியாளர்களின் சோஷியல் நெட்வொர்க் என்று சொல்லலாம்.
இதில், பெரும்பாலும் பல்கலை மற்றும் கல்லுõரி மாணவர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் இடம்பெறுகின்றனர். இதில் கலந்து கொள்வதன் மூலம் அதில் உள்ள அறிவு சார்ந்த கட்டுரைகளைப் படிக்கலாம். நமக்கு தெரிந்ததை இதில் பதிப்பிக்கலாம். ஆய்வுச் சுருக்கங்கள் (abstracts)கட்டுரைகள், உரைக்குறிப்புகள், ஆய்வுக்கட்டுரைகள் ஆகியவை இங்கு பெருமளவில் இடம்பெற்றுள்ளன.
இவற்றை வகைப்படுத்தி பட்டியலிட்டுள்ளனர். 40 வகைகளில் இவை கிடைக்கின்றன. உலகின் அனைத்து பொருட்களும் இதில் அடங்கும். இந்த கட்டுரைகள் பிளாஷ் தொழில்நுட்பத்தில் காட்டப்படுகின்றன. (யுட்யூப் மற்றும் பிற வீடியோ கிளிப்புகளைக் காட்டுவது போல) கட்டுரைகளில் சுருக்கம் அல்லது ஒரு சிறிய முன்னோட்டத்தினைப் பார்த்து, பின் அவற்றை டவுண்லோட் செய்திட வேண்டுமா என்பதனை முடிவு செய்து டவுண்லோட் செய்திடலாம்.
இந்த தளத்தின் இடது பக்கம் உள்ள பிரிவில், நாங்கள் விரும்பும் கட்டுரைகள் (Papers We Like) என்று ஒரு பட்டியலில், அப்போது பதியப்பட்ட சிறந்த ஏழு கட்டுரைகள் காட்டப்படுகின்றன. நீங்களாக ஒரு பொருள் குறித்து கட்டுரை ஒன்றை தேட வேண்டும் எனில், நடுப்பக்கத்திற்குச் செல்லலாம். இங்கு உள்ள Search கட்டத்தில் பொருள் குறித்த சொல்லை டைப் செய்து "எனி (any)' என்பதில் கிளிக் செய்தால் உடன் கட்டுரைகளின் பட்டியல் கிடைக்கும்.
நிச்சயமாக, நீங்கள் அதிசயப்படத்தக்க வகையில் தேடுவதற்கு கொடுத்த பொருள் குறித்த பல்வேறு கோணத்தில் கட்டுரைகளின் தலைப்பைக் காணலாம். நீங்கள் உங்கள் கட்டுரையை இதில் பதிய வேண்டுமா? இதில் பதிவு என்பது மிக மிக எளிமையானது. பெயர், கல்லூரி அல்லது பல்கலை முகவரி, மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக் கொடுத்து Capcha சோதனையை முடித்தால் போதும். பின்னர் sign up செய்து உள்ளே நுழையலாம். நீங்கள் ஒரு பொருள் கற்றுக்கொடுக்க எண்ணினால், கோர்ஸ் லீடர் என்ற பிரிவின் மூலம் செல்லலாம். அல்லது உங்கள் கட்டுரையை உங்கள் மாணவர்கள் அல்லது மற்ற ஆய்வாளர்களுடன் இணைந்து குழுவாக அமைத்திடலாம்.
கட்டுரைகளை அப்லோட் செய்வதும் மிக எளிதாக உள்ளது. அப்லோட் செய்த பின்னர், அந்த கட்டுரை குறித்த சுருக்க தகவல்களை நீங்கள் அதற்கான படிவத்தில் தர வேண்டும். கற்கும் மாணவர்களுக்கும், கற்றுக்கொடுக்க எண்ணும் பேராசிரியர்களுக்கும், ஆய்வு செய்து வரும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் ஒர் அருமையான இணையதளம் இது. இஸ்ரேல் நாட்டின் ஜெருசலம் நகரைச் சேர்ந்த Hanan Weiskopf மற்றும் Ehud Zamir என்ற இரு மாணவர்களால் இந்த தளம் தொடங்கப்பட்டு நடத்தப்படுகிறது. பல நாடுகளில் இருந்து இதற்கான நிதி உதவியாக வழங்கப்படுகிறது. இந்த தளத்தின் முகவரி.
