Wednesday, September 29, 2010

ஜலதோஷமா, உடல்வலியா, மூட்டுவலியா இல்ல ஹாங்க் ஓவரா ?


எல்லாவற்றுக்கும் ஓர் அற்புத நிவாரணம் தான் ஆட்டுக்கால் சூப். மூட்டு வலி இருக்கும் மூத்த பதிவர்களுக்கும், எலும்புகள் வளரும் பருவத்தில் இருக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் கூட மிக அருமையான உணவு.

ஆட்டுக்கால் சூப் எப்படி வைப்பது, என்னென்ன தேவை.. நல்ல மழை அல்லது குளிர் நாளாக இருக்கும் ஒரு சுபயோக சுபதினத்தில் சூடான ஆட்டுக்கால் சூப்பை ஜன்னலோரமோ அல்லது பால்கனியிலோ நின்று க்ளென்ஃபெடிச் விஸ்கியுடன் சோடா சேர்த்து அருந்துவதைப் போல் சிறிது சிறிதாக அருந்தினால் மனம் ஒருநிலைப்பட்ட தவநிலையை அடையலாம் :D.



நாலு ஆட்டுக்கால், ரெண்டு பெரிய வெங்காயம், ரெண்டு தக்காளி, கொஞ்சம் கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள்தூள், பூண்டு, இஞ்சி, மிளகு மற்றும் சீரகத்தூள் இதெல்லாம் இருந்தால் நீங்கள் சூப் வைக்க ஆரம்பிக்கலாம். முதலில் ஆட்டுக்காலை சின்னச்சின்ன துண்டுகளாக வெட்டி, நன்கு சுத்தப்படுத்திவிட்டு, நன்கு வேகவைக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு எல்லாவற்றையும் முறையே போட்டு வதக்கவும்.

வேகவைத்த ஆட்டுக்காலை அப்படியே அந்த பாத்திரத்தில் போட்டு, மிளகுத்தூள், சீரகத்தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை தங்கள் நாக்கின் நீளத்திற்கேற்ப போட்டு நன்கு கிளறி விடவும். அதன் பின் 5 குவளை தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் ஆட்டுக்கால் சூப் ரெடி. உப்பு சேர்க்கும் போது கவனமாக சேர்க்கவும். உப்பு கூடினால் தண்ணீரும், தண்ணீர் கூடினால் உப்பையும் மாற்றி மாற்றி சேர்த்து சமன்படுத்திக் கொள்ளலாம். இடையிடையே கரண்டியில் கொஞ்சம் எடுத்து சுவையைச் சரி பார்த்துக் கொள்வது சாலச் சிறந்தது.

தொடர்ந்து கணினியில் இருப்பவர்களுக்கு மணிக்கட்டிலும், கால் மூட்டிலும் வலியிருந்தால் வாரம் ஒருமுறை ஆட்டுக்கால் சூப் குடித்து நிவாரணம் பெறலாம். வார இறுதியில் விருந்துகளுக்கு செல்பவர்கள், செல்லுமுன் சூப் தயார் செய்து வைத்து விட்டுப்போனால் மறுநாள் காலையில் சுடவைத்து இரண்டு லார்ஜுகள் சூப் குடித்தால் ஹாங்க் ஓவரிலிருந்து உடனடி விடுதலைக்கு உத்தரவாதம்.

வாழ்க ஆட்டுக்கால் சூப்புடன்!!!

யு-டியூப்பில் காணொளி வலையேற்றுவது எப்படி?

இணையப் பயன்பாட்டில் காணொளிகள் பயன்படுத்தப்படும் இடமெல்லாம் பெரும்பாலும் யு-டியூப் பயன்படுத்தப்படுவது தவிர்க்க இயலாத ஒன்றாகி விட்டது. யு-டியூப் போலவே வேறு சில இணையத் தளங்கள் இருந்தாலும் பயனாளர் எண்ணிக்கையில் யு-டியூப் ஒரு கடல். அதனால் காணொளி முத்துக் குளிக்க ஏற்ற இடமாகிவிட்டது யு-டியூப். யு-டியூப்பில் காணொளியை வலையேற்றி விட்டால் அதை நம் இணையப் பக்கங்களில் ஒருங்கிணைத்துக் கொள்ள முடியும் (embedding) என்பது கூடுதல் சிறப்பு.



