Tuesday, August 31, 2010

அரச இலவச மருந்தை மோசடி செய்வோருக்கு ஆயுள் தண்டனை சட்டத்திருத்தம் விரைவில் வருகிறது

அரசாங்கத்தினால் நோயாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மருந்து வகைகளைத் தனியார் மருந்தகங்களுக்கு சட்ட விரோதமான முறையில் வழங்குபவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கக் கூடிய வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படவிருக்கின்றது.
இம்மருந்து வகைகளைக் கொள்வனவு செய்து விற்பனை செய்யும் தனிநபர்களுக்கும் இத்தண்டனையை விதிக்கக் கூடிய வகையில் சட்டம் திருத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அரச ஆஸ்பத்திரிகளில் நோயாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டிய ஒரு தொகை மருந்து வகைகளை புறக் கோட்டையிலுள்ள தனியார் மருந்தகமொன் றுக்கு நபரொருவர் வழங்கியுள்ளார். இந் நபருக்கும், இம் மருந்து வகைகளை கொள்வனவு செய்த தனியாருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்படும்.
இதற்கு ஏற்ற வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை மருந்துப் பொருள் உற்பத்தி யாளர்கள் சங்கத்தின் வருடாந்த அமர்வு நேற்று முன்தினம் கொழும்பில் நடை பெற்றது. இந்த அமர்வில் பிரதம அதிதி யாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப் பிட்டார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்று கையில், அரசாங்க ஆஸ்பத்திரிகளில் நோயாளர்களுக்கு இலவசமாக வழங்கப் படும் மருந்து வகைகளின் ஒரு தொகுதி புறக்கோட்டையில் தனியார் மருந்தக மொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட் டிருந்த சமயம் இரு வாரங்களுக்கு முன் னர் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர் பான புலன்விசாரணையை குற்றப் புல னாய்வு திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
“எமக்கு இந்த மருந்து வகைகள் கொண்டு வந்து தரப்பட்டது. அதனை வாங்கி நாம் விற்பனை செய்தோம். மற்றபடி எமக்கு எதுவும் தெரியாது என்று தனியார் மருந்தக வர்த்தகர் வாக்கு மூலம் அளித்துள்ளார். இது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத பதிலாகும். குறித்த வர்த்தகர் சிறுபிள்ளை அல்லவே. இப்படியான அர்த்தமற்ற கூற்றுக்களை நம்புவதற்கு அரசாங்கமோ, நானோ தயாரில்லை.
இப்படியான மோசடிகள் நீண்டகாலமாக இடம் பெற்று வந்தாலும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை உடனுக்குடன் எடுக்கப்படாததால் அவை கட்டுப்படுத்த முடியாத நிலையை அடைந்திருக்கின்றது. இவ்வாறான முறைகேடுகளை கட்டுப்படுத்துவதற்கும் தற்போது நடைமுறையிலுள்ள சட்ட ஏற்பாடுகளும் போதியதாக இல்லை. அதன் காரணத்தினால் இவ்வாறான மோசடிகளைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்றவகையிலான சட்டத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள் ளேன்.
இப்படியான செயலில் ஈடுபடுவோரு க்கு ஆயுள் தண்டனை வழங்கக் கூடிய வகையில் சட்டத்தில் திருத்தம் செய்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு உத் தேசித்திருக்கின்றேன் என்றார். 

பொன்சேகாவிற்கு எதிராக தொடுக்கப்பட்டது போன்று சந்திரிக்காவிற்கு எதிராகவும் வழக்கு தொடர திட்டம்

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ளதனைப் போன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு எதிராகவும் அரசாங்கம் வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளதாக பிரபல சிங்கள இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகாவிற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளுக்கு நிகரான வகையில் பல வழக்குகள் சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கும் தொடரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
சந்திரிக்கா நிதி அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் மேற்கொண்ட லோகோமெட்விச் கொடுக்கல் வாங்கல்கள், எமிரேட்ஸ் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல்கள், ஏவன்ஸ் இன்டர்நெசனல் கொடுக்கல் வாங்கல்கள் உள்ளிட்ட பல கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் வழக்குத் தொடரப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
அமைச்சரவை அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு கொடுக்கல் வாங்கல் தொடர்பிலும் வழக்குத் தொடரப்பட மாட்டாது எனவும், ஏனெனில் சந்திரிக்காவின் அரசாங்கத்தின் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவை அமைச்சராக கடமையாற்றியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொண்டு ஏதேச்சாதிகாரமொன்றை நோக்கி அரசாங்கம் நகர்வதாகவும், அதனை தடுக்கக் கூடிய சர்வதேச ரீதியில் செல்வாக்குடையவர்களை முடக்கும் நடவடிக்கைளக் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறித்த சிங்கள இணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இஸ்ரேல், பலஸ்தீன் நேரடிப் பேச்சுவார்த்தை வாஷிங்டனில்: மஹ்மூத் அப்பாஸ், பெஞ்சமின் நெதன்யாஹு அமெரிக்கா பயணம்


