Tuesday, November 2, 2010

இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களை வேகமாக தரவிறக்க

நாம் இணையத்தில் பல எண்ணற்ற வீடியோக்களை காண்கிறோம். நமக்கு பிடித்த பாடல்கள், படங்கள், நகைச்சுவை மற்றும் தொழில்நுட்பம் இப்படி ஏராளமான வீடியோக்களை நாம் இனையத்தில் பார்த்து ரசிக்கிறோம்.
இந்த வீடியோக்களை பார்க்கவே இணையத்தில் பல தளங்கள் இருந்தாலும் Youtube, Daily motion, Meta cafe போன்ற தளங்கள் பிரபலமானவை.
ஒருசில வீடியோக்களை நாம் பார்க்கும் போது நாம் அதை நம் கணினியில் சேமித்து கொள்ளலாம் என்று தோன்றும். ஆனால் இந்த தளங்களில் நாம் வீடியோவை பார்க்க மட்டுமே முடியும் தரவிறக்க முடியாது. இதை போக்கவே ஒரு சூப்பர் மென்பொருள் உள்ளது.
பயன்கள்:
உபயோகிப்பதற்கு மிகவும் சுலபமானது.
இது முழுக்க முழுக்க இலவச மென்பொருள்.
நமக்கு தேவையான வீடியோவின் url கொடுத்து START பட்டனை அழுத்தினால் போதும் அந்த வீடியோ நம் கணினியில் சேமிக்க பட்டு விடும்.
வீடியோ டவுன்லோட் திறன் மிகவும் வேகமாக உள்ளது.
வீடியோவை தரவிறக்கும் போதே நமக்கு தேவையான பார்மட்டில் மாற்றும் வசதி(AVI,MP4,WMV)
வீடியோவில் உள்ள பாடலை மட்டும் தனியே பிரித்தெடுக்கும் வசதி.
இப்படி ஏராளமான வசதிகளை பெற்று உள்ள இந்த மென்பொருளின் அளவு 7.19 MB மட்டும் தான்.
பயன் படுத்தும் முறை:
இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் உங்களுக்கு வரும் EXE பைலை இரண்டு முறை க்ளிக் செய்து உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.
இப்பொழுது டெஸ்க்டாப்பில் உள்ள சார்ட்கட் பைலை ஓபன் செய்து கொள்ளுங்கள் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
இங்கு நீங்கள் தரவிறக்க வேண்டிய வீடியோவின் URL காப்பி செய்து அங்கு கொடுக்க பட்டிருக்கும் URL என்ற இடத்தில் பேஸ்ட் செய்யவும்.
அடுத்த கட்டத்தில் SAVE TO என்ற இடத்தில் உங்கள் வீடியோ சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்யவும்.
அடுத்து OUTPUT என்ற இடத்தில் நீங்கள் இந்த வீடியோவின் வகையை(FORMAT) தேர்வு செய்து கொள்ளவும். மாற்றவேண்டாம் என்றால் WITH OUT CONVERSION என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.
அடுத்து கீழே உள்ள START என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் உங்கள் வீடியோ நீங்கள் தேர்வு செய்த இடத்தில் வந்திருக்கும். உங்களுக்கு கீழே இருப்பதை போல செய்தி வரும்.
அவ்வளவு தான் இந்த முறையை பயன்படுத்தி இணையத்தில் உள்ள வீடியோக்களை எளிதாக தரவிறக்கி கொண்டு நினைத்த நேரத்தில் பார்த்து ரசித்து கொள்ளலாம்.

ஞாபகமறதிப் பிரச்சினையா?

படிக்கும் மாணவ, மாணவிகளில் பலரும் ஞாபகமறதிப் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள். விழுந்து விழுந்து படித்தும், தேர்வில் எல்லாம் மறந்துபோய்விடுகிறதே என்று வேதனைப்படுகிறார்கள்.
ஞாபகமறதிப் பிரச்சினையிலிருந்து விடுபட, மாணவர்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றிப் பார்க்கலாம்…
* இரவில் பாடம் படித்தபின், வேறு எந்த வேலையையும் செய்யாமல் தூங்கச் சென்றுவிடுங்கள்.
