Saturday, September 25, 2010

இணையத்தின் சுவாரஸ்யங்கள் : பிங் - மைக் மூஸ்


20-11-2000 அன்று அமெரிக்காவில் ஒரு சாலை விபத்தில் அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்கள் மோதிக்கொண்டன. தன் வீட்டுக்கருகே உள்ள ஒரு உணவகத்தில் உணவருந்தி விட்டு வந்த மைக் மூஸ் அந்த விபத்தில் பலியானார். மொத்த கணிப்பொறியியல் துறையும், அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அமைச்சகமும் துக்கம் அனுசரித்தது மைக் மூஸின் மறைவுக்காக. ஏன்? யார் இந்த மைக் மூஸ்?.. தொடர்ந்து படியுங்கள்.


நட்டநடு பசிபிக் கடலில் ஒரு சின்ன படகில் ஒருவரை கண்ணைக் கட்டி கொண்டு போய் விட்டால் தலைகால் புரியாம சிலிர்ப்பா ஒரு அனுபவம் கிடைக்கும். கிட்டத்தட்ட அந்த அனுபவத்தை அனுதினமும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் தான் வலையமைப்பு வல்லுநர்கள். நூற்றுக்கணக்கிலோ அல்லது ஆயிரக்கணக்கிலோ கணினிகள் கொண்ட வலையமைப்பில் ஒரு கணினி மட்டும் கண்ணடிக்குது என்று புகார் வரும் சமயம், அதனை சோதனை செய்யச் செல்லும் வல்லுநர் திரையரங்கில் மொக்கைப்பாடல் வரும் போது புண்பட்ட மனதை ஆற்ற மக்கள் தன்னிச்சையாகக் வெளிக்கிளம்புவதைப் போல, கொஞ்சம் கூட யோசிக்காமல் உபயோகப்படுத்தும் முதல் ஆயுதம் 'பிங்' (ping).

உலகில் பிங் நிரல் இல்லாத கணினிகளே இல்லை. முதல் காரணம் அதன் அற்புதமான பயன், இரண்டாவது காரணம் 'இலவசம்' :D. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிங் எப்படி செயல்படுது, செயல்படும் நேரத்தில் என்னென்ன நடக்கிறது, அவற்றின் பயன்கள் என்னென்ன என்பது குறித்து இப்பதிவில் காண்போம். வலையமைப்புக்கான தொடர்பு வழிமுறைகளின் (TCP/IP - Transmission control protocol/Internet protocol) ஒரு அங்கமான ICMP - internet control message protocol என்பதனைப் பயன்படுத்தி ஒரே வலையமைப்பில் உள்ள் இரண்டு கணினிகள் ' நீ இருக்கியா' (echo_request), 'இருக்கேன், ரைட்டு' (echo_response) என்று தங்களது இருப்பை உறுதிப் படுத்திக்கொள்ளும் நிகழ்வு தான் பிங். பிங் கட்டளையமைப்பு கீழ்காணும்படி இருக்க வேண்டும்.

ping [ip address]/domain name eg: ping 192.168.1.1 / ping www.siteaddress.com


எங்கிருந்து பிங் கட்டளை பிறப்பிக்கப் படுகிறதோ அங்கிருந்து சேருமிடத்திற்குச் சிறு தகவல்பகுதிகள (data packets) ICMP வழிமுறைப்படி அனுப்படும். அத்தகவல்பகுதியின் தலைப்பகுதியில் தகவல் புறப்படுமிடம் மற்றும் சேருமிடத்தின் வலையமைப்பு முகவர் எண்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். கட்டளையில் உள்ளிடப்பட்ட முகவர் எண்ணுக்கான இடத்தை அடைந்ததும், தகவல் பகுதி திருப்பி புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் நான்கு முறை திருப்பி அனுப்பி வைக்கப்படும். இவை அனைத்தும் 128 மில்லி வினாடிகளுக்குள் நடந்து முடிந்தால் தகவல் தொடர்பு சரியாக இருக்கிறதென்று அர்த்தம். கால தாமதத்தால் 128 மில்லி வினாடிகளைத் தாண்டி காலாவதியானால் (time to live - TTL=128) கணினிகளுக்கிடையே வலையமைப்புக் கட்டமைபுக்கான உள்ளிடல்களிலோ அல்லது Firewall காரணமாகவோ சிக்கல் இருக்கலாம். அல்லது சேருமிடத்திற்குரிய வலையமைப்பு முகவர் எண்ணைக் காணவில்லை என்று தகவல் தந்தால் வேறு வழியில்லை, இடுப்பை வளைத்து, குனிந்து கணினி மேஜைக்கடியில் புகுந்து வலையமைப்புக்கான இணைப்பு கழண்டிருகிறதா அல்லது வலையமைப்பு வடத்தில் பிரச்சினையா என்று சட்டை கசங்கினாலும் கவலைப்படாமல் பார்த்துத்தான் ஆக வேண்டும்.