இஸ்ரேல், பலஸ்தீனர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் இவ்வாரம் அமெரிக்காவில் ஆரம்பமாகவுள்ளன. இதை யடுத்து பலஸ்தீன ஜனாதிபதி மஃமுத் அப்பாஸ் இஸ்ரேல் பிரதமர் பென்ஜெமின் நெதன்யாஹு ஆகியோர் வாஷிங்டன் செல்ல வுள்ளனர். பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக் குமா என்கின்ற சந்தேகம் இரண்டு தரப்பினருக்குமிடையேயுள்ள நிலையில் இந்த நேரடிப் பேச்சுக்கள் ஆரம்பமாகவுள்ளன.
இதற்கு முன்னர் இரண்டு நாடுகளுக்கு மிடையே மறை முகமான பேச்சுக்கள் நடந்து வந்தன. இதை எகிப்தும் அமெ ரிக்காவும் இணைந்து ஏற் பாடு செய்தன. தற்போது ஆரம்பமாகவுள்ள நேரடிப் பேச்சுவார்த்தைகளின் எதிரொலிகள் இரண்டு தலைவர்களதும் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிப்பதாய் அமையும். அந்தளவுக்கு உள்ளூர் அழுத்தங்களைச் சுமந்தவண்ணம் இந்த தலைவர்கள் பேச்சுக்களில் பங்கேற்கவுள்ளனர்.
செவ் வாய்க்கிழமை தொடங்கவுள்ள இந்த நேரடிப் பேச்சுவார்த்தைகளில் யார் விட்டுக் கொடுப்புடன் நடந்துகொள்ளப் போகின்றனர் என்பது இதுவரைக்கும் தெரியவில்லை. ஆனால் இது தொடர்பாக இரு தரப்பார் சார்பாகவும் கருத்துக்கள் வெளியிடப் பட்டுள்ளன. இந்த அருமையான சந்தர்ப்பத்தை இஸ்ரேல் தவற விடக்கூடாது. சமாதானத்தைக் கொண்டுவருவதற்கு ஒரு வீதமளவு சந்தர்ப்பமிருந்தாலும் அதை நாங்கள் பற்றிப் பிடிப்போம் எனத் தெரிவித்தார்.
பலஸ்தீன ஜனாதிபதி மஃமூத் அப்பாஸ். பாதுகாப்பு, ஸ்திரத் தன்மை, பொருளாதாரம் என்பவற்றின் அடையாளங்களுக்கு மத்தி யில்தான் சமாதானத்தை அடையமுடியு மெனத் தான் நம்புவதாக இஸ்ரேல் பிரதமர் தெரிவித்தார். இவ்விடயத்தில் நிறைய சிக்கல்கள் உன்டென்பது எனக்குத் தெரியும்.
இப்பிரச்சினையின் வேறுபாடுகள் குறித்தும் நான் அறிவேன் ஆனால் பல ஸ்தீனர்களுக்கு வெளிச்சமூட்ட நான் விரும்பவில்லை இஸ்ரேலர்களை நோக்கி பலஸ்தீனர்கள் மனமுவந்துவர வேண்டும் இதிலே தான் ஆரம்பமாகவுள்ள பேச்சு வார்த்தைகளின் எதிர்காலம் தங்கியுள்ள தென்றும் இஸ்ரேல் பிரதமர் தெரிவித்தார். அப்பாஸ¤ம், நெதன்யாஹுவும் சமாதானப் பாதைக்கு வெகு தொலைவிலுள்ளனர். இவர்களால் இப்பேச்சுவார்த்தையை வெற்றிக்கு இட்டுச் செல்ல முடியாதென அவதானிகள் தெரிவித்தனர்.
ஜெரூஸலத்தின் எதிர்காலம், மேற்குக் கரை மீள்குடியேற்றம் தொடர்பாக உத்தரவாதமளிக்கப்படாவிட்டால் நெதன் யாஹு அரசாங்கத்திலிருந்து வெளி யேறப் போவதாக சில கட்சிகள் எச்சரித் துள்ளன. இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எஹுட் பராக் இஸ்ரேலியர்களின் நலன் கள் பாதுகாக்கப்படவேண்டுமென்பதில் அக் கறையுடனுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் காஸா முற்றுகை தொடர்ந் தாலும், மீள்குடியேற்றம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டாலும் நேரடிப் பேச்சு வார்த்தைகளிலிருந்து வெளியேறுவேன் என்று மஹ்முத் அப்பாஸ் எச்சரித்துள்ளார். இவ்வாறான சூழலுக்கு மத்தியில் பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகவுள்ளன.
அமெரிக்காவின் அழுத்தத்தைத் தொடர்ந்தே இஸ்ரேல், பலஸ்தீன தலைவர்கள் நேரடிப் பேச்சுக்கு இணங் கினரே தவிர உண்மையான மனதுடன் செல்லவில்லையென்பது இத் தலைவர்களின் அறிக்கைகளுடாகத் தெரிகின்றது.
இரு நாடுகளின் அடிப்படை விட யங்களில் தொடர்ந்தும் பிடிவாதமான போக்கைக் கடைப்பிடிப்பதே நீண்டகால இழுபறிக்கும் காரணமாகும்.

