Wednesday, September 15, 2010

ஈபிள் கோபுரத்தில் வெடிகுண்டு எச்சரிக்கை - மக்கள் வெளியேற்றப்பட்டனர் (வீடியோ இணைப்பு)


பிரான்ஸ் தலைநகர் பரிசில் அமைந்துள்ள ஈபிள் கோபுரத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இக்கோபுரத்தில் குண்டுவைக்கப்பட்டிருப்பதாக, இக்கோபுரத்தை நிர்வகிக்கும் நிறுவனத்திற்கு இனந்தெரியாத நபர் ஒருவர் பிரான்ஸ் நேரப்படி இன்று (செவ்வாய்) இரவு 9 மணியளவில் தொலைபேசி மூலம் எச்சரிக்கைவிடுத்தார்.

அதையடுத்து அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளும் ஏனையோரும் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டனர். அவ்வேளையில் சுமார் 25,000 பேர் ஈபிள்கோபுரப் பகுதியில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கோபுரத்தைச் சுற்றியுள்ள பூங்காவிலிருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

324 மீற்றர் (1063 அடி) உயரமான ஈபிள் கோபுரம் 1889 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது.

இதற்குமுன் 2005 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதியும் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக ஈபிள் கோபுரத்திலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

22.07.2003 இல் தீவிபத்து ஒன்றின் காரணமாக அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்தின் புரூனோ கான்ஸிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

சுவிட்சர்லாந்தின் மூத்த நடிகர்களில் ஒருவரான புரூனோ கான்ஸிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.
ஐரோப்பிய திரைப்பட அக்கடமியினால் இந்த விருது வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் எஸ்டோனியாவில் நடைபெறவுள்ள ஐரோப்பிய திரைப்பட விழாவில் 64 வயதான புரூனோவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.
உலகின் மிக முக்கியமான பல இயக்குனர்களின் கீழ் புரூனோ தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடொல்ப் ஹிட்லர் போன்ற மிகவும் சிக்கல் மிகுந்த கதாபத்திரங்களுக்கு புரூனோ உயிரூட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பெண்களுக்கு சவாலாக அமையும் கர்ப்பப்பை புற்றுநோய்

 இன்றைய காலக்கட்டத்தில் பெண்களை தாக்கும் முக்கிய நோயாக புற்று நோய் காணபப்டுகிறது.இது குறித்து பெண்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, அதிநவீன பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறையில் தோன்றியுள்ள புதிய முறைகள், முன்னேற்றங்களால் இது சாத்தியமானது.இதில் கர்ப்பப்பை புற்றுநோய் பெண்களிடையே பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

எனினும், பெரும்பாலானோர் இடையில் , புற்றுநோய் ஒரு குணப்படுத்த முடியாத நோய் என்ற கருத்து நிலவுகிறது.

புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. தலை முதல் கால் வரை எந்தப் பாகத்தையும் புற்றுநோய் தாக்கலாம். இருப்பினும், தலை மற்றும் கழுத்துப் பகுதியிலும் உணவுக் குழாயிலும் வரும் புற்றுநோய் ஆண், பெண் இரு பாலரையும், கர்ப்பப்பை மற்றும் மார்பகங்களில் ஏற்படும் புற்றுநோய் பெண்களையும் அதிகமாகத் தாக்குகிறது. அபாய அறிகுறிகள் என்ன? நாள்பட்ட ஆறாத புண், மார்பகம் அல்லது வேறு உறுப்புகளில் வலியுள்ள அல்லது வலியற்ற கட்டி, மச்சத்தின் நிறம் அல்லது உரு மாற்றம், நாள்பட்ட இருமல் அல்லது குரல் மாற்றம், உணவு உண்ணுவதில் தடை, உடலில் எந்தப் பகுதியிலாவது நீர் அல்லது ரத்தக் கசிவு, சிறுநீர் அல்லது மலம் கழித்தல் போன்ற வழக்கங்களில் மாற்றம் ஆகியவை புற்று நோயின் ஏழு அபாய அறிகுறிகளாகும்.