பிட்டுப் படங்கள் முதல் புட்டு செய்வது வரை, சுவற்றில் ஆணியடிப்பது எப்படி என்பது முதல் ஐ-போனை எப்படி அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப் போடுவது என்பது வரை யு-டியூப்பில் காணொளியின் வகைகள் ஏராளம் ஏராளம். எப்போதும் யு-டியூப்பில் இருக்கும் காணொளிகளைக் கண்டு ரசிக்கும் நமக்கு சில நேரங்களில் நம்மிடம் இருக்கும் காணொளிகளைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் சூழ்நிலைகளும் நேரலாம். அதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில் எப்படி வலையேற்றுவது என்பதை இப்பதிவில் காண்போம்.

முதலில் யு-டியூப் பயனாளர் கணக்கு வேண்டும். கூகுள் பெற்றுப்போட்ட அல்லது தத்தெடுக்கப்பட்ட வதவத குட்டிகளில் யு-டியூப்பும் ஒன்றென்பதால் கூகுள் பயனாளர் கணக்கு இருந்தால் யு-டியூப்புக்கு அது செல்லுபடியாகும். அப்படி கூகுள் கணக்கு இல்லாதவர்கள் www.youtube.com சென்று புதிய பயனாளர் கணக்கு ஒன்றை துவக்கிக் கொள்ள வேண்டியது. அடுத்து வலையேற்றம் செய்ய வேண்டிய காணொளி கோப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு யு-டியூப் சில வரைமுறைகளை வைத்துள்ளது. அவற்றிற்கு ஏற்றாற் போல் நம் காணொளிக் கோப்பு வடிவத்தை மாற்றியமைக்க வேண்டும். அதன்பின் நாம் வலையேற்றம் செய்யும் கோப்பினை யு-டியூப் FLV கோப்பு வடிவத்திற்கு மாற்றி நம் பயன்பாட்டுக்கு வழங்கும்.

சரி, அந்த வரைமுறைகள் என்னென்ன?. காணொளிக் கோப்பு avi, mp4, wmv, mov போன்றவற்றுள் ஏதேனும் ஒரு கோப்பு வடிவத்தில் இருக்க வேண்டும். காணொளியின் நீளம் பத்து நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். காணோளியின் ஒளித்தரம் (resolution) 1280 x 720 வரை இருக்கலாம். இவற்றுள் avi அல்லது mp4 கோப்பு வடிவங்களும், ஒளித்தரம் 320 x 240ம், நீளம் 10 நிமிடங்களுக்கு மிகாமலும் இருக்குமாறு காணொளியினை வழங்குவது பரிந்துரைக்கப்படுகிறது. இதன் மூலம் உங்கள் காணொளியின் கோப்பு அளவு (file size) கட்டுக்குள் இருக்கும், அதனால் வலையேற்றம் செய்வதற்கு அதிக நேரம் எடுக்காமல் எளிதாக இருக்கும். இவற்றை எவ்வாறு செய்வது?. இருக்கவே இருக்கிறது இலவச மென்பொருட்கள்.



