Tuesday, October 5, 2010

பலஸ்தீன பெண் முன்னால் இஸ்ரேலிய வீரர் ஆட்டம் : காணொளியில் பதிவு

துணியால் கண்கள் கட்டப்பட்ட பலஸ்தீன பெண் ஒருவரின் முன் இஸ்ரேலிய இராணுவ வீரர் ஒருவர் ஆடுவது போன்ற காணொளிக் காட்சியானது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இக்காணொளியில் பலஸ்தீன பெண் கைதி ஒருவர் சுவற்றில் ஒருபக்கம் சாய்ந்த வண்ணமுள்ளார். அப்பெண்ணைச் சுற்றி இஸ்ரேலிய இராணுவ வீரர் ஒருவர் நடனமாடுகிறார்.

அவரைச் உற்சாகப்படுத்தும் மற்றைய வீரர்களின் குரல்களும் அக்காணொளியில் ஒலிக்கின்றன. இதனை இஸ்ரேலிய ஊடகமொன்று அண்மையில் ஒளிபரப்பி இருந்தது.

மேற்படி காணொளி தொடர்பாக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிப்பதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் இஸ்ரேலிய இராணுவ வீராங்கனை ஒருவர் கைதிகளின் முன்னால் வேடிக்கைகளில் ஈடுபடுவது போன்றதான புகைப்படங்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்விடயங்கள் இஸ்ரேலிய இராணுவத்தின் ஒழுக்கம் மற்றும் பலஸ்தீன கைதிகள் தொடர்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிறந்த ஜோடி விருது பெற்றவர்கள் பிரிக்கப்பட்டார்கள்!


நான் நிஜ வாழ்கையில் போலியாக நடித்தாலும், திரை வாழ்க்கையில் நிஜமாக நடிக்கின்றேன். என இங்கிலாந்தின் புகழ்பெற்ற நடிகர் ஒருவர் கூறியிருப்பார். நிஜ வாழ்க்கையில் மாத்திரமல்ல, திரை வாழ்க்கையிலும் நிஜமாகவே வாழ்ந்த ஒரு காதல் ஜோடி சமீபத்தில் பிரிக்கப்பட்டிருக்கின்றனர்.
இவ்வாறு பிரிக்கப்பட்டதை எதிர்த்து மக்கள் போராடவும் கிளம்பியுள்ளார்கள். ஏனெனில் , திரையிலும் நிஜத்திலும் அவர்களது வாழ்க்கை இணைபிரியா அன்றில் பறவைகளுக்கு ஒப்பானது.
கேளிக்கைகளுக்கும், கிசுகிசுப்புக்களுக்கும், இணைவுகளுக்கும், பிரிவுகளுக்கும்,  பஞ்சமில்லாத இத்தாலிய திரையுலகமும், தொலைக்காட்சி உலகமும், விருதுகளாலும், கெளரவங்களாலும், புகழ்ந்து கொண்டாடிய ஜோடி,  ரெய்மெண்டோ வியன்னெலோ, சாண்ட்ரா மொண்டேய்.  அரை நூற்றாண்டு காலம் இணைபிரியாது வாழ்ந்ததோடு மட்டுமல்லாமல், இத்தாலி நாடு முழுவதையும் தங்கள் நடிப்பால், நகைச்சுவையால், சிரிக்க வைத்த இந்த ஜோடி, இன்று சரித்திரமாகி நிற்கின்றார்கள்.
ரெய்மெண்டோ , சாண்ட்ரா  இருவரும் 50 களில் புகழ்பெற்ற நடிகர்கள். 1958 இல் திரையில் சந்தித்து தான் நண்பர்களானார்கள். நட்பு காதலாகி, திருமண பந்தத்தில் இணைந்தது 1962 ல்.
52 வருடங்கள், திரையிலும் சரி, நிஜத்திலும் சரி ஒருவர் இல்லாமல் மற்றவரை நீங்கள் பார்க்க முடியாது. சேர்ந்தே நடித்தனர். சேர்ந்தே வெளியில் சுற்றினர். சேர்ந்தே இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். ஏன் சேர்ந்து தான் விருதுகளை கூட வாங்கினார்கள். எளிமையான நகைச்சுவை, இணைபிரியாவாழ்வு எனச் சுற்றிவந்த இந்த ஜோடியை, இத்தாலியத் திரையுலகும், சின்னத்திரையுலகும், இலட்சியத் தம்பதிகளாக கொண்டாடி மகிழ்ந்தது.

