மலேசியாவை சேர்ந்த ஒரு பெண் தனது கணவன் மேல் பாய்ந்த புலியை ஒரு பெரிய மரக்கரண்டியைக் கொண்டு தலையிலேயே அடித்து விரட்டியுள்ளார்.
மலேசியாவின் வட பகுதியில் அடர்ந்த காடுகள் அதிகம். இங்கு பாரம்பரிய வேட்டைத் தொழிலில் ஈடுபட்டு வரும் ஜகாய் பழங்குடியினர் ஒரு பகுதியில் வசித்து வருகின்றனர். பழங்குடியினர் குடியிருப்பை சேர்ந்த டாம்புன் ஜெடியூ என்பவர் நேற்று தனது குடிசைக்கு அருகிலேயே அணில் வேட்டையில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென அவர் மீது புலி ஒன்று பாய்ந்து அவரை தாக்கியது. இவர் அருகில் இருந்த மரத்தில் ஏறி தப்ப முயன்றுள்ளார். அப்போதும் புலி அவரை விடாமல் கீழே தள்ளியுள்ளது. புலியின் வாயை இறுகப் பிடித்துக் கொண்டபடி டாம்புன் அபயக்குரல் எழுப்பியுள்ளார். இதைக் கேட்ட அவரது மனைவி பெரிய மரக்கரண்டியை எடுத்து வந்து, புலியின் தலையிலேயே ஒரு போடு போட்டுள்ளார். இதனால் புலி தலை சுற்றியபடி அருகில் இருந்த புதருக்குள் பாய்ந்து தப்பியோடி விட்டது. இதையடுத்து தலையிலும், கால்களிலும் காயங்களுடன் நகர்ப்பகுதி மருத்துவமனை ஒன்றில் டாம்புன் அனுமதிக்கப்பட்டார். அவர் கூறியதாவது,"எனது மனைவி மட்டும் உரிய நேரத்தில் வரவில்லை என்றால் நான் இறந்திருப்பேன்" என்றார். இதுபற்றி கேள்விப்பட்ட வனத்துறை அதிகாரிகள் சம்பந்தம் நடைபெற்ற இடத்தில் இருந்து, ஆள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த காட்டுக்குள் புலியை விரட்டியடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வளர்ச்சியில் ஐப்பான் இடத்தைக் கைப்பற்றியது சீனா |
|
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் கடந்த 42 ஆண்டுகளாக 2 ம் இடத்தில் இருந்த ஜப்பானை பின்னுக்குத் தள்ளி சீனா 2 ம் இடத்தைப் பிடித்தது.
கடந்த 2010 ம் ஆண்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி பற்றிய புள்ளி விவரங்களை ஜப்பான் அரசு வெளியிட்டது. ஜப்பானில் கடந்த ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மதிப்பு 251 லட்சம் கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டைவிட 3.9 சதவீத வளர்ச்சியாகும். குறிப்பாக அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 1.1 சதவீதமாக சரிந்தது. 2008 ல் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்குப் பிறகு முதன் முறையாக பொருளாதார வளர்ச்சி சரிவிலிருந்து மீண்டது குறிப்பிடத்தக்கது. மக்களின் வாங்கும் சக்தி குறைந்தது, கடன் சுமை அதிகரிப்பு, முதியவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் ஜப்பான் நாணயமான யென் மதிப்பு உயர்ந்தது ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்கு தடைக்கல்லாக அமைந்தன. இதனால் கடந்த 42 ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் 2 ம் இடத்தில் இருந்த ஐப்பான் அந்த இடத்தை இழந்துள்ளது. இந்நிலையில் சீன பொருளாதாரம் கடந்த ஆண்டில் 10 சதவீதம் வளர்ந்து 270 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களை உற்பத்தி செய்துள்ளது. இதனால் முதல் முறையாக உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் 2 ம் இடத்தைப் பிடித்தது. எனினும் ஜப்பானியர்களின் தனிநபர் சராசரி வருமானம் 19.3 லட்சமாக உள்ளது. இது சீனாவைவிட 10 மடங்கு அதிகம். இந்த பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. எனினும் 2025 ம் ஆண்டில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி சீனா முதலிடத்தைப் பிடிக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 |
|