மேற்சொன்ன உதாரணம் ஒரு பொதுப்பயன். இவை தவிர பிங் மூலம் உங்கள் கணினிக்கும் ஒரு இணையதளத்திற்க்கோ அல்லது வலையமைப்பில் உள்ள மற்றொரு கணினிக்கோ இடையே உள்ள வலையமைப்புத் தூரம் எவ்வளவு என்பதை கணக்கிடவும், இணையதளத்தின் முகவரிக்குரிய முகவர் எண்ணைத் தெரிந்து கொள்ளலாம். இப்படி விவரிக்கும் போதே தலைவலிக்க வைக்கும் செயல்களை மிகச்சுலபமாக செய்து முடிக்கும் 'பிங்', ஒவ்வொரு நொடியிலும் உலகில் எதோ ஒரு இடத்தில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இவ்வளவு பெருமைகளையும், ஆயிரத்திற்குமதிகமான வரிகளால் அமைக்கப்பட்ட மூலக்கூறு நிரலையும் உடைய 'பிங்' கட்டளை ஒரு பொன்மாலைப் பொழுதில் அவசரத் தேவைக்காக சில மணி நேரத்தில், தனி மனிதனால் உருவாக்கப்பட்டது என்பது கவனிக்கப்பட வேண்டிய தகவல். அத்தகைய அதிவேக செயல்திறன் கொண்ட மூளைக்குச் சொந்தக்காரர் தான் மைக் மூஸ் (மைக்கேல் ஜான் மூஸ்). ஒரு மனிதன் தன் தாய்மொழியைப் பேசுவதற்கு ஈடான வேகத்தில் நிரல்களை எழுதும் சூரப்புலி என்று தன் சக விஞ்ஞானிகளால் புகழப்பட்ட மைக் மூஸ் அடிப்படையில் ஒரு மின் பொறியாளர். மைக் மூஸ் இணையத்துக்கும், கணினித் தொழில்நுட்பத்துக்கும் படைத்த ஒரு பானைப் படைப்புகளில் ஒரு சோறு தான் இந்த பிங்.

பிங் இவ்வளவு பிரபலமடையும் என்று தெரிந்திருந்தால் உருவாக்கத்தில் இன்னும் கொஞ்சம் அதிக நேரம் செலவழித்திருப்பேன் என்று பின்னாளில் கூறிய மைக் மூஸ், USENIX அமைப்பின் 1993 ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பாராட்டு விழாக்கள் ஏதுமின்றி :D மொத்தம் 26 விருதுகள் அளித்துக் கவுரவிக்கப்பட்டவர். அமெரிக்கப் பாதுகாப்பு ஆராய்ச்சித்துறையில் பணியாற்றி வந்த மைக் மூஸ் பாதுகாப்புத் துறைக்காக உலகின் முதல் முப்பரிமாண வடிவமைப்பு மென்பொருளைக் கட்டமைத்தவர் (BRL-CAD - ballistic reaseach laboratory, computer aided design). தான் வாழும் காலத்தில் என்னென்ன சாதிக்க வேண்டும் என்று கல்லூரி நாட்களிலேயே பட்டியலிட்டு வைத்திருந்த மைக் மூஸ், தன் 42வது வயதிலேயே கிட்டத்தட்ட அப்பட்டியலை முடிக்கும் தருவாய்க்கு வந்துவிட்டார். நண்பர்கள் அவரைக் கடைசியாக சந்தித்த தருணத்தில் தனது அடுத்த பட்டியலைத் தயார் செய்து கொண்டிருந்தார் மைக் மூஸ். பட்டியல் மட்டுமே இருக்கிறது.


வலையமைப்பில் யாரைத் தேடினாலும் பார்த்துச் சொல்லும் பிங், "ping mike muuss" என்று கேட்டால் தரும் பதில் "ping request could not find host mike muuss".

மர்மங்கள் விளக்கும் மாயக்கருவி : கருப்புப்பெட்டி -2 (முற்றும்)

ஒரு விமானத்தின் கருப்புப் பெட்டி அந்த விமானத்தை இயக்கும் நிறுவனத்தின் சொத்து. அதில் உள்ள தகவல்கள் குறித்து அந்த விமான நிறுவனத்துக்கும் விபத்து நடந்த நாட்டைச் சேர்ந்த விசாரணைக்குழுவுக்குமே முழு அதிகாரம் உண்டு. அவர்கள் விரும்பினால் வெளியிடலாம் அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக, காக்கா மோதியதால், மோசமான வானிலை காரணமாக என்று மிளகாய் அரைக்கப்படலாம். அவை விபத்துக் காரணங்களில் உள்ள வில்லங்கத்தைப் பொறுத்தது. விமான விபத்து என்பது பெரும்பாலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் கருப்புப்பெட்டித் தகவல்கள் அதிமுக்கியம் வாய்ந்தவையாக கருதப்படும்.

ஒரு கருப்புப்பெட்டி எந்த ஒரு நிலையிலும் கடந்த 25 மணி நேர விமானத் தகவலும், 30 நிமிட விமானி அறையின் உரையாடல்களையும் கொண்டிருக்கும். கருப்புப்பெட்டியில் சேமிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் ஒன்றுகளும், பூஜ்யங்களுமாகவே இருக்கும் (Binary Format). கருப்புப்பெட்டியில் இருக்கும் மெமரி, data frame எனப்படும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இந்த data frame பகுதிகளில் தகவல் சேமிப்பதற்கென்று ஒரு கட்டமைப்பு இருக்கும். உதாரணத்திற்கு ஒரு data frame என்பது 48 bits கொண்ட ஒரு binary word ஆக இருக்கும். இதற்கும் மேலாக இந்த data frame தன்னிடத்தில் சேமித்து வைத்திருக்கும் ஒன்றுகளும், பூஜ்யங்களும் விமானத்தகவல்களில் எதைக் குறிக்கின்றன, எந்த வரிசையில் குறிக்கின்றன (உயரம், நேரம், இயந்திரங்களின் நிலைகள்) இவையெல்லாம் பற்றிய தகவல் கோர்வையே data frame layout என்று அழைக்கப்படுகிறது. கருப்புப்பெட்டி மெமரியின் data frame layout பற்றித் தெரியாமல் ஒருவர் அதிலுள்ள தகவல்களைப் பார்த்தால் வெறும் ஒன்றுகளும் பூஜ்யங்களுமாகத் தான் தெரியும்.