ஆனால் காலத்தின் விதியினால், கடந்த ஏப்ரல் 15, ரெய்மொண்டோ தனது 87வது வயதில், இத்தாலியின் மிலானோவில் வைத்து இறந்து போனார். சாண்ட்ரா துவண்டு போனார். ரெய்மொன்டோவின் பிரிவிற்காக அழுததிலும் பாரக்க, சாண்டராவின் சோகத்தினைக் கண்டு கண்ணீர் வடித்தது இத்தாலி. ஏப்ரல் 17 இல் மிலானோவில் உள்ள தேவாலயம் ஒன்றில் இறுதிக்கிரியைகள் நடந்தது. இத்தாலியின் அதிபர் பெர்லுஸ்கோனி தன் வீட்டுத் துயர் போலப் பங்கெடுத்துக் கொண்டார். ரெய்மொண்டோவின் உடலை, இறுதிப்பயணத்துக்கு அனுப்ப மறுத்துக் கதறியழுதார் சாண்ட்ரா.  எல்லோர் இதயங்களிலும் ரெய்மெண்டோ வாழ்கின்றார் என சாண்டராவுக்கு ஆறுதல் சொல்லி, அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி மரியாதை செய்து, இறுதியாத்திரைக்கு அனுப்பி வைத்தார்கள்.  தலைநகர் ரோமில் அவரது பூதவுடல் புதைக்கப்பட்டது.


ரெய்மெண்டோ இறந்து ஐந்து மாதகாலத்துக்குள் சாண்டராவும் கடந்த மாதம் காலமானார்.
ரெய்மொண்டோ வியனெலோ இறுதிக்கிரிகைகள் நடைபெற்ற அதே தேவாலயத்தில், சாண்ட்ராவின் இறுதிக்கிரிகைகள் நடைபெற்றது.அதே தேவாலயத்தில் நடந்தது. ஆனால் துரதிஷ்ட்டவசமாக குடும்ப வழக்கப்படி, அவரை மிலனோ லம்ப்ராட் மயானத்தில் புதைத்து விட்டார்கள். இந்த ஜோடி தத்தெடுத்து வளர்த்த இரு பிலிபபைன் நாட்டுப் பிள்ளைகள் இப்போது தனித்துப் போய்விட்டார்கள்.

வாழ்க்கையின் 2/3 பகுதியினை ஒன்றாகவே வாழ்ந்து முடித்த அவர்களை இறந்த பின்னர் ஒருவரை ரோமிலும், மற்றவரை மிலானோவிலுமென பிரித்து விடுவது நியாயமா எனக் ககவலை கொண்ட ரசிகர்கள்,  இதற்காக ஒரு கவனயீர்ப்பு போராட்டமே நடத்தியிருக்கிறார்கள்.  இவ்விடயம் இரண்டு வாரங்களாக இத்தாலிய பத்திரிகைகளை  நிறைத்துக் கொண்டிருந்தது.
மிலானோவின்   முக்கிய தெரு ஒன்றிற்கு ,  அக்காதல் ஜோடியின் பெயரை வைக்க அப்பிரதேசவாசிகள் பரிந்துரை செய்துள்ளனர். இப்போது சொல்லுங்கள். இவர்கள் காதல் ஜோடிகள். இவர்களுக்குச் சிறந்த ஜோடி விருது வழங்குவது என்பது, அந்த விருதுக்குப் பெருமை. வழங்கியவர்க்குப் பெருமை.

