Sunday, October 3, 2010

காமன்வெல்த் போட்டிகள் பிரமாண்ட தொடக்கம் - அரங்கை அலங்கரித்த இராட்சத பலூன்! (Photos)


காமன்வெல்த் போட்டிகள் 2010 இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இந்திய நேரப்படி 7.00 மணியளவில் டெல்லியில் கோலாகலமாக ஆரம்பமாகியது. சுமார் 60,000 ற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் திரண்டிருந்த மைதானத்தில், இந்திய பாரம்பரியத்தில், மிகப்பிரமாண்டமான கலாச்சார பொம்மைகள் அரங்கை வண்ணமயமாக அலங்கரித்தன.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அவரது மனைவி கமிலா ஆகியோரை இந்திய பிரதமர் மன்மோகன் சிங், குடியரசு தலைவி பிரதீபா பட்டேல் ஆகியோர் நேரு விளையாட்டரங்கிற்கு அழைத்து வந்தனர்.
இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து, நாகதா குழுவினரின் ட்ரம்ஸ் இசை நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து 'ஏரோஸ்டெட்' என பெயர் சூட்டப்பட்ட பிரமாண்ட பலூன் வலையம், நீலநிற ஒளியுடன் அரங்கின் மையத்தில், அந்தரத்தில் நிலைகொள்ளத்தொடங்கியது. ஹீலியம் அடைக்கப்பட்ட இப்பலூன், (இந்திய மதிப்பில் 400 மில்லியன் ரூபாய்) மைதானத்திலிருந்து 80 மீற்றர் உயரத்தில் மெதுவாக மிதக்கத்தொடங்கியதும், அரங்கமே ஒரு கணம் ஆச்சரியத்தில் உறைந்து போனது.

11 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ள இப்போட்டியின் இன்றைய இரண்டரை மணி நேர தொடக்க விழாவை இந்தியா முழுவதும் இருந்து ஒரு பில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் தொலைக்காட்சியில் நேரலையாக பார்த்து ரசித்தனர். 71 நாடுகளை சேர்ந்த 4,000 போட்டியாளர்கள் பங்கு பற்றும் இப்போட்டிகள் இரண்டாவது தடவையாக ஆசிய நாடொன்றில் நடத்தப்படுகிறது. 1998 ம் ஆண்டு கோலாலம்பூரில் இடம்பெற்றது. கடந்த முறை 2006 இல் மெல்போர்னில் நடைபெற்றது.

இதனை கௌரவப்படுத்து முகமாக இன்றைய தொடக்க நாள் நிகழ்வில், அஸ்திரேலியா விளையாட்டு வீரர்களே தமது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி மைதானத்துக்கு முதலில் அணிவகுத்து வந்தனர்.
-4தமிழ்மீடியாவிற்காக  டெல்லியிலிருந்து சுஜித்ரா
படங்கள்:'AP'

காமன்வெல்த் போட்டிகள் 2010 இன் தொடக்கவிழா - கண்கவர் புகைப்படங்கள்


அமெரிக்காவில் பாம்புகளை கொல்ல விஷ எலிகள் வீச்சு : விஞ்ஞானிகள் நூதன திட்டம்

அமெரிக்காவில் பசிபிக் கடலில் உள்ள குவாம் தீவில் விஷ பாம்புகள் அதிக அளவில் உள்ளன. இவை அங்குள்ள வனப்பகுதியில் மரங்களில் சர்வ சாதாரண மாக உலா வருகின்றன. மக்களின் உயிருக்கு அச்சுறுத் தலாக அவை திகழ்கின்றன.
அவை ராணுவத்துக்கு அனுப்பப்பட்ட சரக்கு வாகனங்களில் ஊடுருவி வந்துள்ளன. இதனால் கடந்த 1980-ம் ஆண்டு முதல் பாம்புகளின் தீராத தொல்லை இங்கு அதிகரித்துள்ளது.
எனவே அங்குள்ள விஷ பாம்புகளை கொல்ல அமெரிக்க வேளாண் விஞ்ஞானிகள் நூதன திட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். எலி என்றால் பாம்புகளுக்கு கொள்ளை பிரியம்.
அவற்றை விழுங்கி உணவாக்கி கொள்ளும். எனவே எலிகளின் உடலில் “அசிடோமினாபென்” என்ற விஷ மருந்தை செலுத்தி காட்டுக்குள் உலவ விட்டால் அவற்றை சாப்பிடும் பாம்பு களை செத்து மடியும் என்று கருதினர்.
அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். கடந்த மாதம் குவாம் தீவில் உள்ள 20 ஏக்கர் வனப்பகுதியில் 200 எலிகளை ஹெலிகாப்டர் மூலம் வீசினர். இதில் நல்ல பலன் கிடைத்துள்ளது.
எனவே இதே திட்டத்தை பெருமளவில் செயல்படுத்த உள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் அட்டைப் பெட்டிக்குள் அடைக்கப்பட்ட விஷ எலிகள் வீசப்பட உள்ளன. இதன் மூலம் அங்குள்ள விஷ பாம்புகளின் எண் ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரனுக்கு ஆளில்லா 2-வது விண்வெளி ஓடம் சீனா அனுப்பியது

