Sunday, September 26, 2010

காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த 8 அம்ச திட்டம் வெளியீடு

  காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக நிலவும் மோசமான நிலைமையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு எட்டு அம்சங்கள் அடங்கிய திட்டங்களை மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.

கடந்த ஜூன் 11ம் திகதி பிரிவினைவாதிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலவரம் ஆரம்பித்தது.

இதனை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில், 17 வயது இளைஞர் ஒருவர் பலியானார். இதனால் அங்கு மூன்று மாதங்களாக வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இப்பிரச்சினைகு தீர்வினை முன்வைக்க மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் அனைத்துக் கட்சி குழுவை மத்திய அரசு அமைத்தது.

இந்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில், பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக்கூட்டம் கூட்டம் டெல்லியில் நடைபெற்ற போது காஷ்மீர் நிலவரம் குறித்த அனைத்துக் கட்சி குழுவின் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சமர்ப்பிக்கப்பட்டு,அந்த அறிக்கை பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், காஷ்மீரில் பதற்றத்தை தணிப்பதற்காக, 8 அம்ச தீர்வு திட்டம் ஒன்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தீர்வு திட்டம் குறித்த விவரங்களை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று தெரிவித்தார். வெளியிட்ட தீர்வு திட்டம் வருமாறு:

காஷ்மீரில், கலவரத்தின்போது, கல் வீச்சு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக கைதான அனைத்து மாணவர்களையும், இளைஞர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் வாபஸ் பெற வேண்டும்.

பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்ய வேண்டும்.

காஷ்மீர் பிரச்சினை குறித்து, காஷ்மீரைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகள், குழுக்கள், மாணவர்கள், சமூக அமைப்புகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, மதிப்புவாய்ந்த நபர் ஒருவர் தலைமையில் குழு அமைக்கப்படும்.

பதற்றமான பகுதிகள்' என அறிவிக்கப்பட்ட பகுதிகளை காஷ்மீர் அரசு மறுஆய்வு செய்ய வேண்டும்.

உடனடியாக, இராணுவம், துணை இராணுவம், பொலிஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்ட குழு கூட்டத்தை கூட்டி, காஷ்மீர் பள்ளத்தாக்கில், குறிப்பாக ஸ்ரீநகரில், பாதுகாப்பு படையினரை மீண்டும் நிறுத்துவது குறித்து காஷ்மீர் அரசு ஆய்வு செய்ய வேண்டும்.

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும்.

மூடப்பட்ட கல்வி நிறுவனங்களை காஷ்மீர் அரசு உடனடியாக திறக்க வேண்டும். நடப்பு கல்வி ஆண்டு வீணாகி விடக்கூடாது என்பதால், தேவைப்பட்டால், சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும். உரிய நேரத்தில் தேர்வு நடத்த வேண்டும்.

பள்ளி, கல்லூரி கட்டமைப்பு வசதிகளுக்காக, காஷ்மீருக்கு கூடுதலாக ரூ.100 கோடி வழங்கப்படும்.

காஷ்மீரின் பிற பிராந்தியங்களான ஜம்மு, லடாக் ஆகிய பிரதேசங்களின் வளர்ச்சி தேவைகள் குறித்து ஆராய, 2 சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும். என எட்டு அம்சங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. _

No comments:

Post a Comment