Any video Converter (avc) என்ற மென்பொருள் இலவசமாக கீழ்காணும் சுட்டியில் கிடைக்கிறது. இதுபோல் இன்னும் பல மென்பொருட்கள் இணையத்தில் ஏராளமாகக் கிடைக்கின்றன. கூகுளாடி விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்து கொள்ளலாம். மென்பொருளைத் தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள். பின் ADD VIDEO என்ற பொத்தானை சொடுக்கி உங்கள் கணினியிலோ அலல்து குறிந்தகட்டிலோ இருக்கும் காணொளிக் கோப்பினை உள்ளிடுங்கள். பின்னர் காணொளியின் எந்த இடத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும், எந்த இடத்தில் முடிக்க வேண்டும் என்பதை நேரத்தினாலோ அல்லது scroll bar உதவியுடனோ தெரிவிக்க வேண்டும். அதன்பின் எந்த வடிவத்திற்கு கோப்பினை மாற்றியமைக்க வேண்டும் என்பதை உள்ளிடுங்கள். இங்கு உதாரணத்திற்கு mp4 வடிவத்திற்கு எவ்வாறு avc மென்பொருளில் உள்ளீடுகள் இருக்க வேண்டும் என்று வழங்கப்பட்டுள்ளது (பார்க்க படம் - க்ளிக் செய்து பெரிது படுத்திப் பார்க்கவும்).

தரவிறக்கச் சுட்டி:


மாற்றியமைக்கப்பட்ட காணொளிக் கோப்பு இயல்பாக My documents-AnyVideoConverter-mp4 என்ற இடத்தில் இருக்கும். அல்லது மென்பொருளில் நீங்கள் எந்த இடத்தில் சேமிக்கச் சொல்லி உள்ளிடுகின்றீர்களோ அங்கு சேமிக்கப் படும். அவ்வளவு தான், உங்கள் காணொளி வலையேற்றத்திற்கு தயார். யு-டியூப் வலைத்தளத்திற்கு சென்று மேலே வலதுபுற மூலையில் இருக்கும் upload என்ற பொத்தானை அமுக்கி உங்கள் காணொளிக் கோப்பை வலையேற்றம் செய்ய வேண்டியது தான்.

விண்டோஸ் பிழைச்செய்தி இலக்கங்கள் சொல்வது என்ன? கண்டறியும் ஒரு இணையத்தளம்.


விண்டோஸில் அடிக்கடி பிழைச்செய்திகள் வந்து தொல்லை தரும். அவற்றுடன் இலக்கங்களும் காட்டப்படும் (Error Codes). குறிப்பிட்ட இலக்கத்தை வைத்து என்ன பிழை என்பதை இலகுவாக கண்டறியலாம். ஆனால் எங்கே தேடுவது. Error Goblin என்ற இணையத்தளம் உதவுகிறது.

இதன் மூலம் விண்டோஸ் மட்டுமல்ல மேக் கணணியின் பிழைச்செய்தியையும் கண்டுபிடிக்க முடியும். இலக்கத்தை மட்டும் கொடுத்து இயங்கு தளத்தை தேர்வு செய்து எண்டர் தட்டினால் போதுமானது உடனே பிழைக்கான காரணம் தெரியவரும். தேவையாயின் டெஸ்க்டாப் அப்பிளிகேஷனும் கிடைக்கிறது பயன்படுத்தி பயன் பெறலாம்.

இணைய முகவரி - http://www.errorgoblin.com/
டவுண்லோட் செய்ய

உலகின் அதிஉயர குழந்தை : வயது இரண்டரை, உயரம் 4 அடி 5அங்குலம்! (பட இணைப்பு)

  உலகின் உயரமான குழந்தையாக இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்த கரன் சிங் கருதப்படுகின்றார். 

இரண்டரை வயதான இக்குழந்தையின் தற்போதைய உயரம் 4 அடி 5 அங்குலங்கள். 7 அடி 2 அங்குலமான இவரது தாயார் ஆசியாவின் உயரமான பெண்மணியென்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ஒரு கூடைப்பந்து வீராங்கனையாவர். 

இதே வயதையொத்த குழந்தைகளைவிட இவர் சுமார் 2 மடங்கு உயரமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிறக்கும் போதே இக்குழந்தை 2 அடி உயரம் இருந்ததாகவும், தன்னை விட உயரமாக, தன் மகன் வளர்வான் எனவும் கரனின் தாயார் தெரிவித்துள்ளார்.