கருப்புப்பெட்டி உலகில் பல நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நிறுவனங்கள் சர்வதேச வரைமுறைகளின் படி தயாரித்தாலும். data frame layout என்பது நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். எனவே எந்த ஒரு விமான சேவை நிறுவனமும் தாங்கள் இயக்கும் அனைத்து விமானங்களிலும் இருக்கும் கருப்புப்பெட்டி குறித்தான தகவல்கள் மற்றும் அவற்றின் data frame layout ஆகியவ்ற்றை உயிரினும் மேலாக பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். விபத்து நடந்த பின் கருப்புப்பெட்டித் தகவல்களின்றி தலை சொரியும் விமான சேவை நிறுவனங்கள் தங்கள் உரிமத்தைக் கூட இழக்க நேரிடும்.

எப்பொழுதுமே இந்த கருப்புப்பெட்டி செய்திகளில் அடிபடும் போதெல்லாம் கூர்ந்து கவனித்தால் விபத்து குறித்த தகவல்கள் தெரிவிக்க பத்து நாட்களாகும், ஒரு மாதமாகும் என்று சொல்லுவார்கள். ஏன்?. உண்மையில் கருப்புப்பெட்டியில் இருக்கும் தகவல்கள் கணினிகளில் சில நிமிடங்களில் மேலே படத்தில் உள்ள கருவி (Blackbox readout interface module) மூலம் சேமிக்கப்படும். மற்ற ஒன்பது நாட்களும் சேமித்த தகவல்கள் அனைத்தையும் மீள்கட்டமைப்பு (decoding) செய்வதிலே தான் செலவாகும். இந்த தகவல்களை மீள்கட்டமைப்பு செய்வதில் பல சிரமங்கள் உள்ளன. அதைச் செய்ய ஒரு குழு அமைக்கப்படும். விபத்துக்குள்ளான விமானத் தயாரிப்பு நிறுவனம், விசாரணைக் குழு, விமானத்தின் உரிமையாளர்/நிறுவனம் இவர்கள் அனைவரின் பிரதிநிதிகளின் முன்னிலையில் தான் தகவல்களை மீள்கட்டமைப்பார்கள். தொழில்நுட்ப ஆலோசனைகளை உடனுக்குடனே பெறவும், தகவல் பறிமாற்றம் எளிதாக நடக்கவுமே இந்த ஏற்பாடு.



இவை அனைத்துக்கும் மேலே கருப்புப்பெட்டி விபத்துக்குப்பின் கண்டுப்பிடிக்கப்படும் போது உள்ள நிலையும் தாமதத்திற்குக் காரணமாக அமையும். பெரும்பாலும் அடிவாங்கிய சொம்பு போல தான் கருப்புப்பெட்டி கிடைக்கும். சில சமயங்களில் மெமரி போர்டுகளும் பாதிப்படைவதுண்டு. தண்ணீருக்குள் இருந்து கண்டெடுக்கப்படும் கருப்புப்பெட்டிகள் ஆய்வு மையங்களுக்கு அனுப்பப்படும் போது beacon கருவியை நீக்கிவிட்டு ஒரு தண்ணீர் நிரப்பிய பாலிதீன் பையில் வைத்தே அனுப்புவது வழக்கம். ஈரம் உலர்வதால் ஏற்படும் ரசாயன மாற்றங்களைத் தவிர்க்க இந்த ஏற்பாடு. ஆய்வு மையத்தை அடைந்ததும் கருப்புப்பெட்டித் திறக்கப்பட்டு மெமரி போர்டுகளுக்கு முதலுதவி அளித்து, பாதிக்கப்பட்ட உதிரி பாகங்களை மாற்றி தகவல்களை மீட்டெடுப்பார்கள்.

இந்த கருப்புப்பெட்டி ஆய்வகம் அமைப்பதென்பது எளிதானது தான் என்றாலும் அதற்குரிய நிபுணர்கள் உலகளவில் மிகக்குறைவு. மேலும் அனுபவமிக்க நிபுணர்கள் மிகமிகக் குறைவு. மேலும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதால் நிபுணர்கள் அவ்வப்போது கருப்புப்பெட்டித் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி எடுத்து நாங்களும் யூத்து தான் என்று சொல்ல முடிந்தால் மிக நன்று. இந்த ஆய்வக வசதிகள் உலகில் எந்தெந்த நாடுகளில் உள்ளன?

நைஜீரியா,தென்னாப்பிரிக்கா,ரஷ்யா, இந்தியா, சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, பாகிஸ்தான், தைவான், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனோசியா, தென் கொரியா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, கனடா, சால்வடர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, பிரேசில் மற்றும் கொலம்பியா என கோபால் பல்பொடி கிடைக்கும் அனைத்து நாடுகளிலும் கருப்புப்பெட்டி ஆய்வகங்களும் இருப்பது தனிச்சிறப்பு.