வருகிறது இராட்சத வான் கப்பல் - மனித குலத்திற்கு மற்றுமொரு நன்மை


திடீரென ஒரு கிராமத்தில் வெள்ளப்பெருக்கு, அல்லது மண்சரிவு ஏற்படின் உடனடியாக அங்கிருந்து கிராம மக்களை அப்புறப்படுத்த எப்படி முயற்சிப்பார்கள். சில ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்கள், மூலம் முழுக்கிராம மக்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல முடியும். ஆனால் அவை பலதடவை பயணிக்கவேண்டி வரும். சில சமயம் தரையிறங்க கூட வசதியிருக்காது.
இந்த சிக்கல்களை கருத்தில் கொண்டு அஸ்திரேலியாவின் ஸ்கை லிப்டிங் வர்த்தக நிறுவனம் ஒன்று புதிய வான்கப்பல் ஒன்றை உருவாக்கத் தொடங்கியுள்ளது. சுமார் 150 feet அகலம் (காற்பந்து மைதானத்தின் அளவு) கொண்ட ஒரு இராட்சத பலூன் தான் இந்த வான் கப்பல். ஸ்கை லிப்டர் என பெயரிடப்பட்டுள்ளது. 150 டொன் நிறையை, 1,200 மைல்களுக்கு தூக்கி கொண்டு செல்லும் திறன் படைத்ததாக உருவாக்கப்படுகிறது.
எந்தவசதியுமே இல்லாத ஒரு கிராமத்தில் திடீரென ஏற்படும் இயற்கனை அழிவிலிருந்து அம்மக்களை அப்படியே தூக்கி கொண்டு போய் இன்னுமொரு நகர்ப்புற மருத்துவமனையிலோ, பாதுகாப்பான இடத்திலோ  கொண்டு சேர்க்கும் வசதி இதனால் ஏற்படுகிறது.
வட்டவடிவ டிஸ்க்கை போன்று உருவாக்கப்படும் இப்பலூன்களை இலகுவாக ஓட்டிச்செல்வதற்கு ஏற்ப கியரிங் பொருத்தப்படவுள்ளது. எந்தவகையான காற்றழுத்தத்திற்கும் ஈடுகொடுத்து பறக்கும் வகையில் வடிவமைக்கபப்டவுள்ளது.
ஒரு கார்கோ ஹெலிகொப்டர் 700 தடவை பயணித்து கொண்டு செல்லும் பொருட்களை, ஒரே தடவையில் இந்த ஸ்கை லிப்ட்டரினால் கொண்டு செல்ல முடியும். சிறிய வடிவில் சாம்பிள் வடிவமைக்கப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இன்னும் மூன்று வருடத்தில் இராட்சத ஸ்கை லிப்டர் சந்தைக்கு வந்துவிடும் என்கிறார்கள் இதன் தொழில்நுட்பவியலாளர்கள். இயந்திர தொழில்நுட்ப வளர்ச்சியினால் மனித குலம் சந்திக்கவிருக்கும் மற்றுமொரு பாரிய நன்மையாக ஸ்கைலிப்ட்டர் இருக்கும் என நம்பப்படுகிறது.