* மறுநாள் காலை எழுந்து, இரவில் படித்தவற்றை ஞாபகப்படுத்திப் பாருங்கள். வேறு எந்த வேலையிலும் உங்களை ஈடுபடுத்திவிடாதீர்கள். காரணம் அந்த வேலை பற்றிய நினைவுகள் ஏற்கனவே நீங்கள் படித்தவற்றை மறக்கடிக்கும் வாய்ப்புள்ளது.
* கணக்குப் பாடங்களைப் பார்க்கப் போகிறீர்களா? அதற்கு முன் மூளைக்கு அதிக வேலை கொடுக்கின்ற செயலில் ஈடுபடாமல் மனதைக் கொஞ்சம் ஓய்வாக வைத்திருந்துவிட்டு பிறகு படிக்கச் செல்லுங்கள்.
* இரவில் நெடுநேரம் கண்விழித்துப் படிப்பது என்று இல்லாமல், போதுமான அளவு உறங்குவது ஞாபகசக்தியைப் பாதிக்காமல் இருக்கும்.
* ஒரு சிக்கலான பாடத்தைப் படிக்கிறீர்கள். அது மூளையில் பதியவில்லை. அதே ஞாபகமாகத் தூங்கச் செல்கிறீர்கள். தூங்கும்முன் அந்தப் பாடத்தை மனத்திரையில் கொஞ்சம் ஓடவிடுங்கள். காலையில் அந்தப் பாடம் மனதில் ஏறக்குறைய முக்கால்வாசி பதிந்திருப்பதை உணர முடியும். மீதி கால் பாகத்தை மீண்டும் ஒருமுறை வாசிப்பதன் மூலம் படித்து முடித்துவிடலாம். இது மனோவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கும் உண்மை.
* பொதுவாக காலையில் மனம் தூய்மை, புத்துணர்வோடு இருக்கும். கடினமான பாடங்களை அந்த வேளையில் படித்தால் எளிதில் மனதில் பதியும்.
* ஒரு கேள்விக்கான பதிலைப் போல மற்றொரு கேள்வியின் பதில் இருந்தால், அதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதேபோல அக்கேள்விகளின் விடைகள் நேர் எதிர்மறையாக இருந்தாலும் அந்த இரண்டையும் தொடர்புக்குள்ளாக்கி நம்மால் நினைவுக்குக் கொண்டுவர முடியும். நமக்குப் புரிகிற மாதிரியான தொடர்புமுறையை ஏற்படுத்திக்கொண்டால் போதும்.
* முறையான மறுபார்வை (ரிவிஷன்), நல்ல நினைவாற்றலையும், கற்றலை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவரும் ஆற்றலையும் நிச்சயம் தரும்.
* நாம் உண்ணும் உணவுக்கும், ஞாபகசக்திக்கும் தொடர்பு உண்டு. புரதம் அதிகம் கிடைக்கும் கீரை, காய், கிழங்கு போன்றவற்றை அதிகம் உண்டால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். வல்லாரைக் கீரை, நினைவாற்றலைக் கூட்டும்.
* படமாகக் கண்ணால் காண்பதை நாம் அதிகம் மறப்பதில்லை. எனவே பாடம் தொடர்பான படங்களை அடிக்கடி புரட்டிப் பார்க்க வேண்டும். வரைந்து பார்க்க வேண்டும்.
* பெரிய பாடப் பகுதிகளுக்கு, அவை தொடர்பான சிறுசிறு குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்வதும், அவற்றை அவ்வப்போது நினைவுபடுத்திக்கொள்வதும் பலனளிக்கும்.
* எல்லாவற்றுக்கும் மேலாக முக்கியமான விஷயம், ஈடுபாடு. நாம் என்றோ பார்த்த ஒரு சினிமாவில் காட்சி, வசனத்தை அப்படியே மறக்காமல் கூறுகிறோம். ஆனால் நேற்றுப் படித்த பாடத்தை மறந்துவிடுகிறோம். அதற்குக் காரணம், ஆர்வம், ஈடுபாடுதான். படிப்பதை கடமையாக மேற்கொள்ளாமல், பிடித்தமான விஷயமாக மாற்றிக் கொண்டால் நிச்சயம் மறக்காது.

மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி?

உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மாரடைப்பை பொறுத்தளவில் மற்ற நாடுகளுக்கும், நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது.