மற்ற நாடுகள் தங்கள் நாட்டில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் மேற்கூறிய நாடுகளில் ஒன்றுக்கு அனுப்பி விசாரணையைத் தொடங்குவார்கள். அதுபோக கைப்பற்றப்பட்டக் கருப்புப்பெட்டியின் நிலைமை, ஆய்வக வசதி இருந்தாலும் அந்நாட்டின் நிபுணர்களின் அனுபவம், மெமரி போர்ட் பாதிப்புகள் ஆகியவற்றைப் பொருத்து அனுபவமிக்க நாடுகளுக்கு அனுப்புவதும் உண்டு. கருப்புப்பெட்டி விபத்து மர்மங்களுக்கு அருமருந்தாக இருப்பதை அனுபவத்தில் உணர்ந்து கார் தயாரிப்பாளர்கள் பல உயர்ரக கார்களிலும் கூட கருப்புப்பெட்டி பொருத்தத் துவங்கினர் உ.தா. pontiac sunfire.

கடந்த இரண்டு பகுதிகளிலும் கருப்புப்பெட்டி குறித்து தெரிந்தவற்றைப் புரியும்படி சொல்லியிருப்பதாக நினைக்கிறேன். எதிர்வரும் காலங்களில் கருப்புப்பெட்டி அல்லது விமான விபத்துகள் பற்றிய செய்திகளை நீங்கள் எதிர்கொள்ளும் போது உங்களின் பார்வை மாறியிருக்கும். அப்படி மாற்றுவதே இப்பதிவின் நோக்கம். ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கு நன்றி கூறி இத்தொடர் நிறைவடைகிறது.

இணையத்தில் புகைப்படங்கள் வெளியிடும் முன் - 2 (முற்றும்)




நாம் பயன்படுத்துவது டிஜிட்டல் புகைப்படக் கருவிகளோ, செல்பேசிகளோ எதுவாக இருந்தாலும் அதது தங்கள் சக்திகேற்ப எடுக்கப்படும் புகைப்படங்களில் அனைத்து விவரங்களையும் exif metadata பகுதியில் விதைத்துவிடும். சில உயர்ரகக் கருவிகளில் GPS வசதியிருப்பின் புகைப்படம் எடுக்கப்படும் இடத்தின் விவரங்கள் கூட இலவச இணைப்பாக வழங்கப்படும்.

பிரபலமான வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் தங்கள் இணையதளத்தில் ஹேக்கிங் (hacking) குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டது. அக்கட்டுரைக்காக அனுபவமிக்க ஒருவரிடம் பேட்டிக்குச் சென்ற போது அவர் தனது இருப்பிடம், பெயர் குறித்தான தகவல்கள் இன்றி வெளியிட வேண்டும் என்ற நிபந்தனையோடு பேட்டியளித்தார், சில முகம் தெரியாத புகைப்படங்களும் எடுக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டன. ஆர்வக்கோளாரில் அப்படங்களின் exif metadata பகுதியினைப் பிரித்து மேய்ந்த சில வாசகர்கள் அந்த ஹேக்கரின் இருப்பிடத்தை வெளியிட்டு மகிழ்ந்தனர். இப்படிப் பல சம்பவங்களின் மூலம் புகைப்படங்களை இணையத்தில் பயன்படுத்தும் போது ரகசியத்தன்மையைப் பாதிக்கும் ஒரு தவறான கண்ணோட்டத்திலேயே இவை பார்க்கப்பட்டாலும் ஒரு சிலருக்கு இது மிகமிக உதவியாக இருக்கிறது. அவர்கள் தொழில்முறை புகைப்படக்காரர்கள். ஒரே காட்சியைப் பலவிதமான தொழில்நுட்ப நிலைகளில் (technical settings) படமெடுக்கும் இவர்களுக்கு, அவற்றைப் பின்னர் ஆராயும் போது மிக நன்றாக வந்திருக்கும் படங்களை எடுக்கும் போது என்னென்ன தொழில்நுட்ப நிலைகளைப் பயன்படுத்தியிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வது மிக எளிது.

சரி, exif metadata பகுதியினைப் பார்வையிட பல மென்பொருட்கள் இணையமெங்கும் நீக்கமற நிறைந்த்திருக்கின்றன. கூகுளாடி தங்கள் தேவைக்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இத்தொடரில் irfanview என்ற இலவச மென்பொருள் மூலம் எப்படி செய்வது என்று பார்ப்போம். முதலில் கீழே இருக்கும் சுட்டிகளின் மூலம் irfanview மென்பொருளினையும், தேவையான கூடுதல் வசதிக்கான நிரல்களையும் (plugins) உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளவும்.




இப்பொழுது எந்தப் படத்தின் exif metadata பகுதியினைப் பார்வையிட வேண்டுமோ அப்படத்தை ifranview மென்பொருள் மூலம் திறக்கவும். பின்னர், image-> information -> EXIF info* என்ற இடத்திற்கு சென்றால் exif meta data பகுதியின் தரிசனம் கிடைக்கும் ( படங்களைப் பெரிதுபடுத்திப் பார்க்கவும்).