மாரடைப்பு சிகிச்சையில் மகத்தான புரட்சி

மவுனமாக எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல், மரணத்தை வரவழைக்கும் வியாதி தான், மாரடைப்பு மரணம். நன்றாக உடற்பயிற்சி செய்பவர், புகை பிடிக்காமல், மிகவும் ஒழுக்கமாக உள்ளவருக்கு எப்படி மாரடைப்பு வந்தது என ஆச்சரியப்படுகிறோம்.
மூன்றில் இரண்டு பேருக்கு மாரடைப்பு, எந்த அறிகுறியும் இல்லாமல் வருகிறது. இது பல ஆண்டுகளாக கேட்கப்படும் கேள்வி. இந்த கேள்விக்கு இன்று பதில் கிடைத்து விட்டது.
மாரடைப்புக்கு காரணமான கரோனரி ரத்த குழாய் அடைப்பை அறிய, “ஐ-சென்சிடிவ் சி ரியாக்டிவ் புரோட்டின்’ என்ற பரிசோதனை, கனடாவில் கண்டுபிடிக்கப்பட்டு, அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், முப்பரிமாண ஸ்கேன்கள், சில நொடிகளில் படம் எடுத்து கரோனரி ரத்தக்குழாயின் 90 சதவீத அடைப்பை காட்டிவிடும். உலக அளவிலான இதய நோயாளிகளில் 60 சதவீதம் பேர், இந்தியாவில் உள்ளதாக உலக கருத்தரங்குகளில் கூறப்பட்டுள்ளது. இந்த 60 சதவீத இந்தியர்களில், 30 சதவீதம், 50 முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். மீதி 35 சதவீதத்தினர், 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். மூன்றில் ஒரு பங்கினர் வலி இல்லாமல், டாக்டர்களால் மருத்துவமனைக்கு அழைத்து செல்பவர்கள். ஒரு பகுதியினர், தாங்க முடியாத மார்பு வலி ஏற்பட்டு, மரணம் அடைகின்றனர். மார்புவலி கண்டவர், 60 முதல் 90 நிமிடங்களுக்குள், அனைத்து வசதிகளும் கொண்ட மூன்றாம் நிலை மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மூன்றாவது நிலை மருத்துவமனையில் கேத்லேப் வசதி மற்றும் பை-பாஸ் சர்ஜரி செய்ய வசதிகள் உண்டு. மாரடைப்பு கண்டவர்களுக்கு, சில பரிசோதனை முடிந்தவுடன், கேத்லேப் சென்று கை வழியே கரோனரி ஆஞ்சியோகிராம் செய்து, அடைப்பை கண்டுபிடித்து, உடனடியாக ஸ்டென்ட் சிகிச்சை அளித்து, 6 மணி நேரம் வைத்திருந்து, 8 மணிநேரத்திற்குப் பின் வீடு சென்று விடலாம். 24 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளித்து, வீட்டிற்கு அனுப்புவது மகத்தான புரட்சி.
பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்டி: இச்சிகிச்சை முறை முடிந்து, நோயாளி மூன்று நாட்களில் வேலைக்கு செல்லலாம். இதனால் ஏற்படும் நன்மைகள்: குழாய் அடைப்பால் ஏற்படும் இதய தசைகளின் சேதத்தைக் கட்டுப்படுத்தி, இதய வீக்கத்தை தடுக்கலாம். மாரடைப்பு ஏற்பட்ட 6 மணி நேரத்துக்குள்ளாக ரத்தக் குழாயிலுள்ள ரத்தக் கட்டியை ஊசி மூலம் கரைத்து விட வேண்டும். நீண்டநாட்களாக ரத்த அடைப்பை சரி செய்யாவிட்டால், இதயத்திற்கு ரத்தம் கிடைக்காமல் வீங்கி, இதயச் செயலிழப்பு ஏற்பட்டு விடும். பிறகு படுத்த படுக்கையாக நேரிடும். எனவே, உடனடியாக அடைப்பை நீக்க வேண்டும்.
இன்றுள்ள புதிய இதய பரிசோதனை கருவிகள்:
* 64 சி.டி., மற்றும் 124 சி.டி., ஆஞ்சியோகிராம். துல்லியமாக, கரோனரியில் ஏற்படும் சிறிய அடைப்பைக் கூட காட்டி விடும். இந்த வசதியால், பெரிய அடைப்பாக மாறுவதற்கு முன், சிகிச்சை பெற்று விடலாம்.
* இதய எம்.ஆர்.ஐ., ஸ்கேன். இதுவும் இதய பரிசோதனையின் மைல் கல்.
* பெட் ஸ்கேன்
* மலிவான கலர் பிப்ளர் பரிசோதனை
இது போன்ற பல உயிர் காக்கும் கருவிகள், இதய நோயாளிகளுக்கெனவே வந்துள்ளன. இவற்றை நம்பி, மூன்றாம் நிலை மருத்துவமனைகளை நாடிச் சென்றால், நிச்சயமாக உயிர் காத்துக் கொள்ளலாம்.

சுவிட்சர்லாந்து பாடகர் குழுவொன்று உலக சாதனை படைப்பதற்கு முயற்சி

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பாடகர் குழுவொன்று உலக சாதனையொன்றை படைப்பதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொரிபேர்க் கான்டனைச் சேர்ந்த இரண்டாயிரம் பாடகர்கள் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் மரபுப் பாடல்களில் ஒன்றான கவ் கோலிங் என்ற பாடல் பாடப்பட்டுள்ளது.
இந்தப் பாடல் முயற்சி தொடர்பான காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கிண்ணஸ் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே காணப்டுபடும் சாதனையை முறியடிப்பதற்காக தாம் இந்த முயற்சியை மேற்கொள்ளவில்லை எனவும், புதிய உலக சாதனையை ஒன்றை படைப்பதே தமது நோக்கம் எனவும் பாடகர் குழு அறிவித்துள்ளது.
மாடுகளிலிருந்து பால் கறப்பதற்காக இந்தப் பாடல் பயன்படுத்தப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