மற்ற நாடுகளை காட்டிலும், நம்நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை (30 – 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி, அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமை.
மாரடைப்பு என்றால் என்ன?
அது எவ்வாறு ஏற்படுகிறது? யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்? அதன் அறிகுறிகள் என்ன? அதை குணப்படுத்துவது எவ்வாறு? இந்த கேள்விகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம் என்கிறார் மதுரை அப்பல்லோ மருத்துவமனை இதய நோய் நிபுணர் டாக்டர் எஸ்.கே.பி. கருப்பையா. மாரடைப்பு என்றால் என்ன? ஒரு நாளில் சராசரியாக ஒரு லட்சம் முறை துடிக்கும் இதயம், ஒவ்வொரு துடிப்பின் போதும், உடலின் மற்ற பாகங்களுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்து செல்லும் ரத்தத்தை, ரத்தக்குழாய்கள் வழியாக அனுப்புகிறது.
இதற்காக கடினமாக உழைக்கும் இதய தசைகளுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன. சில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து விடுகிறது. இதனால் இதயத்தின் அத்தசைப் பகுதி உணவும், ஆக்சிஜனும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது.
இதுவே மாரடைப்பு. இதய ரத்தக்குழாயில் அடைப்பு எப்படி ஏற்படுகிறது? ரத்தக்குழாயின் தசைச்சுவர் உள்ளிருந்து வெளியே மூன்று அடுக்குகளாக உள்ளது. இதில் முதல் இரண்டு அடுக்குகளுக்கு இடையில், பிறந்த ஓரிரு ஆண்டுகளிலேயே நூலாடை போல கொழுப்புச் சத்து (Fatty Streak) படிய துவங்குகிறது. காலப்போக்கில் சில காரணங்களால் அது வளர்ந்து கொழுப்பு படிவமாகி (Plaque) ரத்தத்தின் சீரான ஓட்டத்திற்கு தடைக்கற்களாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் இத்தடை மேட்டில் விரிசல் உருவாகி ரத்தக்குழாயினுள் வெடிக்கிறது. இதன் விளைவாக ரத்தத்தில் உள்ள சில அணுக்கள் இத்தடை மேட்டின் விரிசல் உள்ள பகுதியில் அமர்ந்து ரத்தத்தை உறைய வைத்து, ரத்தக்குழாயை முழுமையாக அடைத்துக் கொள்கிறது.
மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் என்ன?
காரணங்கள் இரண்டு. ஒன்று நம்மால் கட்டுப்படுத்த முடிந்தவை, மற்றொன்று நம் கட்டுப்பாட்டில் இல்லாதவை. கட்டுப்படுத்த முடிந்த காரணங்கள் – புகை பிடித்தல், உயர் ரத்தஅழுத்தம், உடலின் எடை, உடற்பயிற்சியின்மை, சர்க்கரை நோய். கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்கள் – வயது, பரம்பரயாக வரும் மரபணுத்தன்மை. இதுதவிர ரத்தக்குழாயில் எவ்வித அடைப்பு இன்றியும் மாரடைப்பு வரலாம். ஆனால் இது மிகச்சிலரையே பாதிக்கிறது. இதற்கு காரணம் திடீரென முழுமையாக அடைபடும் அளவிற்கு இதயத்தின் ரத்தக்குழாயில் ஏற்படும் கடுமையான இறுக்கம். இதற்கான அறிவியல் பூர்வமான காரணம் இன்னும் தெரியாவிட்டாலும், இவ்வகை மாரடைப்பு, புகை பிடிப்போர், கொக்கைன் போன்ற மருந்து உட்கொள்வோர், மிகவும் குளிர்வான பகுதிகளுக்கு செல்வோர், மிக அதிகமாக உணர்ச்சிவசப்படுவோரை அதிகம் பாதிக்கிறது.
மாரடைப்பின் அறிகுறிகள்? மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறி, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கலாம். பொதுவாக மாரடைப்பு வரும் போது முதலில் மெதுவாக நெஞ்சுவலியுடனோ அல்லது நெஞ்சில் ஒருவித கனமான இறுக்கத்துடனோ துவங்கி, பின் அவ்வலியின் தன்மை படிப்படியாக அதிகரிக்கலாம். சிலருக்கு இத்தகைய உணர்வுகள் ஏதுமின்றியும் வரலாம். இவர்களுக்கு மாரடைப்பு வந்திருப்பதே பின்னாளில் வேறொரு காரணத்திற்காக இ.சி.ஜி., அல்லது எக்கோ பரிசோதனை செய்யும் போது தான் தெரியவே வரும். இதற்கு “அமைதியான மாரடைப்பு’ என்று பெயர்.