இப்பொழுது பார்த்தாயிற்று, இணையத்தில் பகிர்ந்து கொள்ளும் முன் இவற்றை எப்படி அகற்றுவது?. புகைப்படங்கள் வெட்டுவதற்கு, சிறிதாக்குவதற்கு, பெரிதாக்குவதற்குப் பயன்படுத்தும் image processing வகை மென்பொருட்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம். சில மென்பொருட்கள் தாமாகவே exif metadata பகுதியினை நீக்கிவிடும். நீங்கள் பயன்படுத்தும் மென்பொருள் அவ்வாறு நிக்குகிறதா என்பதனை மேலே சொல்லப்பட்டிருக்கும் முறைப்படி அவற்றை பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளவும். நீக்கப்படாமல் இருப்பின் irfanview மென்பொருள் மூலமே அகற்றிவிடலாம். தேவையானப் புகைப்படத்தை irfanview மென்பொருளில் திறக்கவும். பின்னர் file->save as என்ற இடத்திற்கு சென்றால் சேமிக்கும் படிவத்திற்கு அருகில் சில வசதிகளும் பட்டியலிடப்பட்டிருக்கும். அவற்றில் 'reset exif orientation tag' என்ற வசதியினைத் தேர்வு செய்து பின் சேமிக்கவும். அவ்வளவுதான் உங்கள் படம் இப்போது இணையத்தில் பகிர்ந்து கொள்ள தயார். கேதரின் நிலை ஏற்படாமலிருக்க ஒருமுறை thumbnail படத்தையும் சரிபார்த்துக் கொள்வது மிக்க நன்று.

இதுவரை சொன்னவை அனைத்தும் ஒரு பொதுவான பாதுகாப்பிற்கு மட்டுமே. தொழில்நுட்பங்கள் கண்டபடி வளர்ந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் எப்பொழுதுமே தங்கள் சொந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிடும் முன் ரூம் போட்டு ஒரு முறைக்கு நாலு முறை யோசித்து கொள்வது அறிவுறுத்தப்படுகிறது, முக்கியமாக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பெண்களின் புகைப்படங்கள். இது தவிர புகைப்படங்கள் தவறான கைகளுக்கு சென்றால் விளைவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் :D.

மேலே உள்ள படம் இத்தொடரைப் படித்து அதன் மூலம் புரிதல் ஏற்பட்டவர்களுக்கான ஒரு சோதனைப் பயிற்சி. இப்படத்தின் exif meta data பகுதியினைப் பார்த்து உங்களுக்கு தெரியவரும் தகவல்களைப் பின்னூட்டத்தில் ஊட்டி விட்டால் மிக்க மகிழ்ச்சியடையப்படும் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொண்டு இத்தொடர் நிறைவடைகிறது. மேலதிக விபரங்கள் தேவைப்பட்டாலோ அல்லது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலோ பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

சுடுதண்ணி, சமைக்கத் தெரிந்தவர்!


உங்களுக்கு என்ன சமைக்கத் தெரியும் ? எனக்கு நல்லா சுடுதண்ணி வைக்கவரும்ன்னு சிலர் சொல்வாங்க.. சுடுதண்ணி வைக்கிறது தான் ஈஸியானது என்று சொல்லிக்கொள்கிறார்கள். அதுபோல பல கஷ்டமான அல்லது புரியாத விசயங்களை சுடுதண்ணி வைக்கிறது போலவே ஈஸியாக மாற்றித் தருகிறார். மின்னஞ்சல் ரகசியங்கள் என்கிற தொடர் மூலமாக அக்குவேறு ஆணிவேறாக ஒரு மின்னஞ்சலை பிரித்து ஆராய்ந்து பார்க்க கற்றுத் தருகிறார்.
விமானத்தின் கருப்புப்பெட்டி என்ன செய்யும் விமானத்தில் நீங்கள் சொகுசாக ஏறி இறங்கும் நேரத்தில் எத்தனை பேரின் உழைப்பு தரையில் அதனை சாத்தியப்படுத்துகிறது என்பது அனைத்தும் தெளிவாக விளக்குகிறார்.
இணையத்தில் பிஷ்ஷிங் மற்றும் மெமரி டிஸ்க் அபாயங்களைப்பற்றிய குறிப்புகள் அனைவருக்கும் பயனுள்ளவை. ஐபி விவரங்கள் ஹச்டிடிபிஎஸ் , இணைய பணப்பறிமாற்றங்கள் , இணையத்தில் நடைபெறும் எழுத்து திருட்டுகள் என தொடர்ந்து பயனுள்ள தகவல்களை பகிர்ந்து வருகிறார். அதனால் தான் சொல்லுகின்றோம், சுடுதண்ணி, சமைக்கத் தெரிந்தவர்!. எப்படியென்று நீங்களும் பார்க்க வேண்டாமோ..?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையம் - 1


மனதுக்கு இதமாக இரவு நேரங்களில் மொட்டை மாடியில் விண்மீன்களும், நிலாச்சோறும் ரசித்திருப்பீர்கள். பகலில் 'நீலவான ஓடையிலோ' அல்லது 'வானம் எனக்கு போதிமரமோ' முணுமுணுத்துக் கொண்டு மேகங்களை வெறித்திருப்பீர்கள். இது போன்ற சுகமான விஷயங்களை மறந்து 24 மணி நேரமும் ஆபத்தை எதிர்பார்த்து ஒரு கூட்டம் கொட்டாவி விடக் கூட மறந்து வானத்தைப் பார்த்து கொண்டிருக்கிறது, ஒவ்வொரு நாட்டிலும். அவர்கள் யார்?, பயன்படுத்தும் தொழிநுட்பம் என்ன? அதில் உள்ள சவால்கள் குறித்து ஒரு பார்வை.