கரன் தினமும் 5 அப்பிள்கள் 10 தேக்கரண்டி தேன் போன்றவற்றை உண்கின்றான்.

காலையில் எழுந்தவுடனேயே உணவை பற்றிக் கேட்பதாகவும், எப்போழுதும் உண்ட வண்ணமே இருப்பதாகவும் இவரது தாயார் தெரிவிக்கின்றார்.

மணிக்கு 416.6 கி.மீ. வேகத்தில் மின்னலாக பறந்த சீன ரெயில்

சீனாவில் அதிவேக ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 2008-ம் ஆண்டு ஜூன் 24-ந்தேதி பெய்ஜிங்- தியான்ஷின் நகரங்களுக்கு இடையே மணிக்கு 394.3 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது.

இதன் மூலம் உலகிலேயே அதிவேக ரெயில் என்ற சாதனையை படைத்தது. தற்போது, அதை விட அதிக வேகமாக இயங்க கூடிய ரெயிலை சீனா உருவாக்கியுள்ளது.

இந்த ரெயில் ஷாங்காய்- ஹாங்ஹீ நகரங்களுக்கு இடையே பரிசோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அப்போது மணிக்கு 416.6 கி.மீட்டர் மின்னல் வேகத்தில் பறந்து சாதனை படைத்தது.

இந்த ரெயில் மணிக்கு 350 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் அளவு வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இது ஷாங்காய்- ஹாங்ஹீ நகரங்களுக்கு இடையே 202 கி.மீட்டர் தூரத்தை 40 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்பு இந்த தூரத்தை ரெயில்கள் 2 மணி நேரத்தில் கடந்து சென்றன. தற்போது மிக குறைந்த நேரத்தில் சென்றதன் மூலம் உலகிலேயே மிக நீளமான அதிவேக விரைவு ரெயில் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

இதன்மூலம் நவீன ரெயில்வே தொழில் நுட்பத்தை சீனா பெற்றுள்ளது என்று சீன ரெயில்வே அமைச்சகத்தின் தலைமை என்ஜினீயர் கிகுவாவூ தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் ஒற்றைச் சக்கரத்துடன் வெற்றிகரமாகத் தரையிறக்கினார் நிஜ ஹீரோ!


சினிமாக்களில் வரும் சண்டைக்காட்சிகளில் ஒற்றைச் சக்கரத்தில் வாகனங்களை ஒட்டி, பரபரப்பாவார்கள் சினிமாக் கதாநாயகர்கள். உண்மையில் விமானம் தரையிறக்கும் வேளை,  சில்லில் ஏற்பட்ட கோளாறினால், 60 பயணிகளுடன் ஒரு விமானம் விபத்துக்குள்ளாக இருந்ததை தவிர்த்து, ஒற்றைச்  சில்லுடன் விமானத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கியுள்ளார் ஒரு கதாநாயக விமான  ஓட்டுனர். 
கடந்த சனிக்கிழமை டெல்டா எயர்லைனுக்கு சொந்தமான ஜெட் விமானம் நியூயோர்க் விமானத்தில் தரையிறங்க இருந்த போது இந்த நிகழ்வு நடந்தது. விமானம் தரையிறக்கும் நேரம் கியர் பழுதாகியது. தரையிறக்கும் சில்லுகளும் இயங்கவில்லை. ஒரே ஒரு சில் மட்டுமே இயங்கிக்கொண்டிருந்தது.  ஆனால் அந்த பைலட் அந்த ஒரு சில்லை மட்டுமே பயன்படுத்தி வெற்றிகரமாக விமானத்தை தரையிறக்கினார்.

இத்தனைக்கும்   அந்த விமானத்தை அவர் ஓட்டிவரவில்லை . ஆபத்துக்கு உதவிபுரியும் உடனடி பைலட்டாக  அந்த விமானத்தில் பயணம் செய்த  49வயதான டேவிட் ப்ரேடாதான் இந்தச் சாதனையைப் புரிந்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.