இதய வலியின் வெவ்வேறு தன்மைகள்:
பொதுவாக இதய வலி நெஞ்சின் நடுப்பகுதியில் வரும். அது வலியாகவோ, ஒருவித அழுத்தமாகவோ, ஏதோ ஒரு கனமான பொருளை நெஞ்சில் சுமப்பது போன்ற உணர்வாகவோ, நெஞ்சின் இரு பகுதியில் இருந்தும் நடுப்பகுதியை நோக்கி கயிற்றால் இறுக்குவது போலவோ, நெஞ்சு முழுவதும் ஏதோ முழுமையாக நிறைவாக இருப்பது போன்ற உணர்வுடனோ இருக்கலாம்.
சில நேரங்களில் சாப்பாடு செரிக்காமல் உண்டாகும் அஜீரண கோளாறு போன்ற உணர்வாகவும் வெளிப்படலாம். நெஞ்சுக்குள் எரிச்சல் போன்ற உணர்வு இருக்கலாம். இத்தகைய உணர்வுகள் சில நிமிடங்கள் தொடர்ச்சியாகவோ, விட்டுவிட்டோ வரலாம். பொதுவாக இத்தகைய உணர்வுகள் தொடர்ச்சியாக 20 நிமிடங்களுக்கு மேல் இருந்தால் அது மாரடைப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மாரடைப்பு வரும் முன் சில நாட்களோ, வாரங்களோ, ஏன் சில மாதங்களுக்கு முன்பே கூட மேற்கூறிய அறிகுறிகள் தென்படலாம். அத்தகைய வலி ஏதாவது செயலில் ஈடுபட்டிருக்கும் போது (நடைப்பயிற்சி அல்லது கனமான வேலைகள்) சில நிமிடங்கள் வரும். ஓய்வு எடுத்தவுடன் மறைந்து விடும்.
இதற்கு “ஆஞ்சைனா’ என்று பெயர். நாளடைவில் முன்பை விட குறைவான செயல்பாட்டிலேயே அத்தகைய வலி வந்தால் அல்லது ஓய்வுக்கு பின்னும் அவ்வலி உடனே மறையாமல் இருந்தால் அதுவே மாரடைப்பின் ஆரம்ப அறிகுறி.
மேற்கூறிய வலி நெஞ்சின் நடுப்பாகத்தில் இல்லாமல் ஒரு பக்கமோ அல்லது இரண்டு பக்க கைகளிலோ, நடுமுதுகிலோ, கழுத்திலோ, முகத்தாடையிலோ, வயிற்றிலோ கூட வரலாம். இத்தகைய வலியுடன் வாந்தியெடுப்பது போன்ற உணர்வு, வாந்தி எடுத்தல், தலைச் சுற்றல், அதிக வியர்வை போன்றவையும் மாரடைப்பின் அறிகுறிகள்.

புற்று நோய்க்கு மனிதனே காரணம் : ஆய்வு

புற்று நோய் ஏதோ இனம்புரியாத இயற்கை விளைவுகளால் ஏற்படுவதல்ல மாறாக மனிதன் தனக்காக உருவாக்கிக் கொண்ட அதிநவீன வாழ்வுதான் காரணம் என்று மான்செஸ்டர் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மனிதனின் உற்பத்தி நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள உடல்ரீதியான மாற்றங்களே சமீப புற்று நோய்க் கட்டிகளுக்குக் காரணம் என்று இவர்கள் கூறுகின்றனர்.
இதனை உறுதி செய்ய அவர்கள் எகிப்திய மம்மிக்களை தங்களது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். நூற்றுக்கணக்கான மம்மிக்களை ஆய்வு செய்ததில் ஒரேயொரு மம்மியில் மட்டும் புற்று நோய் இருந்தது உறுதியானது.