வான் பாதுகாப்பு என்பது ரேடார் தொழில்நுட்பம் அறிமுகமாகும் வரை வாடகை மிதிவண்டியில் ஊர்சுற்றுவதைப் போல போர் விமானங்களில் பறந்து திரிவது மூலமாகவே நடைபெற்றது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு விமானத்தாக்குதல்கள் தந்த அனுபவத்தினாலும், தனது ஏவுகணைத் தொழில்நுட்பங்களால் தூக்கத்தைக் கெடுத்த ஜெர்மனியாலும் ரேடார் தொழில்நுட்பம் துரிதமாக மேம்படுத்தப்பட்டது. வான் பாதுகாப்புக்குப் பயன்படுத்தப்படும் ரேடார்கள் தேடுவது அதிவேகமாக பயணிக்கும் ஆபத்தான ஏவுகணைகளை. ஏவுகணைகள் என்பது ராக்கெட் தொழிநுட்பத்தின் மூலம் வெடிகுண்டுகளை குறிப்பட்ட இடத்தை நோக்கி ஏவி விடுவது. செயற்கைக்கோள் ஏவப்படும் ராக்கெட்டுகளுக்கும் இதற்கும் மிகச்சில வித்தியாசங்கள் மட்டுமே. முன்னது புவியீர்ப்பு விசையை தாண்டிச் செல்லும் (escape velocity), பின்னது செல்லாது. அந்த வெடிகுண்டுகள் என்பது பச்சைச் சணலில் சுற்றிய மான் மார்க் பட்டாசுகள் முதல் ஆயிரம் கிலோ உள்ள நிஜ அணுகுண்டாகவும் இருக்கலாம். ஏவுகணைகள் தாங்கிச் செல்லும் எடை, பயணிக்கும் தூரம், வேகம் ஆகியவற்றின் அடிப்படையில் பலவகைப் படும். அவற்றுள் மிகவும் சக்தி வாய்ந்தது தான் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (ICBM - Inter continental Ballistic Missile).

இந்த வகை ஏவுகணைகள் தொடுவானப் பகுதியிலிருந்து (horizon) மேலுழும்பிய பிறகு தான் ரேடார் கண்களுக்குத் தட்டுப்படும். அதன் பிறகு நமக்குக் கொடுக்கப்படும் நேரம் 8 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே. அதற்குள் தாக்குதல் நடக்கும் நாட்டிற்குப் பதில் தாக்குதல் நடத்துவதும், அதனை முறியடிக்கும் எதிர்-ஏவுகணைகளை ஏவுவதும் அல்லது கண்ணை இறுக்கி மூடிக்கொண்டு ஸ்ரீராமஜெயம் சொல்லுவதும் நேயர் விருப்பம். மேற்கண்ட சமாச்சாரங்கள் நடக்கும் இடம் தான் வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையம் (air defense early warning system). முன்னெச்சரிக்கை மையத்தில் 24 மணி நேரமும் ரேடார் வல்லுநர்கள், கட்டுப்பாடு அறை அதிகாரிகள், தொழில்நுட்ப உதவியாளர்கள் வேலையில் இருப்பார்கள். ரேடார் மூலம் பெறப்படும் வானலைகளைக் காட்சிப் படுத்தும் கணினிகளும், உயர் அலைவரிசை ரேடியோக்களும், நாட்டின் தலைவரோ அல்லது ராணுவத் தளபதியோ எவருக்கு தாக்குதல் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் இருக்கிறதோ அவருக்கு ஒரு நேரடி இணைப்புக் கொண்ட தொலைபேசியும், மற்ற விமானப்படை மையங்களுக்கு தொடர்புகொள்ளும் வசதிகளும் இருக்கும். பணக்கார நாடுகள் அல்லது எதிரிகள் அதிகமுள்ள நாடுகள் (உ.தா. அமெரிக்கா) ரேடார்களோடு செயற்கைக்கோள்கள் மூலம் மொத்த பூமியையும் எங்காவது வெடி வைக்கிறார்களா என்று உற்றுப் பார்த்து கொண்டிருப்பார்கள்.

இவற்றுக்கு பயன்படுத்தப்படும் ரேடார்கள் 30 கி.மீ உயரத்தில் 300 கி.மீ தொலைவுக்குள் இருக்கும் அனைத்துத் தகவல்களையும் திரட்டும் திறன் பெற்றிருக்கும்.இவை ஒவ்வொரு சுற்றாக வான் அலைகளை காற்றில் அனுப்பி, அவை பிரதிபலிக்கப்பட்டால் திரும்பி உள்வாங்கிக் கொண்டு பிரதிபலிக்கக் காரணமான பொருளின் (போர் விமானங்கள்/ஏவுகணைகள்) உயரம், தூரம், அவற்றின் அகலாங்கு, நெட்டாங்கு (lattitude and longitude) ஆகியத் தகவல்களைப் பெற்றுத் தரும். இப்படி ஒவ்வொரு சுற்றாக தொடரும் போது, இடமாற்றத்தை கணக்கில் கொண்டு அவைகளின் வேகத்தையும் கணித்துத் தரும். இவற்றை ஒருங்கிணைத்துக் காட்சிப்படுத்தித் தருவது கணினிகள் மற்றும் மென்பொருட்களின் வேலை.