பிரபல கணனி தயாரிப்பு நிறுவனமான ' ஏஸர் ' கணனி உலகில் புதிய மாற்றமொன்றை ஏற்படுத்தியுள்ளது.
கூகுளின் அண்ட்ரொயிட் மொபைல் சொப்ட்வெயார் எனப்படும் கையடக்கதொலைபேசிகள், டெப்லட் கணனிகளில் இயக்குதளங்களாக உபயோகிக்கப்படும் மென்பொருளை குயிக் பூடிங் இயக்குதளமாகவும் மைக்ரோசொப்டின் விண்டோஸ் எக்ஸ்பி யை பிரதான இயக்குதளமாகவும் மேற்படி நிறுவனம் பயன்படுத்தியுள்ளது.
இக்கணனி ' ஏஸர் எஸ்பயர் வன் எஒடி 255 'என இந்த நெட்புக் கணனிக்கு பெயரிடப்பட்டுள்ளது.
ஏஸர் கொன்பிகரேஸன் மெனேஜர் எனப்படும் ஏஸர் மென்பொருள் இயக்குதளங்களை கட்டுப்படுத்துகின்றது.
10.1 அங்குல திரையையும், இண்டெல் எட்டொம் என்450 மைக்ரோ புரோசெசரையும் கொண்டதாகும். 1 ஜீபி டீடீர் 2 ரெம்மையும் 160 ஜீபி வன்தட்டு எனப்படும் ஆர்ட் டிஸ்க்கையும் கொண்டுள்ளது.
இது 375 அமெரிக்கடொலர் வரை விலையிடப்படலாமென எதிர்பார்க்கப்படுவதுடன் சந்தைக்கு எப்போது விற்பனைக்கு வருமெனத் தெரிவிக்கப்படவில்லை.
பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக வலை பின்னல் தளங்களில் அதிக நேரம் விரயம் செய்யும் ஊழியர்களினால் பிரித்தானிய நிறுவனங்களுக்கு பில்லியனளவில் பணவிரயமேற்படுவதாக ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கின்றது.
பிரித்தானிய இணையத்தளமொன்று நடத்திய வாக்கெடுப்பு ஒன்றின் முடிவின்படி பிரித்தானியாவின் 34 மில்லியன் ஊழியப்படையில் 2 மில்லியன் பேர் 1 மணித்தியாலத்திற்கும் அதிகமான தங்களது வேலை நேரத்தை மேற்படி சமூக வலை பின்ணல் தளங்களில் செலவிடுவதாக அந்த இணையத்தளம் தெரிவிக்கின்றது. இது மொத்த வேலை நேரத்தில் 8 இல் 1 பங்காகும்.
மேற்படி இணையதளத்தளத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியின் கருத்துப்படி ஐக்கிய இராச்சியத்தில் ஊழியர்கள் மிகவும் அதிக நேரத்தினை சமூக வலை பின்னல் தளங்களில் செலவிடுவதாகவும், இது நிறுவனங்களினால் கவனத்தில் கொள்ளப்படுவதில்லையெனவும் இது ஊழியர்களின் ஆக்கத்திறனில் மறைமுக பாதிப்பை எற்படுத்துவதாகவும் இதனால் நிறுவனங்கள் பல்வேறு நட்டங்களை சந்திப்பதாகவும் தெரிவித்தார்.
இத்தகைய செயற்பாட்டினால் நிறுவனங்களுக்கு 14 பில்லியன் பவுண்கள் வரை பணவிரயமேற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அவ்வாய்வறிக்கையின்படி பிரித்தானிய ஊழியர்களில் 55% வீதத்திற்கும் அதிகமானவர்கள் தாம் தமது வேலைநேரங்களின் மேற்படி தளங்களினை உபயோகிப்பதாக வெளிப்படையாகth தெரிவிப்பதாகவும் இதில் பலர் மிகவும் அதிக நேரம் செலவிடுவதாகவும் அவ் அறிக்கை தெரிவிக்கின்றது.