பண்டைய எகிப்திய பிரதிகளில் காணப்படும் புற்று நோய்ப் போன்ற நோய்க்கான குறிப்புகள் அனைத்தும் குஷ்ட ரோகத்தினால் ஏற்படும் உடல் ரீதியான அறிகுறிகளை புற்று நோய் என்பதாக அது கூறியுள்ளது என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வின் தலைவரான மைக்கேல் ஸிம்மர்மேன் மாம்மிக்களில் கட்டிகள் இருந்ததற்கான அடையாளம் இல்லை என்பதால் புற்று நோய் அந்தக் காலக்கட்டத்தில் இல்லை என்று கூறமுடியும் என்று கூறுகிறார்.
"இதனால் புற்ற்நோய் அல்லது புற்று நோய் உருவாக்கக் காரணிகள் தொழிற்புரட்சிக்குப் பிந்தைய வாழ்வு முறையே என்று நாம் கருத இடமுண்டு" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
"சுற்றுசூழலில் இயற்கையாக உள்ள எந்த ஒரு கூறும் புற்று நோய்க்கு காரணமாக இருக்கவில்லை. இதனால் இது மனிதனால் ஏற்பட்டுள்ள சீரழிந்த, மாசாகிப்போன சூழ்நிலைகளால் உருவானதே" என்று நாம் கூற முடியும்." என்று சக ஆய்வாளரும் பேராசிரியருமான ரொசாலி டேவிட் கூறுகிறார்.
அதாவது எய்ட்ஸ், புற்று நோய் என்பதெல்லாம் ஆதிகாலம் தொட்டே இருந்து வருபவை என்ற பொய்யை மருத்துவ ஆய்வும் கார்ப்பரேட் ஆய்வும் கூறிவரும் இந்த நிலையில் புற்று நோய்க்கு ஒரு வரலாற்றுப் பார்வையை அளிக்க இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல்வேறு காலத்தின் உடல்களை ஆய்வு செய்ததில் நவீன சமூகங்களுக்கு கிடைத்த செய்தி என்னவெனில் "புற்று நோய் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டதே" என்பதுதான் என்று இந்த ஆய்வாளர்கள் அடித்து‌க் கூறுகின்றனர்.

'இன்னொரு பூமி’ இருக்குமா?

இன்றுவரை 230 அயல்கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. இதில் ஜெப்ரி மார்சி என்பவர் தலைமையிலான அமெரிக்க ஆராய்ச்சிக் குழு மட்டும் 150 கிரகங்களைக் கண்டுபிடித்திருக்கிறது.
நமது பால்வீதியில் மட்டும் 10 ஆயிரம் கோடி கிரகங்கள் இருக்கலாம் என்று ஜெப்ரி மார்சி தெரிவித்திருக்கிறார். இதில் வியாழன் போன்ற வாயுக்கோள கிரகங்கள் 600 கோடி இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பூமியைப் போன்று 10 லட்சம் கிரகங்கள் இருக்கலாம் என்று டெப்ராபிசர் என்ற ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.
தற்போது 5 கிரகங்களில் பூமியைப் போன்று தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 50 கிரகங்களில் உயிரினம் இருக்க வாய்ப்பிருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மெக்சிகோ அருகே விழுந்த ஒரு விண்கல்லில் சர்க்கரைப் படிவு காணப்பட்டிருப்பதால், உயிரினம் உள்ள அயல்கிரகம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அயல்கிரகங்களில் மனிதர்களைப் போன்ற அறிவுமிக்க உயிரினங்கள் இருக்கின்றனவா? என்று கண்டுபிடிப்பதற்கான திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்தி வருகிறது. நமது பூமியின் கடலின் அடியில் உள்ள எரிமலைகளிலும், வடதுருவப் பனிப் பிரதேசத்திலும், வறண்ட பாலைவனங்களிலும் ண்ணுயிரிகள் இருப்பதைப் போல, விண்வெளியில் உள்ள அயல்கிரகங்களிலும் உயிரினங்கள் ஏற்கனவே தோன்றி வாழ்ந்து கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக டெப்ராபிசர் தெரிவித்துள்ளார். பூமிக்கு அருகில் உள்ள அயல்கிரகங்களில் உயிரினங்கள் இருந்தால், அதை 10 வருடங்களுக்குள் கண்டுபிடித்துவிடலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
பூமியில் இருந்து 44 ஒளிவருட தூரத்தில் உள்ள `உர்சா மேஜர்’ என்ற நட்சத்திரத்தை ஒரு கிரகமானது, சூரியனை பூமி சுற்றிவரும் தூரத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அக்கிரகத்தில் தண்ணீரும், உயிரினங்களும் காணப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
`இரவில் நான் கோடிக்கணக்கான நட்சத்திரங்களைப் பார்க்கும்போது அவற்றில் உயிரினங்கள் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது’ என்கிறார், டெப்ரா பிசர்.