சரி, ஏவுகணை வருகிறது என்ன செய்வது?. எதிர்-ஏவுகணை (anti ballistic missile) தொழில்நுட்பம் கைவசம் இருந்தால் (உதா. பேட்ரியாட், பிரித்வி) அவற்றை உபயோகப்படுத்தலாம். இந்தத் தொழில்நுட்பம் கைவரப்பெற்ற நாடுகள் (அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல், சைனா, இந்தியா) உலகில் ஐந்து மட்டுமே. மற்றவர்கள் வசதிக்கேற்ப விலைக்கு வாங்கி வைத்துக் கொள்வதுண்டு. தாக்க வரும் ஏவுகணையின் அகலாங்கு, நெட்டாங்கு கிடைத்தவுடன், எதிர்-ஏவுகணை ஏவுதளங்களின் அகலாங்கு நெட்டாங்கு மூலம் இரண்டுக்கும் இடையேயான தொலைவு வான்மைல்களில் (nautical miles) கணக்கிடப்பட்டு அவற்றின் பயணப்பாதையில் குறுக்கிடுவதற்கேற்ப எதிர்-ஏவுகணைகள் ஏவப்படவேண்டும். உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, மேற்படி வேலைகள் அனைத்தையும் மிகச் சொற்ப நிமிடங்களில் செய்து முடித்தாக வேண்டும். இத்தகைய தாக்குதலுக்கு இரண்டு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஒன்று தாக்கப்பட்டதற்குப் பின் பதில் தாக்குதல் நடத்துவது அல்லது முன்னெச்சரிக்கைத் தகவல் கிடைத்தவும் தாக்கத் தொடங்குவது (launch on warning and launch on attack).

அணுஆயுதங்கள் இருக்கும் நாடுகளுக்கு இடையே இருக்கும் முன்னெச்சரிக்கை தகவல் மையங்கள் மிகமிக விழிப்புடன் இருக்கும். அவற்றுக்கு இடையே தாக்குதல் மூண்டால் எதிரியின் ஏவுகணை நம் வீட்டில் இறங்கும் முன் நமது ஏவுகணைப் புறப்படும் வண்ணம் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கும். நாமில்லா விட்டால் எதிரியும் இருக்கக் கூடாது என்ற நல்லெண்ண அடிப்படையில் இந்த ஏற்பாடு (Mutual Assured Destruction - MAD).

எந்தெந்த நாடுகளுக்கு இந்த முன்னெச்சரிக்கைத் தகவல் மையம் தேவைப்படுகிறது?. கூடவே கிரிக்கெட் விளையாடிக் கொண்டு முக்கிய நகரங்களுக்குள் உல்லாச படகுச் சவாரியில் ஆயுததாரிகளை அனுப்பி வைக்கும் அண்டை நாடுகள் ஏவுகணைத் தொழில்நுட்பத்தோடு இருந்தால் அவசியம் தேவை. அவர்கள் அணுஆயுத பலம் பெற்றிருப்பின் கூடுதல் சிறப்பு. இவ்வளவு வசதிகளும் செய்து கண்காணித்தாலும், வான்பகுதி உண்மையாகவே பாதுகாப்பாக இருக்கிறதா ?. இந்த தொழில்நுட்ப வசதிகளின் நம்பகத்தன்மை என்ன? இவை குறித்து அடுத்த பகுதியில்.



விண்டோஸ் கணனிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய 470 டூவீட்கள் தரும் மென்பொருள்


விண்டோஸ் கணனியை பயன்படுத்துபவர்கள் எப்போதும் கவலைப்படுவது அதன் பாதுகாப்பு பற்றியதே.
புரவுசிங்க் செண்டர் போன்ற பொது இடங்களில் இருக்கும் கணனிகளை அதிகமானோர் பயன்படுத்துவதால் இன்னும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

ஏற்கனவே பாதுகாப்பிற்காக விண்டோஸில் செய்யவேண்டிய சில நடவடிக்கைகள் உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

அவற்றையும் கஸ்டமைஸ் செய்வதோடு மேலதிகமாக கணனி பாதுகாப்பு திட்டங்களை செயற்படுத்துதல், அத்துடன் உங்கள் கணனியில் அத்துமீறி நுழைபவர்களை தடுக்க,

பாஸ்வேட் பாதுகாப்புடன் டுவீட் செய்யப்பட்ட அனைத்து ஆப்ஸன்களையும் ரீசெட் செய்யவும் முடிந்தால் நல்லது தானே.

அதற்காகதான் True System Security Tweaker என்ற மென்பொருள் இருக்கின்றது.
இந்த மென்பொருள் மூலம் விண்டோஸ் கணனிக்கு அவசியமான 470 பாதுகாப்பு செயற்பாடுகளை டுவீக் செய்யலாம்.

இது ஒரு போர்ட்டபிள் அப்பிளிகேஷன். எனவே இதை இயக்கியதுமே பயன்படுத்த தொடங்கலாம். இதன் நவிகேஷன் பாரில் இடப்பக்கத்தில் எல்லா லோகேஷன்களையும் அக்ஸஸ் செய்யலாம்.

மேலும் User Restrictions மற்றும் Windows Common Restrictions என்ற பிரிவுகளின் கீழே ஏராளாமான டுவீட்களை செய்யலாம்.

விண்டோஸ் கணனியின் எல்லா பிரிவுகளையும் உள்ளடக்கிய Desktop, Credential manager இருந்து Control panel வரை , Drives restriction, File system இல் இருந்து Software restrictions வரை மற்றும் Network போன்றவைகளையும் டூவீக் செய்யலாம்.
எடிட் மெனுவில் எல்லா டுவீட்களையும் அண்டூ செய்யவும் பாஸ்வேட் கொடுத்து பாதுகாக்கவும் முடிகிறது. எல்லா விண்டோஸ் களிலும் இயங்குகிறது.

