அதிகமாக எவரும் பேசிவிட்டால், 'வாய் கிழிய' (விரிய)ப் பேசுகிறார் என்பார்கள். உண்மையிலேயே வாய் கிழியும் ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?
ஆம். அவர் தான் பிரான்சிஸ்கோ டொமின்கோ ஜொஹாகுயிம் என்பவர். உலகின் மிக அகலமான வாயைக் கொண்டவராக இவர் கருதப்படுகின்றார்.
அங்கோலாவைச் சேர்ந்த 20 வயதான பிரான்சிஸ்கோ டொமின்கோ ஜொஹாகுயிமின் வாயானது றப்பரைப்போல் சுமார் 6.69 அங்குல அகலத்திற்கு விரிக்கக் கூடியது என்றால் நம்ப முடிகிறதா?
இவரின் வாயினுள் சிறிய குளிர்பான கேன் ஒன்றையே அடைக்கமுடியும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
அண்மையில் இத்தாலிய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தோன்றிய இவர் சிறிய குளிர்பான கேனை 1 நிமிடத்திற்குள் 14 தடவைகள் வாயில் போட்டு பின்பு வெளியில் எடுத்துக் காட்டியுள்ளார்.
இவரின் பெயர் தற்போது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் பதியப்பட்டுள்ளது.
மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் உள்ளூர் மயமாக்கப்பட்ட செயல்களுக்கான சிறப்பு மையத்தினால் (LAKapps) முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகளில் ஒன்றான 'தமிழ் இணையத்தள வடிவமைப்புப் போட்டி 2010 – யாழ். மாவட்டம்' இணையத்தள வடிவமைப்புப் போட்டி யாழ். மாவட்டத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
யாழ். மாவட்டத்திலுள்ள பல பாடசாலை மாணவர்கள் ஆர்வத்துடன் இப்போட்டிக்கு விண்ணப்பித்து, தொடர்ந்து தமது இணையத்தளங்களை வடிவமைத்து வருகிறார்கள்.
மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் உள்ளூர் மயமாக்கப்பட்ட செயல்களுக்கான சிறப்பு மையமானது, கணினியை உள்ளூர் மொழிகளில் பயன்படுத்துவது சம்பந்தமான ஆய்வுகள் மற்றும் செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இம்மையத்தினால் மென்பொருள்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உள்ளூர்மயமாக்கம் (Localisation) செய்யப்பட்டு வருகின்றன.
அத்தோடு உள்ளடக்க உள்ளூர்மயமாக்கம், உள்ளூர்மொழிகளில் உள்ளடக்க அபிவிருத்தி, உள்ளூர்மொழிகளில் கணிமை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள் ஆகியனவும் இம்மையத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் ஆகும். இச்சிறப்பு மையமானது LAKapps மையம் எனவும் அழைக்கப்படுகிறது.
தமிழ்மொழியில் கணிமை தொடர்பான செயற்திட்டம் ஒன்று கடந்த வருடம் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. இதற்கமைய பாடசாலை மாணவர்கள், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் கிழக்கு மாகாணத்தில் பல பாடசாலைகளிலும், அறிவகங்களிலும், கணினி வளநிலையங்களிலும் நடத்தப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான ஒரு இணையத்தள வடிவமைப்புப் போட்டியும் நடத்தப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டன. இச்செயற்திட்டம் மாணவர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இவ்வருடம் யாழ் மாவட்டத்தில் தமிழ் கணிமை சம்பந்தமான செயற்திட்டம் ஒன்று இந்த LAKapps மையத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைய யாழ் மாவட்டத்தில் உள்ள யாழ்ப்பாணம், வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி ஆகிய கல்வி வலயங்களிலுள்ள பல பாடசாலைகளிலும், புலோலி கணினி வள நிலையத்திலும், யாழ். உயர் தொழில்நுட்பவியல் நிறுவகத்திலும் தமிழ் கணிமை சம்பந்தமான விழிப்புணர்வுக் கருத்தரங்குகள், தமிழ் இணையத்தள வடிவமைப்பு பற்றிய பயிற்சிப்பட்டறைகள் ஆகியன நடத்தப்பட்டன.
இக்கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகளில் ஏறக்குறைய 1000 மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஏனைய பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
யாழ். பாடசாலைகளிலிருந்து 180 இற்கும் அதிகமான மாணவர்கள் தனியாகவும் குழுக்களாகவும் இணைந்து 69 இணையத் தளங்களைப் போட்டிக்காக வடிவமைத்து வருகிறார்கள். இப்போட்டிக்காக இணையத்தளங்களை சேமிப்பதற்கு இணைய இடவசதியை LAKapps மையம் இலவசமாக ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
இதற்கமைய விண்ணப்பதாரிகள் தங்களது இணையத்தளங்களை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்து எமக்குச் சமர்ப்பிக்கவேண்டும்.
இப்போட்டியில் 1ஆம், 2ஆம் மற்றும் 3ஆம் இடங்களைப் பெறும் இணையத்தளங்களை வடிவமைத்த வெற்றியாளர்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்கள் வழங்கப்படும்.
அத்தோடு ஒவ்வொரு வலயத்திலிருந்தும் மேலதிகமாக தகுதியான ஆகக் கூடிய இரண்டு இணையத்தளங்களுக்குச் சிறப்புப் பரிசில்களும் தகுதியானவை என நடுவர்களால் தெரிவு செய்யப்படும் இணையத்தளங்களை வடிவமைத்த மாணவர்களுக்கு பங்கு பற்றியதற்கான சான்றிதழ்களும் வழங்கப்படும்.
இவை அனைத்தும் அடுத்த மாதம் இடம்பெறும் விருது வழங்கும் விழாவில் வழங்கப்படும்.
இந்தச் செயற்திட்டம் பற்றிய மேலதிக விபரங்களுக்கும் விசாரணைகளுக்கும்
இணையத்தளம் : www.lakapps.lk/llcj/
மின்னஞ்சல் – sarvesk@uom.lk
தொலைபேசி – 0114216061 - உடன் தொடர்பு கொள்ளலாம். _
உலகின் அதி வேக சுப்பர் கணினியை (Super Computer) கொண்ட நாடு என்ற பெருமையை சீனா நேற்று பெற்றுக்கொண்டது.
டியானி (Tianhe) - 1 A என அழைக்கப்படும் கணினியே அது. இதன் வேகம் 2.507 பீடாபுலொப்ஸ் (Petaflops). அதாவது ஒரு செக்கனில் 2,507 ட்ரில்லியன் கணிப்புக்களை மேற்கொள்ளக்கூடியதாகும்.
இது மற்றைய சுப்பர் கணினிகளைவிட 43 வீதம் வேகம் கூடியது.
இக்கணினியானது சீன தேசிய பாதுகாப்புத் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தினாலேயே (National University of Defence Technology (NUDT) உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கான மொத்த செலவு 88 மில்லியன் அமெரிக்க டொலர்கள். சுமார் 200 பொறியியலாளர்களால் 2 வருட கடும் உழைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. இது இயங்குவதற்கு மொத்தமாக 4.04 மெகாவோற்ஸ் மின்சாரம் தேவைப்படுகின்றது.
இக்கணினி, 14,336 இண்டெல் ஸியோன் சிபியுக்கள் ( CPU ) மற்றும் 7,168 Nvidia Tesla M2050 ஜி.பி.யுக்களையும்( GPU - Graphics processing unit) கொண்டுள்ளது.
முதன் முறையாக 2009 ஆம் ஆண்டு இக்கணினி உருவாக்கப்பட்டது. அதன்போது இது உலகின் 5 ஆவது வேக கணினி என்ற பெருமையை மட்டுமே கொண்டிருந்தது.
ஆனால் தற்போது இது நன்கு மேம்படுத்தப்பட்டதையடுத்து உலகின் 'அதிவேக கணினி' என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இதுவரை அமெரிக்காவின் கிரேஸி எக்ஸ்.டி5 ஜகுவார் Cray XT5 Jaguar, உலகின் அதிவேக சுப்பர் கணினியாக இருந்து வந்தது. இது 224,162 ஒப்டெரொன் (Opteron CPUs) சிபியுக்களைக்கொண்டது. இதன் வேகம் 1.75 பீடாபுலொப்ஸ் (Petaflops) ஆகும்.
எனினும் சீனா அதனை டியானி ( Tianhe ) - 1 A மூலம் முறியடித்துள்ளது.

பிரபல இலத்திரனியல் உபகரண தயாரிப்பு நிறுவனமான சொனி பிளேஸ்டேசன் போன் (Playstation Phone) எனும் நவீன கையடக்கத்தொலைபேசியினை தயாரித்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
பி.எஸ்.பி (PSP- PlayStation Portable) என்பது சொனி நிறுவனத்தின் மிகவும் பிரபலமான கையடக்க கேமிங் ( Gaming ) சாதனமாகும்.
இதைப்போன்ற கேமிங் அனுபவத்தினை தரக்கூடியதும் கேமிங்கிற்கு முக்கியத்துவம் அளிப்பதுமான கையடக்கத் தொலைபேசியினை சொனி இரகசியமாக தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனுடன் நவீன கையடக்கத்தொலைபேசியின் பண்பையும் இது கொண்டிருக்குமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
சொனி மற்றும் எரிக்ஸன் நிறுவனங்களின் ' சொனிஎரிக்சன்' தயாரிப்பாகவே இது வெளியாகவுள்ளது.
இது கூகுளின் அண்ட்ரோயிட் இயங்குதளத்தினை (Android OS) கொண்டு இயங்கவுள்ளது.
இதன் சிறப்பம்சங்கள்
1) 1GHz Qualcomm MSM8655 processor
2) 512MB RAM,
3) 1GB ROM,
4) 3.7 to 4.1 inches tough screen
மேலும் கேம் விளையாடுவதற்கு ஏதுவான கீபேட்களும் இணைக்கப்படவுள்ளன. இது தொடர்பான மேலதிக விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை.
இவ்வுபகரணமானது 2011 ஆம் ஆண்டு சந்தைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.___
மின்னஞ்சல் சேவைகளில் முன்னோடியான யாஹூ மெயில் சேவையானது பல நவீன வசதிகளுடன் தற்போது வெளிவந்துள்ளது.
பல நவீன மாற்றங்களுடன் யாஹூ மெயில் வெளியாகவுள்ளது என்ற செய்தியை நாம் உங்களுக்கு ஏற்கனவே வழங்கியிருந்தோம்.
2005 ஆம் ஆண்டின் பின்னர் தனது 279 மில்லியன் பாவனையாளர்களுக்காக யாஹூ மேற்கொண்டுள்ள பாரிய மாற்றம் இதுவாகும்.
சமூக வலைப்பின்னல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அதன் வசதிகளானவை:
அதிவேகமான செயற்பாடு - ஜீ மெயில் மற்றும் ஹொட்மெயில் சேவையினை விடவும் முன்னரை விட இருமடங்கு வேகத்திலும் இயங்குமென யாஹூ உத்தரவாதமளிக்கின்றது.
சமூகவலைப்பின்னல் தொடர்பு- யாஹூ மெயிலில் இருந்தவாறே பேஸ்புக் மற்றும் டுவிடரில் அப்டேடிங் செய்யும் வசதி. மேலதிகமாக உடனடி மேசேஜிங் IM ( Instant messaging ) மற்றும் குறுந்தகவல் வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இன்பொக்ஸில் இருந்தவாறே படங்கள் மற்றும் வீடியோக்கள் பார்வையிடல் -இன்பொக்ஸில் இருந்தவாறே பிக்காஸா (Picasa) பிளிக்கர் (Flickr) மற்றும் யூடியூப் (YouTube) இணையத்தளங்களில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்வையிடும் வசதி.
இலகுவாக மின்னஞ்சல்களைத் தேடுதல் - பாவனையாளர் தனக்குத்தேவையான மற்றும் முக்கியமான மின்னஞ்சல்களைத் தேடும் வசதி. திகதி, அனுப்பியவர், கோப்புக்கள் ( Attachment ) ஆகியவற்றின் அடிப்படையில் மின்னஞ்சல்களை தேடிப்பெற முடியும்.
ஸ்பேம்களில் இருந்து பாதுகாப்பு - ஸ்பேம்களில் இருந்து உச்ச பாதுகாப்பு அளிக்கின்றது.
கூகுள், மைக்ரோசொப்ட் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றின் வளர்ச்சியின் காரணமாக யாஹூ சற்று பின் தள்ளப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் இத்தகைய மாற்றங்களினூடாக அது இழந்த தன் இடத்தினை தக்கவைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்தியாவில் பிரபல மலிவுவிலை கையடக்கத் தொலைபேசிகளைத் தயாரித்து வரும் 'ஸ்பைஸ்' மொபைல் நிறுவனம் 97 அமெரிக்க டொலர் பெறுமதியில் முப்பரிமாண திரையைக் கொண்ட 3D கைத்தொலைபேசியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
M - 67 எனப் பெயரிடப்பட்டுள்ள இக்கையடக்கத் தொலைபேசியானது பலரினது எதிர்ப்பார்ப்பையும் தூண்டிவிட்டுள்ளது.
இதன் பெறுமதி இந்திய மதிப்பின்படி வெறும் 4,299 ரூபா மட்டுமே.
மேலும் முப்பரிமாண தன்மையினை அனுபவிக்க கண்ணாடி அணிய தேவையில்லை என்பது கூடுதல் சிறப்பாகும்.
2 சிம்கள் உபயோகிக்கக்கூடிய வசதியையும் இதுகொண்டுள்ளது.
2 மெகாபிக்ஸல் கெமரா, 16 ஜி.பி வரை அதிகரிக்கக்கூடிய மெமரி என்பன கூடுதல் வசதிகளாகும்.
4 சிம் வசதி கொண்ட கைத்தொலைபேசி

ஒடெக் (Otech) எனும் நிறுவனம் 4 சிம் வசதிகளைக் கொண்ட கைத்தொலைபேசி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இக்கைத்தொலைபேசியானது தொடுதிரை, 3G வசதி மற்றும் 12.1 மெகாபிக்ஸல் கெமரா வசதி ஆகியவற்றைக்கொண்டுள்ளது. _
விண்டோஸ் 8 இயங்குதளமானது (Operating System) 2012 இல் வெளியிடப்படுமென மைக்ரோசொப்ட் தெரிவிக்கின்றது.
இது தொடர்பான செய்தியை மைக்ரோசொப்ட் தனது ' டச்சு' மொழி வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளது.
இறுதியாக மைக்ரோசொப்ட் தனது விண்டோஸ் 7 இயங்குதளத்தினை 2009 ஆம் ஆண்டு வெளியிட்டது.
விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே விண்டோஸ் 7 ஆகும்.
அண்மையில் அப்பிள் தனது மெக். ஒ.எஸ் எக்ஸ் 10.7 லயன் (Mac OS X 10.7 Lion) இயங்குதளத்தினை வெளியிட்டிருந்தது.
மேலும் இதில் அப்பிளின் அப் ஸ்டோர் (App Store) போன்ற வசதியையும் அப்பிள் உள்ளடக்கியிருந்தது.
மைக்ரோசொப்டும் இது போன்ற வசதியினை உள்ளடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விண்டோஸ் 7 ஐப் போல விண்டோஸ் 8 உம் பல புதிய மாற்றங்களை உள்ளடக்கியிருக்கலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
தற்போது மைக்ரோசொப்ட், விண்டோஸ் போன் 7(Windows 7 mobile) மற்றும் எக்ஸ் பொக்ஸ் 360 இக்கான கைநெக்ட்(kinect) மோசன் சிஸ்டம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. _
இவ் வருட இறுதியில் உலக சனத்தொகையில் மூன்றில் ஒருவர் இணையப் பாவனையாளர்களாக இருப்பார்கள் என ஐக்கிய நாடுகளின் ஆய்வுறிக்கையொன்று தெரிவிக்கின்றது.
கடந்த 5 வருடங்களில் இணையப் பாவனையாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதாவது 2 பில்லியன்களாக அதிகரித்துள்ளது.
226 மில்லியன் பேர் புதிதாக இவ்வருடத்தில் இணையத்தைப் பாவிக்கத் தொடங்கியுள்ளனர்.
இவர்களில் அநேகர் வளர்ந்துவரும் நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
மேற்படி அறிக்கையின் படி வருட இறுதியில் மேலைத்தேய நாடுகளின் சனத்தொலையில் 71 % இணையப் பாவனையாளர்களாக இருப்பார்கள்.
மேலும் மொபைல் இணையம் மற்றும் புரோட்பேன்ட் (Broadband) ஆகியன வேகமாக வளர்ந்துவருவதாகவும் இது பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் உந்துதலாக உள்ளதாகவும் அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.
அவ்வறிக்கையினை இங்கு தரவிறக்கம் செய்யலாம்.
DOWNLOAD THE REPORT HERE. _
கூகுள் குரோம் இயங்குதளத்தின்( Browser) 7 ஆவது பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வியங்கு தளமானது மெக், விண்டோஸ், லினக்ஸ் ஆகிய இயங்கு தளங்களுக்கு (Operating System) இயங்கக் கூடியதாகும்.
முன்னைய பதிப்பில் காணப்பட்ட நூற்றுக்கான பிழைகளைத் திருத்தியுள்ளதாக கூகுள் தெரிவிக்கின்றது.
மேலும் சிறப்பாக இயங்கக் கூடிய HTML 5 தொழில்நுட்பத்தினையும் இது கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுவாக குரோம் பாவனையாளர்கள் தானாக 'அப்டேட்'களைப் பெறுவதுண்டு.
___
போதையில் மயக்கமுற்றிருக்கிறார் என நினைத்து உயிரிழந்த ஒருவரை தனி மண்டபத்திற்குள் விட்டுவிட்டுச் சென்ற சம்பவமொன்று ஹொரணை, புளத்சிங்ஹள பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
புளத்சிங்ஹளவில் திருமண வரவேற்பு வைபவமொன்று மிக விசேடமாக நடைபெற்றது. மதுவோடு ஆடலும் பாடலுமாக இளைஞர்கள் களியாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த மண்டபத்தில் தொழில் செய்துகொண்டிருந்த ஒருவர் மின்சாரம் தாக்கி அவ்விடத்திலேயே சாய்ந்து அமர்ந்துள்ளார்.
அவருடைய உயிர் அப்போதே பிரிந்துவிட்டது.
இதையறியாத திருமண வைபவ ஏற்பாட்டாளர்கள் அதிக போதையில் தான் அவர் அவ்வாறு நிலத்தில் சுவரோடு சாய்ந்திருக்கிறார் என எண்ணியுள்ளனர்.
"இவர் ஒவ்வொரு தடவையும் இப்படித்தான். இந்தத் தடவை மண்டபத்தை மூடிவிட்டுச் சென்றால் தான் அடுத்த முறை ஒழுக்கமாக வேலை செய்வார்" என மண்டப முகாமையாளர் சற்றுக் கோபமாகக் கூறியுள்ளார்.
அவர் கூறியதை போதையில் இருந்த ஏனையோரும் ஏற்றுக் கொள்ளவே, மண்டபம் இறுக மூடப்பட்டது.
மறுநாள் மண்டபத்தை திறந்து இறந்தவரின் பெயரைச் சொல்லி அழைத்தபோது மௌனமே பதிலானது.
அருகில் சென்று பார்த்தபோதுதான் அவருடைய உயிர் பிரிந்திருப்பது தெரிய வந்துள்ளது.
தவறான எண்ணத்துடன் தாம் நடந்துகொண்ட விதம் எந்தளவு விபரீதத்தை உண்டுபண்ணியுள்ளது என்பதைப் பிறகுதான் மண்டப முகாமையாளர் உட்பட ஏனையோர் உணர்ந்திருக்கிறார்கள்.
"கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்தறிவதே மெய்" எனச் சொல்லப்படுவதன் யதார்த்தம் அப்போது விளங்கியது.
இது நல்லதொரு பாடம். திருமண வரவேற்பு வைபவத்துக்கு வந்த அனைவருமே கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் புளத்சிங்ஹள மக்கள்.