சிறுநீரகக் கல் உருவாவது எப்படி?

உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பையில், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கல் உருவாவது சகஜம். இந்தியாவில் 80 லட்சம் மக்கள் வரை, இந்த உபாதையால் பாதிக்கப்படுகின்றனர்.
'கிட்னி ஸ்டோன்’ என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது. சிறுநீரை வெளியேற்றக் கொண்டு செல்லும் பாதையில் ஏற்படலாம். சிறுநீரைத் தேக்கி வைக்கும் பையில் ஏற்படலாம். சிறுநீரை வெளியேற்றும் இறுதி உறுப்பில் ஏற்படலாம். மிகச்சிறிய கல்லாகவும் தோன்றலாம்; ஒரு எலுமிச்சை அளவுக்கும் ஏற்படலாம். கல்லின் அளவு பொறுத்து, வலியின் தீவிரம் இருக்கும் எனக் கருதுவது தவறு. பெரிய கல், வலியே இல்லாமல் வளரலாம். கண்ணுக்கே தெரியாத சிறிய கல், அதிக வலி கொடுக்கலாம். கல் உருவாவதால் ஏற்படும் வலியை, பிரசவ வலியோடு ஒப்பிடலாம். எவ்வளவு பெரிய பலசாலியையும் ஆட்டிப் போட்டு விடும் இந்த வலி.
சிறுநீர் செல்வதில் சிரமம் ஏற்படுவதில் துவங்கி, இருபக்க இடுப்பின் பின் பக்கத்திலிருந்து அலை போல வலி உருவாகி, பிறப்புறுப்பு வரை பரவும். சிரமப்பட்டு வெளியேற்றப்படும் சிறுநீர் அதிக மஞ்சள் நிறத்துடன் காணப்படும். சிலருக்கு சொட்டு சொட்டாகவும் வெளியேறும். இதனால் தொற்று ஏற்பட்டால், காய்ச்சல் உண்டாகும். வெப்ப பகுதிகளில் வசிப்போருக்கு, உடலில் நீர்சத்து குறையும் போது, இதுபோன்று கற்கள் அடிக்கடி ஏற்படும். 40 – 60 வயதுள்ள ஆண்களிடையே இந்த உபாதை அதிகம் காணப்படுகிறது. பரம்பரையாகவும் இது ஏற்படலாம். கல் உருவாகி, சிகிச்சை எடுத்து கொண்டோரில் 50 சதவீதத்தினருக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கல் தோன்ற வாய்ப்பு உண்டு. உடலில் உள்ள மொத்த ரத்தமும், சிறுநீரகம் வழியே செல்கிறது. ரத்தத்திலிருந்து நீரையும், ரசாயனங்களையும், சிறுநீரகம் பிரிக்கிறது. ரசாயனங்கள் கல் ஆகாமல் இருக்க, சிறுநீரகமும் சில கரைப்பான்களை சுரக்கிறது. அதையும் மீறி தோன்றும் சிறு கல்கள், ஒன்றாகச் சேர்ந்து பெரிய கல்லாக உருவாகி விடுகின்றன. சிறுநீரகத்தில் கரைப்பான்கள் சுரப்பதில், பரம்பரையாகத் தடை கொண்டவர்களுக்கு, கல் உருவாவது சகஜம். அடிக்கடி தொற்று ஏற்பட்டாலோ, சிறுநீர் அடர்த்தியாக இருந்தாலோ, அடிக்கடி வெகுநேரம் சிறுநீரை அடக்குபவர்களுக்கோ கூட, கரைப்பான்கள் சுரப்பதில் பிரச்னை ஏற்படும். மூட்டு வீக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் உடலில் உப்பு அதிகம் சுரப்பதாலும், சிறுநீரகத்தில் கல் உருவாகும்.