சில வகை புற்றுநோய்கள் பரம்பரையாகவும் வருவதுண்டு. பெற்றோரில் ஒருவருக்கோ இருவருக்குமோ இருந்தால், குழந்தைகளுக்கு இந்த நோய் வரும் வாய்ப்புகள் அதிகம்.புற்றுநோயின் தொடக்க நிலையில், ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர் புற்று நோயாளி என்று சொல்ல முடியாது. நோய் முற்றிய நிலையில் ஏற்படும் சில அறிகுறிகளை வைத்து மட்டுமே சொல்ல முடியும். எனவே, அவ்வப்போது முறையாகப் பரிசோதனை செய்துகொள்வது ஒன்றுதான், புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் வழியாகும்.

புற்றுநோய் ஏற்பட குறிப்பிட்ட எந்த வகை உணவும் காரணம் என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், நார்ச்சத்து அதிகமுள்ள பச்சைக் காய்கறிகளை அதிகளவில் சேர்த்துக்கொண்டால், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும்.

கர்ப்பப்பை புற்றுநோய்:

இந்திய பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் முதலிடத்தில் உள்ளது. போதிய விழிப்புணர்வு இல்லாதது, இளம் வயதிலேயே திருமணம் செய்து பல முறை கருத்தப்பது, கருத்தடை மாத்திரைகளை அதிக அளவில் உபயோகித்தல், பல ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்ளுதல், பிறப்பு உறுப்புகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளாதது ஆகிய காரணங்களால் இந்நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

அறிகுறிகள்:

மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு இருப்பது, மாதவிலக்குக்கு இடையில் ரத்தப்போக்கு இருப்பது, மாதவிலக்கு முழுவதும் நின்றபின் வெள்ளைபடுதல் அல்லது ரத்தப்போக்கு இருப்பது, உடலுறவின்போதோ அல்லது பின்போ ரத்தக்கசிவு இருப்பது ஆகியவை இதற்கான அறிகுறிகள். கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க எளிய, வலியில்லாத பரிசோதனை முறை பேப் சிமியர் சோதனை ஆகும். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு முதன்மை சிகிச்சையாக கதிரியக்கச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கழிவுகளோடு கழிகிறது வாழ்க்கை (பட இணைப்பு)

  சன நடமாட்டம் அதிகமுள்ள கதிரேசன் வீதியின் ஒரு புறத்தில் வழிந்தோடிக்கொண்டிருந்த சேற்றுத் தண்ணீரில் தனது இரு கைகளாலும் மண்ணை அள்ளி கழுவிக்கொண்டிருந்தார் ஒருவர்.உழைப்பின் களைப்போடு பார்வையில் ஒரு வேகம். யாருடைய கேளி, கிண்டல்களையும் பொருட்படுத்தாது தனது வேலையில் மும்முரமாக இருந்த அவரை நெருங்கினோம்.

“எத்தனையோ பேர் இப்படித்தான் வந்து கேக்குறாங்க. ஆனாலும் என்ன பிரயோசனமுங்க” என விரக்தியுடன் எம்மை வரவேற்றார். ஜயபால என்பதுதான் அவருடைய பெயர். ஐம்பத்திரண்டு வயதாகும் அவருக்கு குடும்பம், பிள்ளைகள் என எதுவும் இல்லை. கதிரேசன் தெருவில் கால் நீட்டும் அளவுக்கு எங்கு இடம் கிடைத்தாலும் படுத்துறங்குகிறார். அதுதான் அவருக்கு சொந்தமாக வேலையொன்று செய்ய முடியாததற்கான காரணம்.