யுத்தத்தால் ஆப்கானின் அவலம் - தேசிய தொலைக்காட்சியில் கண்ணீர்விட்டழுத ஆப்கான் அதிபர்!


ஆப்கான் அதிபர் ஹமிட் கராசி, ஆப்கான் யுத்த நிலைமைகள் தொடர்பில் நேற்று, அந்நாட்டு தேசிய தொலைக்காட்சி ஒன்றில் உரையாற்றினார். அப்போது, ஆப்கானில்  முடிவில்லாது தொடரும் யுத்த நிலைமைகள் தன்னை மிகவும் பாதித்துவிட்டதாக கூறினர்.
இப்படியே சென்றால்  எமது அடுத்த தலைமுறைக்கு ஆப்கானிஸ்த்தான் என்றொரு நாடே இல்லாமல் போய்விடும். ஆப்கானின் அமைதிக்கான குழுவினர், தலிபான்களின் அச்சுறுத்தலில் இருந்து விடுபட இராணுவ ரீதியான தீர்வை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் சிறந்த அரசியல் தீர்வுகளை வழங்குவதிலேயே மும்முராகியுள்ளனர். எனினும் இது எந்தளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை.
இவ் யுத்தம் முடிவுக்கு வராவிடின், எனது மகன் மிர்வைஸிற்கு கூட அவனது தாய்நாட்டில் வாழ வழியில்லாமல் போய்விடுமோ என  எனக்கு பயமாக இருக்கிறது. எனக்கூறிய ஹமீட், ஒரு கட்டத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார்.

இக்காட்சிகள் குறித்த தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய போது, பார்வையிட்ட அவரது ஆதரவாளர்கள் மிகுந்த கவலை அடைந்தனர்.

கடந்த 2001 செப்டெம்பர் 11 தாகுதலின் பிறகு, ஆப்கான் மீது அமெரிக்கா படையெடுத்தது. எனினும் அதிகரித்த தலிபான் தாக்குதல்களில்,  அதிகமான உயிரிழப்புக்கள் ஏற்பட்ட ஆண்டாக இவ்வருடம் பதிவாகியுள்ளது.

காம உணர்ச்சி அமிர்தமா? நஞ்சா?

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' என்பது பழமொழி. மனித வாழ்வில் காமம் என்பது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சியை அளிக்கக்கூடிய ஒரு மருந்து என்றால் அது மிகையாகாது.
பாலுறவு அல்லது செக்ஸ் என்பது தீண்டத்தகாத அல்லது கேட்கக் கூடாத கெட்ட வார்த்தையல்ல. எந்தமாதிரியான தருணத்தில், எந்த முறையில் நாம் அந்த உறவைக் கையாள்கிறோம் என்பதைப் பொருத்தே அது நஞ்சாகிறதா? அல்லது அமிர்தமாக ருசிக்கப்படுகிறதா? என்பது தெரியவரும்.
காமம் என்பது உடலின் பல்வேறு உணர்ச்சிகளில் ஒன்று என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மாம்பழம், ஆப்பிள், வாழைப்பழம் என ஒவ்வொரு பழத்திற்கும் ஒருவித சுவை இருப்பதைப் போல, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் காம உணர்ச்சி என்பது, அவர்களின் தன்மையைப் பொறுத்து வேறுபடலாம்.
நம் உடல்நலம் பாதிக்கப்படும்போது, நோய் நிவர்த்திக்குத் தேவையான குறிப்பிட்ட ஒரு மருந்தை உட்கொள்கிறோம். அதனால் உடல் உபாதைகளில் இருந்து விடுபடுவதைப் போலவே பாலுறவையும் எடுத்துக் கொள்ளலாம்.
கிராமங்களில் பொதுவாக ஊர் சுற்றிக்கொண்டு, வீட்டிலிருக்கும் பெரிசுகளுக்குக் கட்டுப்படாமல் திரியும் விடலைகளைப் பார்த்து, ``சீக்கிரம் இவனுக்கு கால்கட்டு போடணும், அப்பத்தான் சரியா வருவான்' என்று கூறுவதைப் பார்த்திருக்கிறோம்.
அதாவது, வாலிப முறுக்கேறித் திரியும் இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பதால், உரிய நேரத்தில் அவர்களின் மனோநிலையை மாற்றி, பொறுப்புள்ள மனிதனாக்கலாம். திருமணம் முடிந்தால், மனைவியைச் சுற்றி வருவான். வாழ்க்கையில் ஒரு பந்தம், பிடிப்பு ஏற்படும் என்பதை உணர்த்தவே அப்படிக் கூறுவார்கள்.
காமம் என்பது மன அழுத்தம், மனச்சோர்வில் இருந்து மனிதன் விடுபடுவதற்கு ஒரு முக்கியமான உணர்வாகத் திகழ்கிறது. தவிர, மனித வாழ்க்கை எனும் தாத்பர்யத்தில் தாம்பத்யம் மூலமே சந்ததி பெருக்கம், இனவிருத்தி ஏற்படுகிறது.
எனவே எதற்காக வாழ்கிறோம் என்றால், அடுத்த சந்ததியினரின் நலனுக்காக, அவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறோம். இவற்றுக்கெல்லாம் மூலாதாரமாக விளங்குவது பாலுறவு அல்லது காம உணர்ச்சியே.

