மைஸ்பேஸ் மற்றும் பேஸ்புக் ஆகியன இரண்டு பிரபல சமூக வலையமைப்புகளாகும். ஆனாலும் தற்போது முதலிடம் பேஸ்புக்கிற்குதான். காரணம் அதன் பாவனையாளர்களின் எண்ணிக்கை . சுமார் 500 மில்லியன்களுக்கும் அதிகமான பாவனையாளர்கள் இதற்கு உள்ளனர். இந்நிலையில் மைஸ்பேஸ் பாவனையாளர்கள் இனி தமது மைஸ்பேஸ் கணக்கினூடாக பேஸ்புக்கினுள் நுழையமுடியும். இதனை மைஸ்பேஸ் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் தற்போது உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன. இதன்படி இவ்விரு சமூக வலையமைப்புகளுக்கிடையே பல்வேறு வசதிகளைப் பரிமாறிக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என நம்பப்படுகிறது. இதன் வசதிளை இக் காணொளியை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். ___
சகலதுறைகளிலும் தனது ஆதிக்கத்தினை செலுத்தி வருகின்றது கூகிள் (சமூகவலையமைப்பினை தவிர). இந்நிலையில் தற்போது கூகுள் புடிக்ஸ்.கொம் (boutiques.com) என்ற இணைய பெஷன் வணிகத்திற்கான தளமொன்றினை தொடங்கியுள்ளது. இத்தளத்தின் பிரதான நோக்கம் பெண்களின் ஆடைகள் மற்றும் அணிகலன்களைக் கொள்வனவு செய்வதற்காக இணையத்தினை நாடுபவர்களை அதற்கான சரியான விற்பனை தளங்களுக்கு அனுப்புதலாகும். உதாரணமாக இது ஒரு தேடல்பொறி அல்லது இடைமுகவர் போன்று செயற்படவுள்ளது. இணையமூலமான ஆடை அணிகள் வர்த்தகத்தின் மதிப்பு சுமார் 19 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதனைக் கருத்தில் கொண்டே கூகுள் இக்களத்தில் குதித்துள்ளதாகக் கருதப்படுகின்றது. எனினும் இச்சேவையானது தற்போது அமெரிக்காவுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இதனை சிறிதுகாலத்தில் விஸ்தரிக்கும் எண்ணம் உள்ளதாகவும் கூகுள் தெரிவிக்கின்றது. ஏற்கனவே ஈபே.கொம்( ebay.com) , அமெசொன்.கொம்(amazon.com) ஆகியன இணைய வர்த்தகத்தில் ஜாம்பவான்களாக உள்ளன. கூகுள் கடந்த ஆகஸ்ட் மாதம் லைக்.கொம்(like.com) என்ற விசுவல்( visual) தேடல் தளத்தினை 100 மில்லியன் டொலர்களுக்கு கொள்வனவு செய்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது._
தொழில்நுட்ப உலகில் கடந்த சில நாட்களுக்குள் ஏற்பட்ட சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பாக இன்றைய செய்தி அமைகின்றது. பேஸ்புக்கின் மெசேஜிங் சேவை அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஒரு சேவையாகும். ஆரம்பத்தில் மின்னஞ்சல் சேவையெனக் கூறப்பட்டது. எனினும் இது ஒரு மேம்படுத்தப்பட்ட மின்னஞ்சல் வசதியுடன் கூடிய மெசேஜிங் சேவையென பேஸ்புக் அறிவித்துள்ளது. பேஸ்புக் கணக்குகளைத்தாக்கிய புதிய பக் (Bug) பேஸ்புக் கணக்குகளைப் புதியதொரு பக் (Bug) தாக்கியது. இதன் காரணமாக பலரின் கணக்குகள் செயலிழந்துள்ளதாக பேஸ்புக்கிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அதனை கூடிய விரைவில் சரி செய்வதாகவும் பேஸ்புக் அறிவித்துள்ளது. மீண்டும் பிற்போடப்பட்ட கூகுளின் 'ஜிஞ்ஞர் பிரட்' வெளியீடு கூகுள் நிறுவனத்தின் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் மற்றுமொறு இயங்குதள தொகுப்பான அண்ட்ரோயிட் 2.3 'ஜிஞ்ஞர் பிரட்' வெளியீடு மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது. கூகுளின் அண்ட்ரோயிட் இயங்குதளமானது உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. பயர் பொக்ஸ் 4 பீடா வெளியீடு பிரபல இயங்குதளமாக மொஸிலா பயர்பொக்ஸ் 4 சோதனைத்தொகுப்புக்களை (Beta) தற்போது வெளியிட்டுள்ளது. முன்னையதை விட நன்கு மேம்பட்ட கிராபிக்ஸ் வசதி, ஜாவா வசதியினை இது தரவல்லது என அந்நிறுவனம் தெரிவிக்கின்றது. 