வசிப்பிடமற்றவர்களுக்கு தொழில் தர மறுக்கும் மனிதர்களுக்கிடையில் வாழவேண்டும் என்பதற்காக இந்தத் தொழில். – போன்ற தகவல்களை அவருடன் பேசியபோது அறிந்துகொண்டோம்.“செட்டியார் தெருவிலுள்ள நகைக் கடைகள்ல வேல செய்வேன். ஒவ்வொரு கடயிலயும் மலசலக் கூடங்கள கழுவனும், குப்பைகள துப்புறவு பண்ணனும். அதுக்கு 100 ரூபா செலவாகுமுங்க.

அப்படி செஞ்சு முடிச்ச பிறகு அங்க உள்ள தூசுகளை அள்ளிக்கொண்டு வருவேன். கழிவு னு சொல்லி நான் பார்க்க மாட்டேன். எல்லாத்தையும் எடுப்பேன். எச்சில், கழிவு எல்லாம் கலந்து வழிந்தோடும் தண்ணீரில் கைகளை விட்டுத் தான் அள்ளி எடுப்பேன். இது பழகிப் போயிடுச்சி.நான் வேலை செய்ற கடைகள்ல இருந்து கிட்டத்தட்ட 10 கிலோ குப்பைகளும் தூசுகளும் ஒரு நாளைக்கு சேரும்.

அத கொண்டு வந்து இந்தமாதிரி சேற்றுத் தண்ணியில கழுவுவேன். நல்லா கழுவுன பிறகு தங்கத் தூசுகள், துண்டுகள் இருக்கும். நகைக் கடையில பட்டற தீட்டுற நேரம் வார தூசுகள் தான் இது.அந்த மாதிரி கிடைக்கிற எல்லாத்தையும் சேர்த்து விற்பேன். சாதாரணமா ஒரு நாளைக்கு 600 ரூபா வரைக்கும் வருமானம் கிடைக்கும். ஒரு சில நாட்கள்ல வருமானமே இருக்காது. 2000 ரூபா வருமானம் வந்த நாளும் இருக்குது.

சுத்தமான தண்ணியில கழுவ முடியாதுங்க. மாசம் பில் கட்டணும் தானே அதனால அதுக்கு யாரும் அனுமதிக்க மாட்டாங்க. எனக்கும் வீடு வாசல் இல்ல. இந்த அசுத்தமான தண்ணியில தான் வேல செய்றேன்'. எமது முகத்தைக் கூட பார்க்காமல் தனது வேலையை செய்துகொண்டே கூறிமுடித்த ஜயபால, இன்னும் என்ன தகவல் வேண்டும் என ஏறிட்டுப் பார்த்தார். கடுமையான உழைப்பின் அறிகுறியாய் வியர்வை துளிர்த்துக்கொண்டிருந்தது.

ஜயபாலவைப் போல நிறைய பேர் இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் அதிகமானோர் தாம் உழைக்கும் பணத்தை போதைக்கே செலவுசெய்துவிடுகின்றனர். ஆனால் தான் அப்படியில்லை என உறுதியாகக் கூறும் அவர் கழிவுநீரோடு தினமும் போராடுவதால் போதை அவசியம் தான் என்கிறார். அந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என நாம் கூறியதும் புன்னகை மட்டுமே அவரிடத்திலிருந்து பதிலாகக் கிடைத்தது.

நாம் பேசிக்கொண்டிருந்தபோதே கழிவு நீருக்குள் இருந்த தங்கத் துகள்களை குதூகலத்துடன் எமக்குக் காட்டினார்.அந்தச் சந்தோசத்துடன் ஜெயபாலவிடமிருந்து விடைபெற்றோம்.


நாளுக்கு நாள் உலகம் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வுகள் அதிகமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அவற்யையெல்லாம் மூன்றாவது தேவை எனக் கருதும் சிலர் இப்படியும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

மனித முகத்தில் மீன் (பட இணைப்பு)

  மனித முகத்தைக் கொண்ட மீன் ஒன்று மல்வானை பகுதியில் பெரும் அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மல்வானைப் பகுதியில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட மீனை சிறுமி ஒருவர் வாங்கி வந்த போதே குறித்த மீனில் மனித முகம் காணப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். 





__