பணிப்பெண் சித்திரவதையை கண்டித்து, சவுதி அரேபிய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாக இருந்த சமயத்தில் உடலில் ஆணிகளும் ஊசிகளும் செலுத்தப்பட்டு ஆரியவதி என்ற இலங்கைப் பெண் சித்திரவதை செய்யப்பட்டிருந்ததைக் கண்டித்து கொழும்பிலுள்ள சவுதி தூதரகம் முன்பு ஓர் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.
சவுதி அரேபியாவுக்கு செல்கின்ற வெளிநாட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளை சவுதி அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கொழும்பில் உள்ள சவுதி தூதரகம் முன்பு பெருந்திரளாகக் கூடி நின்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டதோடு பலவித வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
ஆரியவதிக்கு நடந்தது போன்ற கொடுமை வேறு எவருக்கும் நடக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு சவுதி அரேபிய அரசாங்கத்துக்கு உள்ளது என்பதை வலியுறுத்துவது இவர்களுடைய ஆர்ப்பாட்டத்தின் நோக்கமாக இருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு சவுதி தூதரகம் முன்பு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
அரசியல் பிரமுகர்கள், ஆர்வலர்கள், மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப் பெண்களாக சென்று திரும்பியிருந்தவர்கள் என்று பல தரப்பினராக சுமார் 400 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
மத்தியகிழக்கிற்கு வேலைக்கு செல்வோருக்கு அரசாங்கம் வழங்கிவருகின்ற உதவி ஒத்தாசைகள் போதாது என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் சவுதி தூதரகத்தில் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

வயது 14; உயரம் 6 அடி 9 அங்குலம் : அசத்துகிறார் பிரேஸில் சிறுமி!

  "எனது உயரமே எனக்குச் சாதமான சூழலை ஏற்படுத்தித் தந்துள்ளது" என பிரேஸிலைச் சேர்ந்த 14 வயது சிறுமி எலிசனி சில்வா கூறுகிறார். 

14 வயது சிறுமி எலிசனி சில்வாவின் உயரம் என்ன தெரியுமா? 6 அடி 9 அங்குலம். 

அடேயப்பா... ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா? 

சாதகமான சூழலை மட்டுமல்ல, சில வேளைகளில் பாதகமாகவும் தனது உயரம் அமைந்து விடுகின்றது என்றும் அவர் கூறுகின்றார்.

அதாவது அவர் பாடசாலை செல்லும் போது பஸ்களில் பயணிக்க முடியாத நிலை உள்ளதாகக் கூறி கவலைப்படுகின்றார் எலிசினி. 

'மாடலிங்கி'ல் நாட்டம் கொண்டுள்ள இவர், பிரேஸிலில் இடம்பெறப் போகும் மணப்பெண் அலங்காரப் போட்டி ஒன்றிலும் கலந்து கொள்ளவுள்ளதாக அந்நாட்டு இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

14 வயதிலேயே இந்த உயரம் என்றால்...பருவமடைந்து, இளம்பெண்ணாகும் போது இவரது உயரம் எப்படி இருக்கப் போகின்றதோ? திருமணம் என்று வரும் போது இவருக்கேற்ற மணவாளனைத் தேடுவதில் இவரது பெற்றோர் என்ன சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்குமோ தெரியவில்லை. _

அடுத்த வருடம் இளவரசர் வில்லியம் - கேட் திருமணம்

  இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸ் - டயானா தம்பதியின் மூத்த மகன் வில்லியம் அடுத்த வருடம் திருமணம் முடிப்பார் என அந்நாட்டு அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இவர் கேட் மிடில்டன் என்ற பெண்ணை நீண்டகாலமாகக் காதலித்து வருகிறார். 

இதைத்தொடர்ந்து வில்லியம்-கேட் இருவரினதும் திருமணத்தை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆவது வார இறுதியில் நடத்த அரச குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

இவர்களது திருமணம் வெஸ்ட் மினிஸ்டர் அப்பே என்ற இடத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இங்குதான் மறைந்த இளவரசி டயானாவின் இறுதிச் சடங்கு கடந்த 1997ஆம் ஆண்டு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

எலிசபெத் மகாராணியின் வைரவிழாவும், லண்டன் ஒலிம்பிக் போட்டியும் எதிர்வரும் 2012ஆம் ஆண்டு நடைபெற உள்ளன. அதற்கு முன்னர் இவர்களது திருமணத்தை நடத்த அரச குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. _

Children Buried Alive in the Amazon