சந்திரனில் சீனா ஆய்வு மேற்கொண்டு வருகிறது. கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் 24-ந்தேதி முதன் முறையாக ஆளில்லா விண்வெளி ஓடத்தை அனுப்பியது. அது கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் சந்திரனின் மேற்பரப்பில் மோதி ஆய்வு நடத்தியது.
2.48 டன் எடையுள்ள அந்த விண்வெளி ஓடத்தை சக்திவாய்ந்த லாங்மார்ச் 3-சி ராக்கெட் மூலம் அனுப்பியது. அது 6 மாதங்கள் ஆய்வு நடத்திய பின் பூமிக்கு திரும்பியது.
இந்நிலையில் 2-வது முறையாக மீண்டும் சோதனை நடத்த ஆளில்லா விண்வெளி ஓடத்தை நேற்று முன்தினம் சந்திரனுக்கு அனுப்பியது. இதற்காக ரூ.600 கோடியை ஒதுக்கியுள்ளது.
இதற்காக ஷிஜாங் விண்வெளி மையத்தில் இருந்து லாங்மார்ச் 3-சி ராக்கெட் மூலம் ஜாங் இ-2 என்ற ஆளில்லா விண்வெளி ஒடம் அனுப்பப்பட்டது. இந்த காட்சி சீனாவின் தேசிய டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

சூரிச், பொரிபேர்க் கான்டன்களில் முஸ்லிம் மாணவிகள் முக்காடு அணிவதற்கு அனுமதி

சூரிச் மற்றும் பொரிபேர்க் ஆகிய கான்டன் பாடசாலைகளில் முஸலிம் மாணவிகள் முக்காடு அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் மாணவிகள் முக்காடு அணிவதற்கு சுவிட்சர்லாந்தில் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முக்காடு அணிவது தொடர்பில் மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமது மத நம்பிக்கைகளை கடை பிடிப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செயின்ட் காலனின் 15 வயதான இனிசா என்ற மாணவி முக்காடு அணிந்து பாடசாலை சென்றதாகவும், அதற்கு பாடசாலை நிர்வாகம் எதிர்ப்பை வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முக்காடு அணிவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டமை குறித்து இனிசா நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
கடுமையான தண்டனைகளையோ அல்லது தடைகளை விதிப்பதனை விடவும் பெற்றோருடன் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தடைகளை விதிப்பது கடும்போக்குடைய மத செயற்பாட்டார்களை உருவாக்க வழிகோலும் என அவர் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கைக்கு வந்த உலகின் உயரமான மற்றும் குள்ளமான மனிதர்கள்



உலகத்தின் உயரமான மனிதரும் குள்ளமான மனிதரும் நேற்று முன்தினம் இரவு அவசரமாக இலங்கை வந்தனர். மலேஷியாவின் சுதந்திர தின நிகழ்வுகளில் விசேட விருத்தினர்களாக பங்குபற்றிய பின்னர் தமது சொந்த நாடான பாகிஸ்தானுக்குச் செல்லும் வழியிலேயே அவர்கள் இலங்கை வந்திருந்தனர். உலகில் உயரமான மனிதரான ஹக் நவாஸ் 7 அடி 8 அங்குலம் உயரமானவர். அவருக்கு 2 சகோதரர்களும் 2 சகோதரிகளும் உள்ளனர். இவரது சகோதர சகோதரிகள் அனைவரும் சாதாரண உயரமுடையவர்கள். பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த பஹபூரை வசிப்பிடமாகக் கொண்ட இவர், காலை உணவாக 16 ரொட்டிகள் 12 முட்டைகள் 4 லீட்டர் பாலையும் பகல் மற்றும் இரவு உணவாக 15 ரொட்டிகள் 3 கிலோ, மாட்டிறைச்சி அல்லது கோழி இறைச்சியையும் உண்பதாக கூறுகிறார். அத்துடன் மணித்தியாலத்துக்கு ஒருமுறை முன்பு பசியெடுப்பதன் காரணமாக சிற்றுண்டிகளை உண்பதாகவும் கூறுகிறார்.

24 வயதுடைய பிரமச்சாரியான இவர், 6 அடிக்கு மேற்பட்ட எந்தவொரு நாட்டையும் சேர்ந்த யுவதியை திருமணம் செய்ய விரும்புவதாக கூறுகிறார். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பேச விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை உலகின் குள்ளமான மனிதரான அலி சமானின் உயரம் வெறுமனே 39 அங்குலம் மாத்திரமே (3 அடி 3 அங்குலம்). 48 வயதான இவர் காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர். இவரது மனைவியின் உயரம் 5 அடியாகும். இவருக்கு 16, 11 மற்றும் 6 வயதுடைய மூன்று மகள்மார் உள்ளனர். மூத்த மகளின் உயரம் 34 அங்குலம் ஆகும். பாகிஸ்தானிய தொலைக்காட்சியில் நடிகராகவும் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்துவராகவும் இவர் பணி புரிகிறார்