‘பாலியல் தொழில்’ தயாராக இருக்கிறது - கல்லூரிப் படிப்பை முடித்தவர்கள் அணுகலாம் : விபரீத விளம்பரம்

நெதர்லாந்தில் ஒரு விளம்பரம் விபரீதத்தை ஏற்படுத்தி விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. அங்குள்ள ஒரு இணையத் தளத்தில் அந்த விளம்பரம் வெளியாகி இருந்தது. ‘நீங்கள் கைநிறைய சம்பாதிக்க ‘பாலியல் தொழில்’ தயாராக இருக்கிறது.
புத்தம் புதிதாகக் கல்லூரிப் படிப்பை முடித்தவர்கள் அணுகலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்த மாணவர்கள் எக்கச்சக்கமாய் தொடர்புகொள்ள கல்லூரி நிறுவனங்கள் கொந்தளிப்பு அடைந்தன.
அந்த இணையத்தள அமைப்பினருக்கு எதிராகப் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் அந்த இணையத்தளமோ, ‘புதிய பணியாளர், தானாகவே விளம்பரம் தயார் செய்ததால் இந்த தவறு நடந்துவிட்டது’ என்று மழுப்பலான பதிலை அளித்துள்ளது.

3400 வருடங்கள் பழைமையான எகிப்திய பேரரசரின் சிலை மீட்பு

சுமார் 3400 வருடங்கள் பழைமை வாய்ந்த எகிப்திய பேரரசர் ஒருவரின் சிலையின் மேற்பகுதியை தொல்பொருளியல் ஆய்வாளர்கள் மீட்டுள்ளனர்.
இதனை எகிப்திய கலாசார அமைச்சு அறிவித்துள்ளது.
மூன்றாம் அமெனோடெப் மன்னரின் 4 அடி 3 அங்குலமான இச்சிலையானது கிரனைட் எனப்படும் கல்லினால் உருவாக்கப்பட்டது. இது எகிப்திய கலைச் சிறப்பைப் பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கிமு 1333 முதல் கிமு 1324 வரை எகிப்தினை ஆண்டதாக கூறப்படும் துட்டன்காமன் மன்னனின் பாட்டனாரே மூன்றாம் அமெனோடெப் மன்னராவார்.
வரலாற்றுத் தகவல்களின் படி மூன்றாம் அமெனோடெப் மன்னரே எகிப்தில் பாரிய திட்டங்களை முன்னெடுத்தவராகக் கருதபடுகின்றார்.
மேலும் இவரது காலத்திலேயே எகிப்து தேசம் செல்வச் செழிப்போடு காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தொல்பொருளியலாளர்கள் எகிப்தின் லக்ஸர் நகரத்தில் பெரிய கோவில் ஒன்றின் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஒல்லாந்தர் ஆட்சியின் சுவடுகள் கூறும் நூதனசாலை

  1656 ஆம் ஆண்டு கொழும்பு கைப்பற்றப்பட்டது முதல் ஒல்லாந்தர் வரலாறு இலங்கையுடன் பிணைப்புற்றுக் காணப்படுகிறது. 16561795 காலப்பகுதியில் இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சியின் கீழிருந்த பிரதேசங்களுக்கு இடையில் இருந்த தொடர்புகள், ஒத்த இயல்புகள், வேற்றுமைகள் என்பன கீழ்க்காணும் ஐந்து அம்சங்களின் கீழ் விளக்கப்பட்டு, தொல்பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. நிர்வாகம், இராணுவம், பொருளாதாரம், நாளாந்த வாழ்க்கை, சமயம், கல்வி என்பனவே அவையாகும்.