சாதாரண கணனி பாவனையாளர்களுக்கும் அத்துடன் இன்ரநெட் செண்டர்களுக்கும் இந்த மென்பொருள் பயன் தருவதாக இருக்கும்.

டவுண்லோட் செய்ய : http://coolstuff.ws/software/systweaker/

விர்ச்சுவல் டிரைவ்களை உருவாக்க டிரைவ் டுவீக்கர்


உங்கள் கணனியில் விர்ச்சுவல் டிரைவ்களை உருவாக்க உதவுகிறது டிரைவ் டுவீக்கர் என்ற மென்பொருள். அத்துடன் குறிப்பிட்ட டிரைவ்வை லாக் செய்யவும் இதன் மூலம் முடிகிறது. கணனியில் புதிதாக விண்டோஸ் தீம்களை பயன்படுத்தும் போது டிரைவ்வின் ஐகான் மற்றும் பிண்ணனி நிறங்களை மாற்றுவதையும் இந்த டூல் மூலம் செய்யலாம்.

டிரைவ் டுவீக்கரில் உள்ள லாக் டிரைவ் என்ற பயன்பாட்டின் மூலம் கணனியில் இருக்கும் டிரைவ்களை லாக் செய்யலாம். டவுண்லோட் செய்வதற்கு இங்கே.

http://www.sourceforge.net/projects/drivetweaker/

ஐஐடி வீடியோ விரிவுரைகள் அனைவரும் பார்க்கும் படி யூடியூப்பில்.


The Indian Institute of Science (IISc) and IITs இன்சினியரிங்க் காலேஜ் உலகின் மிகப்பெரும் தொழில்நுட்ப வீடியோ விரிவுரைகளை அனைவரும் பயன்பெறும் வகையில் உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
தற்போது ஐஐடி மற்றும் ஐஐஎஸ்சி விரிவுரைகளை தொடர்ச்சியாக பதிவு செய்து சுமார் 4750 வீடியோக்களை யூடியூப்பில் வெளியிட்டுள்ளது.

youtube.com/iit எனும் முகவரியில் மாணவர்கள் பார்த்து பயன்பெறலாம்.

விண்டோஸ் கணனியின் தொடக்க வேகத்தை அதிகரிப்பது எப்படி?.


கிடைக்கின்ற எல்லா மென்பொருட்களையும் கணனியில் நிறுவி கணனி ஆரம்பிக்கும் போதே அவையும் தொடங்குமாறு கட்டளை வழங்கியிருப்பீர்கள்.
இவ்வாறு தொடர்ச்சியாக செய்துவரும்போது முடிவில் கணனி ஆரம்பிக்கும் நேரத்திற்குள் பல வேலைகளை முடித்துவிடலாம்ம் என்ற நிலை வந்து விடும்.

பொதுவாக விண்டோஸ் கணனியில் உருவாகின்ற இந்த பிரச்சனைக்கு அதிகம் கணனி தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களை அறிந்திராத சாதரண பாவனையாளரும் பயன்பெறும் வகையில் தீர்வு கிடைக்கின்றது.

Soluto என்ற இலவச யுட்டிலிட்டி மூலம் விண்டோஸ் தொடங்கும் நேரத்தை கணக்கிட்டு எந்த எந்த மென்பொருட்களுக்கு எவ்வளவு நேரம் எடுக்கின்றது, அவற்றில் எந்த மென்பொருட்களை நிறுத்திவிடலாம் எவற்றை நிறுத்தினால் பாதிப்பு இருக்காது போன்ற விபரங்களும் விண்டோஸ் இயங்க அவசியமான சில அப்பிளிகேஷன்களை நிறுத்த முடியாது போன்ற விபரங்களும் காட்டப்படும்.

இந்த யுட்டிலிட்டி மூலம் விண்டோஸ் தொடங்கும் போது நேரத்தை வீணாக்கும் அவசியமில்லாத அப்பிளிகேஷன்களை நிறுத்திவைக்க அல்லது தற்காலிகமாக தடைசெய்யவும் ஆப்ஸன்கள் உண்டு.


நீங்களும் பயன்படுத்தி பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே. டவுண்லோட் செய்ய

http://updater.prodenv1.mysoluto.com/updates/solutoinstaller.exe

இணையத்தள முகவரி : http://www.soluto.com/

இந்த வீடியோவில் இன்னும் சற்று விபரங்கள் தருகிறார்கள்.

விண்டோஸ் அப்பிளிகேஷன்களை இலகுவாக ஒரே கிளிக்கில் தடுப்பதற்கு


விண்டோஸில் இயங்கும் ஒரு சில புரோகிராம்களை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ நிறுத்திவைக்க விரும்புவீர்கள். அதை இலகுவாக செய்வதற்கு app admin என்ற போர்ட்டபிள் டூல் உதவுகிறது.
நிறுத்திவைக்க விரும்பும் புரோகிராமை Drag drop முறையில் இந்த டூலில் சேர்த்து restart Explorer என்பதை தட்டினால் போதும் குறிப்பிட்ட அப்பிளிகேஷன் தடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தரப்படும்.
இதை விட வேறு வகையான வழிகள் உங்களுக்கு தெரிந்தால் எம்முடன் பகிருங்கள்.