எதிர்காலத்தில் நோய்களை கண்டறிவதற்கு கையடக்க லேசர் கருவிகள் பயன்படுத்தலாம்

எதிர்காலத்தில் நோய்களை கண்டறிவதற்கு எக்ஸ் கதிர்களுக்கு பதிலாக லேசர் ஒளிக்கற்றைகளை பயன்படுத்தும் கையகடக்க கருவிகள் புழக்கத்தில் வரக்கூடுமென விஞ்ஞானிகள் எதிர்வு கூறுகிறார்கள்.
இந்த தொழில்நுட்பம் ஐந்தாண்டுகளுக்குள் பரவலாக பயன்பாட்டில் இருக்குமென்பது பிரிட்டன் விஞ்ஞானிகளின் எதிர்வு கூறலாகும்.
இந்தத் தொழில்நுட்பத்தின் பெயர் ராமன் ஸ்பெக்ட்றோஸ்கொப்பி என்பதாகும். இதன் மூலம் மார்பக புற்றுநோய், ஒஸ்ரியோ பொரோசிஸ் போன்ற நோய்களின் ஆரம்ப அறிகுறிகளை மிகவும் திருத்தமாகவும், வேகமாகவும் அறிந்து கொள்ளலாமென்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தொழில்நுட்பம் மலிவானதென்பதும் குறிப்பிடத்தக்கது.

அரிசி பாண் தயாரிக்கும் நவீன இயந்திரம் _

அரிசியின் மூலம் பாண் தயாரிக்கும் நவீன இயந்திரமொன்றினை ஜப்பானின் சான்யோ நிறுவனம் உருவாக்கியுள்ளது. ' கோபன் ' என இவ்வியந்திரம் பெயரிடப்பட்டுள்ளது.

அரிசி மற்றும் தானியங்களை அரைத்து நீர் சேர்த்து பசை போன்ற கலவையாக இந்த இயந்திரம் உருவாக்குகின்றது. பின்னர் அக்கலவையைப் பாணாக தயாரிக்கின்றது.

இது சாதாரண பாண் போன்று மிகவும் சுவையாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு பாணை சுமார் 1 மணி நேரத்திற்குள் தயாரிக்கமுடியுமென தெரிவிக்கப்படுகின்றது.

2011 ஆம் ஆண்டில் ஆசிய சந்தைக்கு வருமென எதிர்பார்க்கப்படும் மேற்படி இயந்திரம் சுமார் 593 அமெரிக்க டொலர் வரை விலையிடப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.