கொழும்பு 11, புறக்கோட்டை, குமாரவீதி (பிரின்ஸ் வீதி), மிகமுக்கியமான, மிகச்சுறுசுறுப்பு மிக்க வர்த்தக ஸ்தானம். தொலைபேசியில் கூட பேச முடியாதளவுக்கு வாகனங்களின் இரைச்சல்களும், வியாபாரிகளின் கூச்சல்களும் நிறைந்த சனநெருக்கடியான ஓரிடம். இருந்தும் 95 ஆம் இலக்கக் கட்டிடத்திற்குள் நுழைந்துவிட்டால், 318 வருடங்களின் பழமை பேசும் மகிமைமிக்க, முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழ்நிலை க்குள் நாம் அழைத்துச் செல்லப்பட்டு விடுகின்றோம். வெளியில் இருக்கும் இரைச்சல்களும் கூச்சல்களும் நமது காதுகளுக்கு கேட்பதில்லை. எந்தச் சுட்டெரிக்கும் வெய்யிலாக இருந்தாலும் குளுகுளு குளிர்மை இதற்குக் காரணம் இந்தக் கட்டடத்தின் கட்டுமான தொழில்நுட்பமே!

ஒல்லாந்தர் காலத்து நூதனசாலையாக இயங்கும் இக் கட்டடம் 1692 இல் கவர்னர் தோமஸ் வான்றீ என்பவரால் கட்டப்பட்டதாகும் இது கவர்னர் இல்லமாக நான்கு வருடங்கள் பயன்படுத்தப்படட்டது. 1696 இல் கவனரால் டச்சு கிழக்கிந்திய கம்பனிக்கு விற்கப்பட்ட பின் கொழும்பு செமின ரியாக இயங்கியது. 1796 இல் ஒல்லாந்தர் ஆட்சி முடிவுக்கு வரும்வரை மத போதனை இடமாகவும் அனாதைகள் விடுதி யாகவும் இவ்வில்லம் செயற்பட்டது.

பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இராணுவ வைத்திய சாலையாகவும், யுத்த தளபாட களஞ்சிய சாலையாகவும், பொலிஸ் பயிற்சிக் கல்லூரியாகவும், தபாற் கந்தோராகவும் இக்கட்டடம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1982 ஜூலை மாதம் ஒல்லாந்தர் காலத்து நூதனசாலையாக உத்தியோகபுபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. அரை ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கட்டடம், ஒருமாடியைக் கொண்டதாகும். மேல்மாடியிலேயே கவர்னரின் படுக்கை அறை இருந்திருக்கிறது. இங்கிருந்து கொழும்பு துறை முகப் பணிகளை, வந்து நிற்கும் கப்பல்களை கண்காணிக்க முடியும். (இந்தக் கட்டடம் தான் ஒல்லாந்தர் காலப்பகுதியில் கொழும்பு நகரில் மிக உயர்ந்த கட்டமாக இருந்தது.)

140 வருடகால ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் வரலாற்றுச் சான்றுகளைப் பகிரக் கூடியவாறு இங்கு சேகரிக்கப்பட்டிருக்கும் பொருட்கள், ஒல்லாந்தரின் கடற்பயண நடவடிக்கைகளையும், கண்டி மன்னர்களுடன் அவர்கள் கொண்டிருந்த நட்புறவு களையும் பறைசாற்றுகின்றன. ஆயுதங்கள், வீட்டு பாவனைப் பொருட்கள், வரைபடங்கள், சித்திரங்கள், தளபாடங்கள், ஒல்லாந்தர் ஆடைகள், சமயலறை உப கரணங்கள், கல்வெட்டுக்கள், மட்பாண்டங்கள், விளக்குகள், அலங்காரப் பொருட்கள் காணப்படுகின்றன.

ஒல்லாந்தர் கால பீரங்கி, டச்சு கிழக்கிந்திய கம்பனியின் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட நாதமணி (1768 இல் தயாரிக்கப்பட்ட இம்மணியில் தமிழ் எழுத்துக்கள் காணப்படுகின்றன), தண்ணீர்த் தாங்கி (கப்பல் பயணங்களின் போது இந்தத்தாங்கியில்தான் தண்ணீர் சேமித்து வைக்கப்படுகின்றது), கல்லறைக் கற்கள் (புறக்கோட்டையிலும் பழைய ஒல்லாந்தர் மயானங்களிலும் பெற்றுக் கொள்ளப் பட்டவை. ஒவ்வொரு கல்லிலும் மரணத்தை உணர்த்தும் சின்னம் காணப்படுகின்றது.), ஜன்னல் பூட்டு, கருங்காலி மரத்திலான ஒல்லாந்தர் காலத்து நாற்காலி, பலா மரத்திலான ஒல்லாந்தர் காலத்து அலுமாரி (கால்களில் செதுக்குவேலை வடிவங்கள் காணப்படுவது இதன் பெருமை), பலா, முதிரை மரங்களிலான மூலை நாற்காலி, கருங்காலி மரத்திலான பல்லாக்கு, பலா மரத்திலாலான ஒல்லார்தர் காலத்துக் கட்டில், இரகசிய இழுப்பறை கொணட பெட்டகம், மடக்கத்தக்க மேசை, 318 ஆண்டுகள் பழமையான மாடிப்படி உட்படப்பல பழைய பொருட்கள் இங்கு கானப்படுகின்றன. 