எந்த அறிகுறியும் தெரியாத சிறுநீரகக் கல்லை, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் அல்லது எக்ஸ்-ரே எடுத்து பார்த்து அறிந்து கொள்ளலாம். வலி போன்ற பொதுவான அறிகுறிகளைச் சொன்னாலே, கல் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க, இது போன்ற பரிசோதனைகளை எடுக்குமாறு, டாக்டர் பரிந்துரைப்பார். சில நேரங்களில், ஐ.வி.பி., என்ற, நரம்பில் சாயம் ஏற்றி, கல் இருக்கும் இடத்தையும், அதன் அளவையும் கண்டறியும் பரிசோதனையும் செய்யப்படுகிறது. கற்களை நீக்க, பெரும்பாலான நேரங்களில் கடுமையான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. நாள் ஒன்றுக்கு, நான்கைந்து லிட்டர் தண்ணீர் குடிப்பவருக்கு, சிறுநீரகத்தில் கல் இருந்தாலும், சிறுநீர் மூலம் வெளியேறி விடும். வலி ஏற்பட்டால், வலி நிவாரணி மாத்திரைகள் சாப்பிடலாம். கல்லில் உள்ள ரசாயனங்கள் குறித்து அறிந்து கொண்டால், அதை வைத்து, மருந்து, உணவுக் கட்டுப்பாடுகளை டாக்டர் பரிந்துரைப்பார். தொடர்ந்து கடும் வலி, மிகப்பெரிய கல் ஆகியவை இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே அதை அகற்ற முடியும். கல் வளர்ந்து கொண்டே இருப்பது, தொடர் தொற்று ஆகியவை, சிறுநீரகத்தை பாதிக்கும் என்பதால், இதுபோன்ற நிலைகளில், அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சிறுநீரகத்தை திறந்து, அறுவை சிகிச்சை மேற்கொள்வது இல்லை. கல் இருக்கும் இடத்தில், உடலின் மேற்புறம், மின் அலைகள் உருவாக்கப்படுகிறது. இந்த அதிர்வலைகள், கல்லைத் தாக்கி, அதை உடைக்கின்றன. பொடியான கற்கள், சிறுநீர் வழியே வெளியேறி விடும். சிறுநீர் பாதையை கல் அடைத்து கொண்டால், செயற்கை குழாய் பொருத்தி கல்லை அகற்றலாம். வேறு சிகிச்சை முறைகளும் உள்ளன. இந்த உபாதை, 21ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருத வேண்டாம். 7,000 ஆண்டுக்கு முன்னால் இறந்த மனிதர்களிடமும் இது காணப்பட்டது. தற்போது சிறு வயதினர், குறிப்பாக குழந்தைகளிடம் இந்த உபாதை காணப்படுகிறது. சீனாவில், பால் பவுடரில் உள்ள மெலாமைன் என்ற பொருளால், குழந்தைகளுக்கு சிறுநீரகக் கல் உருவாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில், குழந்தைகள் அதிக உடல் எடையுடன் இருப்பது, உடல் பயிற்சி இல்லாமல் இருப்பது, காற்றூட்டப்பட்ட குளிர்பானங்களை குடிப்பது போன்ற காரணங்களால், கல் உருவாகிறது.
சிறுநீரகக் கல் உருவாவதை தடுக்க இயற்கை வழிமுறைகள் உள்ளன.
* பச்சை டீ அல்லது பால் கலக்காத டீ குடிப்பது நல்ல பலனைத் தரும். அதில் உள்ள ஆன்டியாக்சிடன்ட் தன்மை, சிறுநீரகத்தில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும்.
* சாத்துக்குடி, எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது. அவற்றில் உள்ள அமிலம், சிறுநீரில் கலப்பதால், கல் உருவாகும் வாய்ப்பைத் தடுக்கிறது.
* வாழைத் தண்டு சாப்பிடுவது, அதன் சாறை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிப்பது ஆகியவை நல்ல பலனைத் தரும்.
* மட்டன், மீன் சாப்பிடுவதைக் குறைப்பதும் கல் உருவாவதை தடுக்கும்.
* தினமும் இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவது மிக மிக நல்லது. கூடவே, தினமும் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். தூங்க செல்வதற்கு முன், ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து விட்டு தூங்குவ துநல்லது.