40 நாட்களில் 1 மில்லியன் அண்ட்ரோயிட் 2.2 மொபைல்களை விற்பனை செய்த எல்.ஜி பிரபல எல்.ஜி (LG) நிறுவனம் சுமார் 1 மில்லியன் அண்ட்ரோயிட் 2.2 இயங்குதள ஒப்டிமஸ் ரக மொபைல்களை விற்பனை செய்ததாக அறிவித்தது. இது தனது விற்பனை வரலாற்றில் ஒரு மைல் கல்லென எல்.ஜி. அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. டியானி (Tianhe) - 1 A உலகின் அதிவேக சுப்பர் கணினியை முந்தும் கணினியை வெளியிடவுள்ள அமெரிக்கா உலகின் அதிவேக கணினி டியானி (Tianhe) - 1 A என ஏற்கனவே செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. எனினும் இக்கணினியின் வேகத்தை முறியடிக்கக் கூடியதும் இதனை விட 8 மடங்கு வேகமானதுமான ஒரு கணினியை 2012இல் அமெரிக்கா வெளியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது._
உலகில் மிகவேகமாக வளர்ந்துவரும் துறையாக ரோபோடிக்துறை விளங்குகின்றது. இந்நிலையில் ' ஜெமினொயிட் எப் ' (Geminoid F) என பெயரிடப்பட்டுள்ள நடிக்கும் திறன் கொண்ட ரோபோவினை ஜப்பானியர்கள் உருவாக்கியுள்ளனர். இதனை உருவாக்கியவர் 'ஹிரோசி இசிகுரோ' என்ற ஒசாகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரபல ஜப்பானிய ரோபோ வடிவமைப்பாளர் ஆவார். பொதுவாக இவரது அண்ரோயிட் ரோபோக்கள் 1.2 மில்லியன் அமெரிக்கடொலர்கள் விலைகொண்டவை. இந்த ரோபோவானது, அண்மையில் மேடையேற்றப்பட்ட ஒரு நாடகத்தில் பாத்திரமொன்றினை ஏற்று நடித்திருந்தது. இதன் அசைவுகள் மற்றும் உணர்வுகளை நாடக மேடைக்குப் பின்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அறையில் நடிகை ஒருவர் வெளிப்படுத்தினார். இப்பாவனைகள் கெமராவின் உதவியோடு ரோபோவினால் இணங்காணப்பட்டதுடன் ரோபோ அதற்கேற்றவாறு நடித்திருந்தது. இதன் குரலுக்காக மைக்ரோபோன் உபயோகப்படுத்தப்பட்டிருந்தது. இதன் நடிப்புத்திறனை நீங்களும் கண்டு களியுங்களேன். ___
இணையத்தள உலகில் இன்று புதியதொரு புரட்சி ஏற்படப்போகிறது. ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சென் பிரான்ஸிஸ்கோ நகரில் இந்தப் புரட்சி ஆரம்பமாகும் என தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. சமூக வலைப்பின்னலில் ஜாம்பவானாக விளங்கிக்கொண்டிருக்கும் பேஸ்புக் (facebook.com) - மின்னஞ்சல் சேவை ஜாம்பவான்களில் ஒன்றான ஜிமெயில் (gmail.com) ஆகியவற்றுக்கிடையில் சில வாரங்களாக முறுகல் நிலை தோன்றியது. அதனால் ஜிமெயிலை வழங்கும் கூகுள் (google.com) நிறுவனம் பேஸ்புக் சமூக வலைப்பின்னலில் வழங்கும் சேவைகளிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டது. அதேவேளை, மற்றுமொரு மின்னஞ்சல் ஜாம்பவான் என அழைக்கப்படும் யாகூ (yahoo.com) மற்றும் ஆஸ்க்.கொம் (ask.com) ஆகியன பேஸ்புக் வலைப்பின்னலுடன் கைகோர்த்துள்ளன. இந்த நிகழ்வானது ஜிமெயிலுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்தது. பெரும் எண்ணிக்கையிலான இணையப் பாவனையாளர்களைத் தன்னகத்தே கொண்ட கூகுள் நிறுவனம் அடுத்ததாக என்ன செய்யப்போகிறது எனப் பலரும் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் தான் இந்த மாபெரும் புரட்சி ஏற்படப்போகிறது. ஆம்!பேஸ்புக் சமூக வலைப்பின்னல் இணைத்தளமானது தனக்கென தனியான ஈமெயில் வசதியினை இன்று அறிமுகப்படுத்தப் போகிறது. அதாவது nnnn@facebook.com என அந்த மின்னஞ்சல் முகவரி அமையும். இந்தத் தகவலை பல்வேறு தொழில்நுட்ப ஆய்வாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். பேஸ்புக் சமூக வலைப்பின்னலில் 500 மில்லியன் பயனாளிகள் இணைந்துள்ளனர். 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத கணக்கெடுப்பின் பிரகாரம் ஹொட் மெயிலுக்கு 361.7 மில்லியன் பயனாளிகளும் யாகூ மற்றும் ஜிமெயிலுக்கு முறையே 271.3 மில்லியன், 193.3 மில்லியன் பயனாளிகளும் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரபல ஸ்கொட்லாந்து நாவலாசிரியர் றொபட் லூயிஸ் ஸ்ரீவன்னது 160வது பிறந்த நாளை கூகுள் நிறுவனம் பெருமையுடன் கொண்டாடுகிறது. இவரது ஓவியங்கள் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் பெரும் வரவேற்பைப்பெற்றிருக்கின்றன. கலிபோனியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று சர்வதேச ரீதியாக 700ற்கு மேற்பட்ட இவ்வாறான ஓவியங்களை விசேட நிகழ்வுகள் மூலம் காட்சிப்படுத்துகின்றது. இந்த புதிய ஓவியம் ஸ்ரீவன்னது புகழ்பெற்ற நாவலான 'ரெசர் லாண்ட்" ல் இருந்து பெறப்பட்டதாகும். முதலாவது எழுத்தானgஎன்பது ஓவியத்தில் உள்ள கடற்கொள்ளையன் தோற்றத்திலும்oஎன்பது திசைகாட்டியிலும், அடுத்தoஆனது மலையின் உருவத்திலும்,gகப்பலின் தோற்றத்திலும்,lகப்பலின்கொடியிலும்eகொள்ளையிடப்பட்ட பொருட்களின் பெட்டியிலும் தோன்றுவதை நாம் அவதானிக்கலாம். றெபேட் லூயிஸ் ஸ்ரீவன்சன் 1850ல் பிறந்தவர். ஸ்ரீவன்சன் பல வருடங்களைப் பசுபிக் பெருங்கடலில் படகுப்பயணம் செய்தே கழித்தவர்.
'ரொக்மெல்ட்' எனும் புதிய இணையத்தள தேடுபொறி (பிரவுசர்) இன்று அறிமுகம் செய்யப்பட்டது. சமூக வலைத்தளங்களான பயர்பொக்ஸ் (Firefox) மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Internet explorer) ஆகியவற்றுக்குப் போட்டியாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வலைப் பதிவில் புதிய தேடியந்திரத்தை பற்றி 'ரொக்மெல்ட்' நிறுவனம் தெரிவிக்கையில், "புதிய பிரவுசர் மூலம் பயனாளிகள், இலவசமாக பூரண திருப்தியுடன் எமது சேவையின் மூலம் இணையத் தேடல்களை மேற்கொள்ள முடியும். மிக இலகுவாக இணையப் பக்கங்களுக்குச் செல்லவும் முடியும். இதன் முதலாவது பரீட்சார்த்த இணையப் பக்கத்தை அழைப்பிதல் உள்ளவர்கள் மாத்திரம் இன்று நேரடியாக காணலாம்." இவ்வாறு அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.___
அதிவேக 'ஹைப்பர்சொனிக்' (Hypersonic Jets) ஜெட் விமானங்களை உருவாக்கவுள்ளதாக நாஸா தெரிவித்துள்ளது. 'ஹைப்பர்சொனிக்' என்பது ஒலியின் வேகத்தினை விட 5 மடங்கு வேகமாகசெல்லுதலாகும். ஒலியின் வேகம் ஈரப்பதம் இல்லாத காற்றில் செக்கனுக்கு 343.2 மீட்டர்களாகும். விண்வெளிக்கென தயாரிக்கப்பட்ட போதிலும் இவ்விமானம் பயணிகள் விமான சேவைக்கு உபயோகப்படுத்தப்படுமாயின் நியூயோர்க்கிலிருந்து சிட்னிக்கு 2 1/2 மணி நேரத்தில் சென்றடைய முடியும். இதற்கென நாஸா அடுத்த 3 வருடங்களுக்கும் தலா 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை ஒதுக்கீடு செய்யவுள்ளது._
பார்வை இழந்தவர்களுக்கு பார்வையை வழங்கக்கூடிய அதிநவீன 'சிப்' ஒன்றினை ஜேர்மனிய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இதன் படி கண்களின் பின்பகுதி விழித்திரையில் 'சிப்' ஒன்று பொருத்தப்படுகின்றது. இதனூடு ஒளிகடத்தப்படும்போது அது இலத்திரனியல் தூண்டல்களாக மாற்றப்பட்டு பார்வை நரம்புகளுக்குச் செலுத்தப்படுகின்றது. பார்வையற்றவர்களுக்கு இதன்மூலம் பொருளை இனங்கண்டுகொள்ளக் கூடியதாகவுள்ளது. இந்தச் 'சிப்' பானது 'ரெடினிடிஸ் பிக்மென்டோஸா' எனப்படும் பரம்பரை கண்நோயினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்குப் பெரிதும் பயனளிக்குமென நம்பப்படுகின்றது. ஏ.ஜி. என்ற ஜேர்மனிய நிறுவனம், 'ஒப்தல்மிக்' ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து இதனைத் தயாரித்துள்ளது. இவ்வுபகரணத்தில் சுமார் 1500 ஒளி உணர் 'சென்ஸர்'கள் பொருத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான காணொளிகளை இங்கு காணலாம். _
கூகுள் நிறுவனம் தனது குரோம் இயங்குதளத்தை ( Chrome Operating System ) கொண்டியங்கும் நெட்புக் கணனிகள் இம்மாத இறுதியில் விற்பனைக்கு வருமென தெரிவிக்கப்படுகின்றது. கடந்த நவம்பர் மாதம் கூகுள் தனது குரோம் இயக்குதளத்தை ( Chrome OS ) அறிமுகம் செய்திருந்தது. தற்போது 'இன்வென்டெக் ' எனப்படும் தாய்வான் நாட்டு நிறுவனத்துடன் இணைந்தே இதனை உருவாக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஏஸர் மற்றும் ஹெவ்லட் பெக்கார்ட் நிறுவங்கள் கூகுளின் இவ்வியங்குதளத்தினை கொண்டியங்கும் கணனிகளை உருவாக்கிவருவதுடன் அவை இவ்வருட இறுதியில் சந்தைக்கு வருமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே கூகுள் தனது சொந்த தயாரிப்பான நெக்ஸஸ் (Nexus) எனும் 'ஸ்மார்ட்' போன்களை விற்பனை செய்திருந்தது. எனினும் இவை சந்தையில் வரவேற்பைப் பெறவில்லை. இருந்தபோதிலும் கூகுள் தனது அடுத்தமுயற்சியில் இறங்கியுள்ளமை பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது._
லொஜிடெக் (Logitech) நிறுவனம் அண்மையில் கணினிகளுக்கு பயன்படுத்தப்படும் சூரியசக்தியில் இயங்கக்கூடிய வயர்களற்ற கீபோர்ட்டை (K750) அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் இருந்த வயர்களற்ற (Wireless) கீபோர்ட்கள், பற்றரிகளின் மூலமே இயங்கி வந்தது. ஆனால் லொஜிடெக்கின் புதிய கீபோர்ட்கள் சூரிய ஒளியின் மூலம் இயங்குகிறது. ஒரு தடவை முற்றாக 'சார்ஜ்' செய்தால், சுமார் 3 மாத காலம் வரை தொடர்ச்சியாக இதனைப் பயன்படுத்த முடியுமென லொஜிடெக் உறுதியளிக்கின்றது. இது 80 அமெரிக்க டொலர்களில் விற்பனையாகிறது.
உலகின் உயர்ந்த சிகரமான எவரஸ்டிலிருந்தும் இனிமேல் இணையத்தினை உபயோகிக்க முடியும். வீடியோ அழைப்பினையும் மேற்கொள்ளமுடியும். 3 ஜி வலையமைப்பினூடக இவையனைத்தையும் அவ்வுயரத்தில் சாத்தியப்படுத்தியுள்ளது நேபாளிய தொலைத்தொடர்பு நிறுவனமான என்செல் . சுமார் 8 தொலைத்தொடர்பு கட்டமைப்புக்கள் கடல் மட்டத்திலிருந்து சுமார் 5200 அடி உயரம் வரை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. என்செல் என்பது சுவீடன் நாட்டு நிறுவனமான டெலிசொனெராவினுடையதாகும். இதுவரைகாலமும் மலையேறுபவர்கள் செய்மதி தொலைபேசிகள் மற்றும் சாதாரண கைத்தொலைபேசி வசதியை மட்டுமே பெற்றுவந்தனர். இனிமேல் அவர்கள் காலநிலை தொடர்பான அறிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் ஆகியவற்றை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.