Tuesday, August 31, 2010

பொன்சேகாவிற்கு எதிராக தொடுக்கப்பட்டது போன்று சந்திரிக்காவிற்கு எதிராகவும் வழக்கு தொடர திட்டம்

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ளதனைப் போன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு எதிராகவும் அரசாங்கம் வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளதாக பிரபல சிங்கள இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகாவிற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளுக்கு நிகரான வகையில் பல வழக்குகள் சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கும் தொடரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
சந்திரிக்கா நிதி அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் மேற்கொண்ட லோகோமெட்விச் கொடுக்கல் வாங்கல்கள், எமிரேட்ஸ் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல்கள், ஏவன்ஸ் இன்டர்நெசனல் கொடுக்கல் வாங்கல்கள் உள்ளிட்ட பல கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் வழக்குத் தொடரப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
அமைச்சரவை அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு கொடுக்கல் வாங்கல் தொடர்பிலும் வழக்குத் தொடரப்பட மாட்டாது எனவும், ஏனெனில் சந்திரிக்காவின் அரசாங்கத்தின் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவை அமைச்சராக கடமையாற்றியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொண்டு ஏதேச்சாதிகாரமொன்றை நோக்கி அரசாங்கம் நகர்வதாகவும், அதனை தடுக்கக் கூடிய சர்வதேச ரீதியில் செல்வாக்குடையவர்களை முடக்கும் நடவடிக்கைளக் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறித்த சிங்கள இணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment