Saturday, September 4, 2010

விமானப் படையின் கௌரவ குரூப் கேப்டன் ஆனார் சச்சின் (வீடியோ இணைப்பு)

இந்திய விமானப் படையின் கௌரவ குரூப் கேப்டனாக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தில்லியில் வெள்ளிக்கிழமை நடந்த விழாவில் விமானப் படைத் தளபதி பி. வி. நாயக் அவருக்கு இந்த கௌரவத் தகுதியை வழங்கி பட்டத்தை அணிவித்தார்.

இந்திய விமானப் படையின் கௌரவ குரூப் கேப்டனாக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தில்லியில் வெள்ளிக்கிழமை நடந்த விழாவில் விமானப் படைத் தளபதி பி. வி. நாயக் அவருக்கு இந்த கௌரவத் தகுதியை வழங்கி பட்டத்தை அணிவித்தார். இந்திய விமானப் படையின் கௌரவ குரூப் கேப்டன் தகுதியை சச்சினுக்கு வழங்குவதற்கான முடிவை கடந்த ஜனவரி மாதம் இந்திய விமானப் படை எடுத்தது.

இதை அடுத்து குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலிடம் இதற்கான ஒப்புதலை கேட்டது விமானப்படை. ஜூன் 23-ம் தேதி இதற்கு ஒப்புதல் அளித்தார் பிரதிபா பாட்டீல். இதைத் தொடர்ந்து அவரை கௌரவ குரூப் கேப்டனாக அறிவிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் டெண்டுல்கர் விமானப் படை சீருடையுடன் கலந்து கொண்டு கௌரவப் பதவியைப் பெற்றார். விமானப் படைத் தளபதி பி. வி. நாயக் அவருக்கு இந்தத் தகுதியை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சச்சின் பேசியது: "இந்தத் அந்தஸ்தை பெறுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இது எனக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவம். இளைஞர்கள் அதிக அளவில் விமானப் படையில் சேர்ந்து அதன் மூலம் நாட்டுக்கு சேவையாற்ற முன் வர வேண்டும்' என்றார். நிகழ்ச்சியில் பேசிய விமானப் படைத் தளபதி பி.வி. நாயக், "சச்சினைப் பார்த்து இளைஞர்கள் பிரமிக்கிறார்கள். அவருக்கு ஏராளமான இளம் ரசிகர்கள் உள்ளனர். அவர் மூலமாக சொல்லப்படும் செய்தி எளிதில் இளைஞர்களைச் சென்றடையும். எனவே விமானப் படையைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் இளைஞர்களை ஈர்க்க டெண்டுல்கருடன் இணைந்து நான் முயற்சி எடுக்கப் போகிறேன்' என்றார்.

விழா நடைபெறுவதற்கு முன்னர் விமானப்படை பயிற்சி மையத்துக்குச் சென்று பயிற்சி நடைமுறைகளை பார்த்துத் தெரிந்து கொண்டார் டெண்டுல்கர். முதல் முறை: விளையாட்டு மற்றும் பிற துறைகளில் சிறப்பாக செயல்படும் முக்கிய பிரமுகர்களுக்கு ராணுவத்திலும் விமானப்படையிலும் இது போன்ற கௌரவப் பதவிகள் வழங்கப்படுவது உண்டு.

இதற்கு முன்னர் பிரபலங்கள் 21 பேர் விமானப்படையில் வெவ்வேறு கௌரவ பதவிகளை வகித்துள்ளனர். தொழிலதிபர் ஜே.ஆர்.டி. டாடா இந்திய விமானப் படையின் கௌரவ ஏர் வைஸ் மார்ஷலாக இருந்துள்ளார். அதேபோல ராணுவத்தில் கிரிக்கெட் முன்னாள் வீரர் கபில் தேவ், கௌரவ லெப்டினன்ட் கர்னலாக இருந்துள்ளார்.

எனினும் விமானப் படையில் கௌரவ குரூப் கேப்டன் அந்தஸ்து, விமானத் துறையுடன் தொடர்பு உடையவர்களுக்கு மட்டுமே இது வரை வழங்கப்பட்டு வந்துள்ளது. விளையாட்டு வீரர் ஒருவர் விமானப் படையின் கௌரவ குரூப் கேப்டனாவது இதுவே முதல் முறை.

No comments:

Post a Comment