Monday, September 13, 2010

மனஅழுத்தத்தை குறைக்கும் இன்டர்நெட்

நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்டர்நெட் பயன்படுத்துவதால் சாதகமான மருத்துவ பயன் ஏற்படுவதாக கூறும் ஆராய்ச்சி வெளிவந்துள்ளது.
டீன்ஏஜ் மனஅழுத்த நோயாளிகள், இன்டர்நெட் பார்ப்பதால் குணமாகலாம் என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த இந்திய ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். ‘இன்டர்நெட் செல்ப் ஹெல்ப் பார் டெப்ரஷன்’ என்ற தலைப்பில் சிட்னி பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய பேராசிரியர் சுவனா சேத்தி ஆய்வு நடத்தினார்.
மனஅழுத்தம் கொண்ட டீன்ஏஜ் வயதினரை தேர்வு செய்து, இன்டர்நெட்டில் மனநலம் குறித்த தகவல் பரிமாற்ற இணைய தளங்களை பார்த்து வர செய்தார். இணைய தளங்களில் மனஅழுத்தத்துக்கு மருத்துவ நிபுணர்களின் கலந்துரையாடல், சிகிச்சை ஆலோசனைகள் பெற்ற டீன்ஏஜ் வயதினர், பாரம்பரிய சிகிச்சை பெற்றவர்களைவிட வேகமாக குணமானது தெரிய வந்தது.
டாக்டரிடம் நேரில் மனஅழுத்த பாதிப்புகளை விளக்குவதை விட ஆன்லைன் ஆலோசனை தளங்களில் பதிவு செய்வது துல்லியமாக இருப்பதால், நிபுணர்கள் அளிக்கும் ஆலோசனைகளால் மனஅழுத்தம் வேகமாக குறைகிறது.
டாக்டர்களில் நேரில் ஆலோசனை பெறச் செல்லும் இளைஞர்கள் பல விஷயங்களை தெரிவிக்க மறந்து விடுகின்றனர். இதனால், சிகிச்சை சரியாக அமையாமல் பிரச்னை நீடிக்கிறது என்கிறார் டாக்டர் சுவனா சேத்தி.

அரேபியாவில் இருந்து பிலிப்பைன்ஸ் சென்றபோது விமானத்துக்குள் ரகசியமாக ஆண் குழந்தை பெற்ற பெண்; குப்பை தொட்டிக்குள் வீசிவிட்டு ஓட்டம்


அரேபிய நாட்டில் இருந்து பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு பயணிகள் விமானம் வந்தது. அதில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்று விட்டனர். இதை தொடர்ந்து விமானத்துக்குள் இருந்த குப்பைத் தொட்டியை சுத்தம் செய்ய துப்புரவு ஊழியர்கள் அதை வெளியே எடுத்து வந்தனர்.

விமானத்தை விட்டு இறங்கியதும் அந்த குப்பையை ஊழியர்கள் தரம் பிரித்தனர். அப்போது அதில் சிறிது நேரத்துக்கு முன்பு பிறந்த ஆண் குழந்தை ஒன்று டிஷ்சு பேப்பரில் சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் விமான நிலைய டாக்டருக்கு தகவல் கொடுத்தனர். உடனே நர்சுடன் டாக்டர் அங்கு விரைந்து வந்தார். பேப்பரில் சுற்றப்பட்டிருந்த அந்த குழந்தையை வெளியே எடுத்தனர்.

அக்குழந்தை சிறிது நேரத்துக்கு முன்புதான் பிறந்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ரத்தம் கூட காயாமல் அப்படியே இருந்தது. விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண் பயணி ரகசியமாக குழந்தை பெற்று அதை குப்பை தொட்டியில் வீசியது தெரியவந்தது.

உடனே அக்குழந்தையை மணிலா விமான நிலைய ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து நர்சுகள் சுத்தம் செய்தனர். மேலும் உடலை பரிசோதித்தனர். அது மிகவும் உடல் நலத்துடன் உயிருடன் இருந்தது.

இதைத்தொடர்ந்து அந்த குழந்தைக்கு பாட்டில் மூலம் பால் கொடுக்கப்படடது. அதை குடித்தவுடன் அக்குழந்தை லேசாக அழ தொடங்கியது. பின்னர் அக்குழந்தை நினோய் அகினோ ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு சமூகசேவகர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே விமானத்தில் கள்ளத்தனமாக குழந்தை பெற்று அதை குப்பை தொட்டியில் வீசி சென்ற பெண்ணை கண்டு பிடிக்கும்படி பிலிப்பைன்ஸ் சமூக நலத்துறை செயலாளர் சரிமன் உத்தரவிட்டுள்ளார்.

அப்பெண் யார் என கண்டறிந்து அவளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும், இது ஒரு கிரிமினல் குற்றம் என்றும் அவர் கூறினார்.

பியசேன 4 மாதத்திற்கு முன்னர் எழுதிய கடிதம் அம்பலம் (கடிதம் இணைப்பு)





இவ் வருடம் மே மாதம் இறுதிப் பகுதியில் பியசேன தான் மகிந்தவுடன் சேரவிருப்பம் எனத் தெரிவித்து எழுதிய கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பியசேன கையெழுத்தும் அவர் அலுவலக முத்திரையும் போடப்பட்டுள்ளது.

அவர் சுமார் 4 மாதத்திற்கு முன்னரே மகிந்தவுக்கு எழுதிய கடிதம் குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு முன்னரே சிலர் தகவல் கொடுத்துள்ளனர், இருப்பினும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உயர்பீடம் இதுகுறித்து கவனம் செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.

இக் கடிதத்தை இலங்கையில் இருக்கும் நபர் ஒருவர் இணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் இதுகுறித்து பியசேன சரியான விளக்கம் எதனையும் கொடுக்க மறுத்துவிட்டார். கடந்த சில மாதங்களாக, கூட்டமைப்பின் உள்ளக செயல் திட்டங்களையும், நிகழ்ச்சி நிரலையும் இவர் அரச தரப்புக்குக் கூறிவந்ததாகவும் சொல்லப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள இக் கடிதத்தை முழுமையாக ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை என்பதையும் தெரிவிக்க விரும்புகிறது.

ஒசமா பின்லேடன் பேரப் பிள்ளைகளை சுமந்த வாடகைத் தாய் மீது தாக்குதல்

அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் ஒமர் பின்லேடனின் குழந்தைகளை சுமந்திருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த வாடகைத் தாய் மீது சிலர் திடீர் தாக்குதல் நடத்தியதில் அவரது கர்ப்பம் கலைந்து வயிற்றில் வளர்ந்து வந்த இரட்டைக் குழந்தைகளும் உயிரிழந்து விட்டன.
பின்லேடனின் மகன் ஒமர் பின்லேடன். இவர் 54 வயதான இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெய்னாவை (முன்னாள் பெயர் ஜேன் பெலிக்ஸ் பிரவுன்) மணந்து கொண்டார். ஆனால் ஜெய்னா கர்ப்பமாகத் தகுதி இல்லாதவராக இருந்ததால் லூயிஸ் போலார்ட் என்ற பெண்ணை வாடகைத் தாயாக அமர்த்தினர்.
அவர் சோதனைக் குழாய் மூலம் உருவாக்கப்பட்ட ஒமர் பின் லேடனின் கருவை தனது வயிற்றில் சுமந்து வந்தார். 10 வார கால கர்ப்பமாக அவர் இருந்து வந்தார். இந்த நிலையில், லூயிஸ் மீது திடீரென சிலர் நடத்திய தாக்குதலில் வயிற்றில் இருந்த கர்ப்பம் கலைந்து விட்டது.
ஜெய்னாவும், லூயிஸும் சிரியாவில் பயணம் மேற்கொண்டிருந்தனர். இருவரும் சேர்ந்து போய்க் கொண்டிருந்தபோது இரண்டு பேர் வந்து லூயிஸை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் நிலை குலைந்து விழுந்தார். இதனால் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டு விட்டது.
இந்த தாக்குதலில் லூயிஸுக்கு கை, கால்கள், கண்களில் அடி விழுந்து காயம் ஏற்பட்டது.
24 வயதான லூயிஸ், பிரிஸ்டலைச் சேர்ந்தவர். தாக்குதலுக்குப் பின்னர் தனது வீட்டுக்குத் திரும்பிய லூயிஸ், பின்னர் மருத்துவமனைக்குச் சென்று சோதனைக்குட்படுத்திக் கொண்டார். அப்போது ஸ்கேன் செய்து பார்த்தபோதுதான் கருச்சிதைவு ஏற்பட்டது தெரிய வந்தது.
எதற்காக இந்தத் தாக்குதல் நடந்தது என்பது தெரியவில்லை. இருப்பினும் லேடனின் பேரக் குழந்தைகளை சுமந்திருந்த காரணத்தால்தான் அவர் தாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து ஒமரிடம் கேட்டபோது, எல்லாம் விதி என்று மட்டும் பதிலளித்தார். ஜெய்னாவும், ஒமரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஓநாய் வளர்க்கும் தம்பதியினர் : கலிபோர்னியாவில் அதிசயம்!

  கலிபோர்னியாவைச் சேர்ந்த தம்பதியினர் கடந்த சில வருடங்களாக சுமார் 10 ஓநாய்களைத் தங்கள் வீட்டில் வளர்த்து வருகின்றனர்.

போல் பொண்டெலா - கொலெட் டுவால் தம்பதியினரே மேற்படி கொடிய விலங்குகளுடன் வாழ்ந்து வருபவர்களாவர். 

மேற்படி தம்பதியினர் சில வருடங்களுக்கு முன்னர் 'பிளக் அலஸ்கன் டிம்பர்' வர்க்கத்தைச் சேர்ந்த பெண் ஓநாய் ஒன்றினை மீட்டுள்ளனர். 

இவர்கள் இந்த ஓநாய்களை மிகவும் பாசமாக, தமது குழந்தைகளைப் போல் வளர்த்து வருகின்றனர். 

எனினும் காட்டு விலங்குகளான இவற்றைச் சாதாரண வீட்டுப் பிராணிகள் போல பயிற்றுவிப்பதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படுவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர். 

விலங்குகளிடம் அன்பு செலுத்துவதன் மூலம் அவற்றைப் பாசமிக்கவையாக மாற்றமுடியுமெனவும் இதற்கு தாம் வளர்க்கும் ஓநாய்கள் சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றன எனவும் இவர்கள் தெரிவிக்கின்றனர். 

தங்களது பிள்ளைகளும் தாம் வளர்க்கும் ஒந்நாய்களும் மிக வேகமாக வளர்ந்து வருவதனால் புதியதொரு வீட்டுக்குக் குடிபெயர உள்ளதாகவும் மேற்படி அதிசய தம்பதியினர் தெரிவிக்கின்றனர். __

ரோபோடிக் துறையில் புதிய புரட்சி: இலத்திரனியல் தோல்

தொடுகையை உணரக்கூடிய இலத்திரனியல் தோலினை கலிபோர்னிய பேர்கலி பல்கலைக்கழக உயிரியல் விஞ்ஞானிகள் குழுவொன்று உருவாக்கியுள்ளது.

மேற்படி இலத்திரனியல் தோலானது எந்திரனியல் (ரோபோடிக்) மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சைகளில் புதிய அத்தியாயமொன்றை உருவாக்குமென தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது ஆய்வுகூட பரிசோதனை அளவிலேயே இருக்கும் மேற்படி தோலானது, மனித தோலைப் போன்று மிக வேகமாக தொடுகைகளை உணர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமுக்கத்தை உணரக் கூடிய உயர் உணர்திறனை கொண்டமையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இலத்திரனியல் தோலானது சிலிக்கோன், நெனோ வயர்கள் மற்றும் ஜேர்மானியம் என்பவற்றால் ஆக்கப்பட்டுள்ளது.

மேலும் நெனோ ஸ்கேல் ட்ரான்ஸ்சிஸ்டர் மற்றும் இலகுவான இறப்பர் என்பனவும் இதில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.

இதனை மிகவும் மலிவாக உருவாக்க முடியுமெனவும், இதன் இயக்கத்திற்கு மிகக் குறைந்த அளவிலான மின்சக்தியே ( வோல்டேஜ்) தேவையெனவும் கருதப்படுகின்றது.

எதிர்காலத்தில் இரசாயனப் பொருட்கள் மற்றும், வெப்பம், ரேடியோக் கதிர்கள் என்பனவற்றுக்குத் துலங்களைக் காட்டக்கூடிய சென்ஸர்களை மேற்படி தோலில் உள்ளடக்க தாம் எதிர்ப்பார்ப்பதாக அவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

எதிர்காலத்தில் மனிதர்கள் உள் நுழைய முடியாத இடங்களில் கூட இலத்திரனியல் தோல் கொண்ட ரோபோக்களைக் கொண்டு தாம் நுழைய எதிர்ப்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.