இப்புதிய சவாலனது நிறுவனங்களுக்கு பாரிய அடியென தெரிவிக்கப்படுகின்றது.
' கூகுள் மீ ' என்ற சமூக வலைப்பின்னல் தளமொன்றினை கூகுள் இரகசியமாக உருவாக்கி வருவது அனைவரும் அறிந்த விடயம்.
கூகுள் இது தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் தனது மற்றைய சேவைகளான 'ஜீ மெயில்' எனப்படும் மின்னஞ்சல் கணக்கு, கூகுள் பஸ் மற்றும் அதன் மற்றைய வெளியீடுகளை அடிப்படையாகக் கொண்டும் ' ஸ்லைட் ' மற்றும் ' சிங்கா ' ஆகியவற்றினை உபயோகப்படுத்தியும் தனது சமூக வலைப் பின்னல் தளத்தினை உருவாக்கி வருவதாகப் புதிய தகவல்கள் கசிந்துள்ளன.
' ஸ்லைட் ' நிறுவனமானது மற்றைய சமூக வலைப்பின்னல் தளங்களான ' மைஸ்பேஸ் ' மற்றும் 'பேஸ்புக்' ஆகியவற்றுக்கு மென் பொருட்களை உருவாக்கிய நிறுவனம்.
இந் நிறுவனத்தை கடந்த 4ஆம் திகதி கூகுள் விலைக்கு வாங்கியது.
மேலும் ' சிங்கா ' எனப்படும் ' மைஸ்பேஸ் ' மற்றும் 'பேஸ்புக்' ஆகியவற்றுக்கு இயங்குதளம் சார்ந்த விளையாட்டுக்களை உருவாக்கிய நிறுவனத்தில் கூகுள் 100 மில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கூகுளின் இத்தகைய நடவடிக்கைகளானது, பாவனையாளர்களுக்குப் புது வகையான அனுபவத்தினை தரும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இத்தளத்தில் கணினி விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கூகுளின் மற்றைய சேவைகளான கூகுள் 'எப்ஸ்', கூகுள் 'வொயிஸ்', கூகுள் 'ரீடர்' மற்றும் 'ஐ' கூகுள் போன்றவற்றின் பாவனையாளர்களைத் தனது கூகுள் 'மீ' தளத்திற்கான இலக்காக கூகுள் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே கூகுள் நிறுவனம் கூகுள் 'பஸ்', 'ஓர்குட்' ஆகிய சமூக வலைபின்னல் தளங்களை உருவாக்கி தோல்வி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
'பேஸ்புக்'கின் பிரமாண்ட வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் மற்றைய தளங்களின் எண்ணிக்கை என்பன கூகுளின் இன்னும் அறிவிக்கப்படாத கூகுள் 'மீ' தளத்தின் வெற்றிக்குப் பெரும் சவால்களாக விளங்குகின்றன.
உலகில் முதலாவது முப்பரிமாண கெமரா மற்றும் அச்சிடுதல் முறை இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பியூஜி பிலிம்ஸின் புதிய முப்பரிமாண முயற்சியாக இது அமைந்துள்ளது.
இந்தக் கெமரா மூலம் எடுக்கப்படும் புகைப்படத்தை உடனடியாக அல்பம் வடிவில் பார்க்க முடியும். இதில் காணப்படும் நவீன தொழில்நுட்பத்துடனான லென்ஸ் மனித கண்களின் பார்வை தூரத்தை விட மேலானது.
இது லெண்டிக்யூலர் தொழில்நுட்பம் என அழைக்கப்படுகிறது. இவ்வகையான தொழில்நுட்பம் 1940 களில் பாவிக்கப்பட்டாலும் பின்னர் நவீனப்படுத்தப்பட்டு தற்பொழுது முப்பரிமாண முறையில் அறிமுகமாகிறது. __