முப்பரிமாண உலகில் 'டொஷிபா'வின் புதிய புரட்சி

வெறும் கண்களால் பார்க்கக்கூடிய முப்பரிமாண (3D) தொலைக்காட்சியை, ' டொஷிபா' அறிமுகப்படுத்தியுள்ளது.

பொதுவாக முப்பரிமாணத் தொலைக்காட்சியைப் பார்ப்பதற்கு கண்ணாடி அணிய வேண்டிய கட்டாய நிலையே இருந்து வந்தது.

தற்போது ' டொஷிபா ' அறிமுகப்படுத்தியுள்ள இத்தொலைக்காட்சிக்கு கண்ணாடி அவசியமில்லை.

இதன் ' லிக்யுட் கிரிஸ்டல்' திரையின் முன்பகுதியில் சிறிய வில்லைகளைக் கொண்ட 'சீட்' போன்றதொரு அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.

மேற்படி சீட்டானது திரையிலிருந்து வெளிப்படும் ஒளியை 9 புள்ளிகளுக்குச் செலுத்துகின்றது. இதனை மனித மூலை முப்பரிமாண வடிவமாக ஒருங்கிணைக்கின்றது.

இத்தொலைகாட்சியானது 12 அங்குலம் மற்றும் 20 அங்குல அளவுகளில் விரைவில் சந்தைக்கு வருமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. எனினும் குறிப்பிட்டளவு தூரத்திற்குள் தான் இதன் தன்மையை ரசிக்கக் கூடியதாக இருக்கும்.

20 அங்குல தொலைக்காட்சியின் எல்லை 90 சென்டி மீட்டராகவும் 12 அங்குல தொலைக்காட்சியின் எல்லை 65 சென்டி மீட்டராகவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் ஜப்பானிய சந்தைக்கு வரவுள்ள இத்தொலைக்காட்சியானது சுமார் 1400 அமெரிக்க டொலர்வரை விலையிடப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

மடிக் கணினிகளை மடியில் வைத்திருப்பது கூடாது

  மடிக் கணனிகளை அதிக நேரம் நமது கால்களின் மீது வைத்து உபயோகிப்பதன் மூலம், ஒருவித தோல் நோய்க்கு உள்ளாகும் சாத்தியக்கூறு அதிகம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

' டோஸ்டட் ஸ்கின் சிண்ட்ரொம் ' என இத்தோல் நோய் அழைக்கப்படுகின்றது. 

மடிக் கணனிகளை அதிக நேரம் நமது கால்களின் மீது வைத்திருக்கின்ற போது அதன் வெப்பம் நமது தோலை இலகுவாகத் தாக்குகின்றது. 

இந்நிலையின் போது தோலின் நிறம் மாறுவதுடன் தோலின் தன்மையும் மாறுகின்றது. 

சிலநேரம் தோலின் நிறம் நிரந்தரமாக மாறுவதுடன் அவ்விடம் கருமையாக மாறக்கூடுமெனவும் உச்ச நிலையில் தோல் புற்று நோயாக மாறக்கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளதாகவும் வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்நோய் அறிகுறியானது தற்போது பலரிடையே உறுதி செய்யப்பட்டு வருகின்றது. 

கணினி தயாரிப்பு நிறுவனங்களான அப்பிள், டெல், எச்.பி. ஆகியன தங்கள் பாவனையாளர் அறிவுறுத்தல் அட்டைகளில் கணினியை நேரடியாக கால்களில் வைத்து உபயோகிப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முன்னர் இந்நோய் அறிகுறிகள் பேக்கரியில் வேலை செய்பவர்கள், அதி வெப்பமான பிரதேசத்தில் வேலை செய்பவர்களுக்கு மட்டுமே தொற்றி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. _