Tuesday, February 15, 2011

சன் சீ கப்பலில் பயணித்தோரில் 32 பேர் புலிகள் என அடையாளம்


கடந்த ஆகஸ்ட் மாதம் கனடாவை சென்றடைந்த எம் வீ சன் சீ கப்பலில் பயணித்தவர்களில் சுமார் 32 பேர் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய எல்லை சேவைகள் சபையின் அறிக்கையை மேற்கோள்காட்டி டெய்லி மிரர் இணையத்தளம் இந்த செய்திய வெளியிட்டுள்ளது.
சன் சீ கப்பல் கனடாவை சென்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் தொடர்சியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கப்பலில் வந்த அகதிகள் கனடாவில் சமாதானமானமுறையில் வாழ்வதனையே விரும்புவதாக கனேடிய எல்லைப் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
எனினும் விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என இதுவரையில் 32 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த அகதிகள் இலங்கையில் இருந்து தாய்லாந்தின் ஊடாக கனடா அனுப்புவதற்காக 45 ஆட்கடத்தல் குழுக்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரும் மகனும் விமானமோட்டப் பயிற்சி: பாதுகாப்புப் படையினர் அச்சத்தில் எதிர்ப்பு


அமைச்சர் விமல் வீரவங்சவும் அவரது புதல்வனும் விமானமோட்டும் பயிற்சி பெற்றுக் கொள்ள முயன்றதில் நூற்றி ஐம்பது விமானப் பயணிகளின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்ள  நோ்ந்துள்ளது.
அமைச்சர் விமல் வீரவங்ச அண்மையில் தன் குடும்பத்தினருடன் விமானப்படையினருக்குச் சொந்தமான சாலி-130 வகை விமானமொன்றில் யாழ்ப்பாணம் சென்றிருந்தார். அங்கிருந்து திரும்பி வரும் வழியில் அவரது மகனுக்கு விமானமோட்டிப் பார்க்க ஆசை பிறந்துள்ளது.
அதன் போது அமைச்சர் விமல் வீரவங்ச பலவந்தமாக விமானியின் அறைக்குள் பிரவேசித்து தன் மகனுக்கு விமானமோட்டக் கற்றுக் கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அதன் காரணமாக விமானிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
ஆயினும் வேறு வழியின்றி ஒரு விமானியின் இருக்கையை அமைச்சருக்கும் அவரது மகனுக்கும் ஒதுக்கிய அவர்கள் அமைச்சரின் மகனுக்குச் சற்று நேரம் வரை விமானமோட்டப் பயிற்சியளித்துள்ளனர். அதற்காக விமானம்  இரு தடவைகள் யாழ்ப்பாணத்தின் மீது வட்டமடித்துப் பறந்துள்ளது.
அதன் போது விமானத்தில் பாதுகாப்புப் படையின் உறுப்பினர்கள் சுமார் நூற்றி ஐம்பது பேரளவில் இருந்துள்ளனர். அவர்கள் விடயமறிந்தவுடன் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். அதன் காரணமாக அமைச்சர் மெதுவாக விமானியின் அறையிலிருந்து வெளியில் வந்துள்ளார்.
ஆயினும் நூற்றுக்கும் அதிகமான விமானப் பயணிகளின் உயிருடன் விளையாடத் துணிந்த அமைச்சரின் செயல் குறித்து பல தரப்பிலிருந்தும் தற்போது கண்டனக் குரல்கள் வெளிக் கிளம்பத் தொடங்கியுள்ளன.

தினமும் ஒருமணிநேர உடற்பயிற்சியின் பின்னரே நிர்வாகப் பணிகளில் ஈடுபடும் மகிந்த


மஹிந்த ராஜபக்ஷ தினமும் அதிகாலை 4 மணிக்கு அலரி மாளிகையிலுள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று சுமார் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்த பின்னரே தனது நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் சுகதேகியாக இருப்பதாகவும் தனக்கு எந்தவித நோய்ப் பாதிப்பும் இல்லை என்று பகிரங்கமாக அறிவித்தார்.
ஜனாதிபதி அமெரிக்காவில் வாழ்ந்து வரும் தனது இளைய சகோதரருடன் சில நாட்கள் தங்கியிருந்து ஓய்வெடுப்பதற்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்றிருந்தார்.
இதன்போது சில விஷமிகள் ஜனாதிபதி நோய்வாய்ப்பட்டு இருக்கிறார் என்று ஒரு போலியான தகவலை வெளியிட்டனர். அதனையடுத்து ஜனாதிபதி நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் என்ற வதந்தி நாடெங்கிலும் காட்டுத்தீ போல் பரவ ஆரம்பித்தது.
நாடு திரும்பிய ஜனாதிபதியிடம் இதுபற்றி அனைவரும் முறைப்பாடு செய்ததை அடுத்த நான் சுகதேகியாக இருக்கிறேன். எனக்கு எந்தவித நோய்ப் பாதிப்பும் இல்லை என்று பகிரங்கமாக அறிவித்தார்.
அதிகாலையில் ஜனாதிபதி உண்மையிலேயே சுகதேகியாக இருக்கிறாரா என்பதை நேரில் கண்டறிவதற்காக இருதினங்களுக்கு முன்னர் திடீரென்று சிங்களப் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் அலரிமாளிகைக்குச் சென்ற போது ஜனாதிபதி தீவிரமாக உடற்பயிற்சியில் ஈடுபடுவதைப் கண்டுள்ளார்.

நெடுந்தீவிற்கான பயணிகள் போக்குவரத்து சேவைக்கென புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள "வடதாரகை"


நெடுந்தீவிற்கான பயணிகள் போக்குவரத்து சேவைக்கென புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள வடதாரகை2 இன்று காலை தனது வெள்ளோட்டத்தை மேற்கொண்டள்ளது.
நீண்hடகாலமாக நெடுந்தீவிற்கான பயணிகள் சேவைக்கென தரமான படகொன்று இல்லாத நிலையில் தமிழர்கள் வாழ்வில் வரலாற்றில் மறந்து விட முடியாத குமுதினிப் படகு அந்த இடத்தை நிரப்பிக் கொண்டிருந்தது.
இந்நிலையில் குமுதினிப்பட்கு முளுமையாக பழுதடைந்து பொது மக்கள் பல சிரமங்களை மக்கள் எதிர்கொண்டிருந்தனர். இது குறித்து வீதி அபிவிருத்தி அதிகார சபை மேற்கொண்ட முயற்சியின் காரணமாக சுமார் 8 கோடி ரூபா செலவில் இந்த படகு கட்டப்பட்டுள்ளது.
இந்தப் படகை தென்னிலங்கைளில் உள்ள நறுவனமொன்று கட்டியுள்ளது. இன்றைய தினம் காலை படகு சம்பிரதாய பூர்வமாக வெள்ளோட்டம் விடப்பட்டது. இதில் அரச அதிபர் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் வடதாரகை2 என்ற பெயர்கொண்ட இந்தப்படகை மகிந்த தேரு என மாற்றுவோம் என பகிரங்கமாக மக்களிடம் விருப்பம் கேட்டு தனது வால் பிடித்தனத்தின் உச்சத்தை காட்டியுள்ளார்.

எயார் லங்கா விமானத்தில் குண்டுப்புரளி ஏற்படுத்திய பயணி விடுதலை


இலங்கையில் இருந்து நேற்று லண்டன் நோக்கிச் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் குண்டு இருப்பதாக வதந்தியை பரப்பிய குற்றச்சாட்டில் மாலைதீவில் வைத்து கைது செய்திருந்த பயணி விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மாலைதீவு பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 
வெடிகுண்டு புரளி கிளப்பிய பயணி  கிளமன்ட் போல்  என்பவரே நேற்று மாலைதீவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.
விமான நிலைய ஊழியர் பயணியின் கருத்தினை தவறுதலாக புரிந்து கொண்டதனாலேயே விமானம் தரையிறக்கப்பட நேர்ந்ததாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விமானத்தில் தனக்கு இடையூறு என பயணி தெரிவித்ததை தவறாக புரிந்து கொண்ட பயணி, விமானத்தில் குண்டு இருப்பதாக புரிந்து கொண்டு அதனை உயரதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
கொழும்பிலிருந்து புறப்பட்டு இவ்விமானம் மாலைதீவில் தரையிறங்கியபின், விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பிரிட்டனைச் சேர்ந்த பயணியொருவர் சக பயணிகளை எச்சரித்திருந்தார்.
அதையடுத்து மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையினரால் பயணிகள் வெளியேற்றப்பட்டு, விமானத்தில் தீவிர தேடுதல்களை மேற்கொண்ட பின்னர் இந்த வெடிகுண்டு அச்சுறுத்தல் ஒரு புரளி எனவும் பயணியொருவரால் இது ஏற்பட்டது எனவும் என தெரியவந்தது.
மாலைதீவில் இவ்விமானம் சோதனைக்காக ஒரு மணித்தியாலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பின்னர் அது  லண்டன் நோக்கிப் புறப்பட்டது.
நேற்று திங்கட்கிழமை பிற்பகல் பண்டாரநாயக்க விமான நிலையத்திலிருந்து 199 பயணிகளுடன் மாலைதீவுக்கூடாக லண்டனுக்குச் செல்வதற்கு இவ்விமானம் புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகள் இந்தியாவில் மூன்று இரகசிய முகாம்களில் பயிற்சி? - இலங்கைப் புலனாய்வுத்துறை


விடுதலைப் புலிகள் அமைப்பினர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மூன்று இரகசிய முகாம்களை அமைத்துப் பயிற்சிகளைப் பெற்று வருவதாக இலங்கைப் புலனாய்வுத்துறையின் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பைக் கட்டியெழுப்பும் நோக்கில் தமிழ்நாட்டின் மூன்று இரகசிய முகாம்களில் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக இலங்கைப் புலனாய்வுத்துறைக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் ஒரு பயிற்சி முகாமில் முக்கிய பிரமுகர்களைப் படுகொலை செய்வதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதனுடன் இணைந்ததான செய்தியொன்றை அண்மையில் இந்தியாவின் முன்னணி நாளிதழான "த இந்து" பத்திரிகை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் விடுதலைப் புலிகளை மீள ஒருங்கிணைத்தல், பயிற்சியளித்தல் மற்றும் தேவையான ஏற்பாடுகளைக் கவனித்து வருபவர் விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர்களில் ஒருவரான புகழேந்தி மாஸ்டர் என்பராவார் என்றும் அத்தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
அத்துடன் இந்திய சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர் ஒருவரும் இன்னும் சிலரும் அவர்களுக்கு ஒத்தாசையாக இருப்பதாகவும் அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
அண்மையில் சென்னையில் பெளத்த மத்திய நிலையத்தின் மீதான தாக்குதலை மேற்கொண்டவர்களும் இந்தக் குழுவின் அங்கத்தவர்களே என்பதாகவும் விசாரணைகள் மூலம் கிடைத்த தகவல்களிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தேசத்திற்கு மகுடம் கண்காட்சி நுழைவாயிலில் வெடிகுண்டு: முக்கிய பிரமுகர்களுக்கு இலக்கு வைக்கப்பட்டதா?


சுதந்திர முன்னிட்டு அண்மையில் நடைபெற்ற தேசத்திற்கு மகுடம் கண்காட்சிக்கான நுழைவாயிலின் அருகே  வெடிகுண்டொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது பாதுகாப்புத் தரப்பினரை உச்சகட்ட அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கண்காட்சி நுழைவாயிலுக்கான பிரதான பாதையின் அருகே பிரஸ்தாப வெடிகுண்டு கடந்த 13ம் திகதி மாலை பாதுகாப்புத் தரப்பினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து பல கோணங்களில் அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியைப் பார்வையிட வருகை தந்த முக்கிய பிரமுகர்களை இலக்கு வைத்து அந்த வெடிகுண்டு கொண்டுவரப்பட்டிருந்ததா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கண்காட்சி நடைபெற்ற நாட்களில் ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சர்கள் கண்காட்சியைப் பார்வையிட வந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறான நிலையில் முக்கிய பிரமுகர்கள் வந்து சென்ற பாதையின் ஓரமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு தற்போது பாதுகாப்புத் தரப்பினரை உச்சகட்ட அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்படும்  விசாரணைகளில் இதுவரை எந்தத் தகவலும் கிட்டவில்லை என்று தெரிய வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் வெள்ளை வானில் சுற்றியவர்கள் கைது


வெள்ளை வானில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த ஐவரை நேற்றிரவு யாழ்ப்பாணப் பிரதேசத்தில் வைத்துப் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.
 இந்தச் சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியிலேயே நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரே இவர்களை கைதுசெய்துள்ளதாகவும், அவர்களில் ஒருவர் தப்பியோடிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்குப் பின்புறமாகவுள்ள வீதிவழியாக வந்துகொண்டிருந்த மேற்படி வெள்ளை வானை மறித்து சோதனையிட்ட பொலிஸார், அதில் பயணம் செய்த மேற்படி ஐவரையும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.
பொலிஸார் தம்மை நோக்கி வருவதைக் கண்ட அவர்களில் ஒருவர் வானிலிருந்து இறங்கி தப்பியோடிவிட்டதாகவும், அவரைத் தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நடமாடும் விபச்சார விடுதி வெள்ளவத்தையில் பொலிசாரிடம் சிக்கியது


வேன் ஒன்றைப் பயன்படுத்தி கொழும்பில் நீண்ட காலமாக நடாத்தப்பட்டு வந்த நடமாடும் விபச்சார விடுதியொன்றை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
நடமாடும் விபச்சார விடுதியில் இரண்டு விலைமாதர்கள் செயலாற்றியுள்ளதுடன் அவர்களுக்குப் பொறுப்பாக ஒரு முகாமையாளரும் இருந்துள்ளார். விலைமாதர்கள் ஒரு தடவைக்கு இரண்டாயிரம் ரூபாவுக்கு வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த பதினோராம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு பொலிசார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே நடமாடும் விபச்சார விடுதியும் அதில் இருந்தவர்களும் வெள்ளவத்தைப் பிரதேசத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் வரக்காப்பொலை மற்றும் திருகோணமலை பிரதேசங்களைச் சோ்ந்தவர்கள் என்று பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. அவர்களை வைத்து நடமாடும் விடுதியை நடாத்திய முகாமையாளர் தெஹிவளை பிரதேச வாசி என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் நிறுத்தப்பட்டு, எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.