| அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஒரு முழுமையான கிறித்தவர் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.அமெரிக்கர்களில் ஐந்தில் ஒருவர் ஒபாமாவை ஒரு இஸ்லாமியர் என்று நினைப்பதாக சமீபத்தைய ஆய்வு ஒன்று தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள வெள்ளை மாளிகை, ஒபாமா தவறாமல் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்திச் செயலாளர் பில் பர்ட்டன் நிருபர்களிடம் கூறுகையில், 'அதிபர் ஒபாமா ஒரு முழுமையான கிறித்தவராவார். அவருடைய அன்றாட கடமைகளில் ஒன்றாக ஆண்டவனை பிரார்த்திப்பதும் உள்ளது' என்றார். 'ஒபாமா தினமும் பிரார்த்தனையில் ஈடுபடுகிறார். அவருக்கு ஆன்மிக ரீதியில் அறிவுரை கூற கிறித்தவ பாதிரியார்கள் அடங்கிய குழு உண்டு. அவர் ஒரு கிறித்தவர் என்பது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு மட்டும்தான். அதை அவர் பொதுமக்களிடமோ ஊடகங்களிடமோ வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுத்தல், ஈராக்கில் இருந்து ராணுவத் துருப்புகளை தாயகத்துக்கு திரும்பச் செய்தல், அமெரிக்கர்களின் சுகாதாரம் மற்றும் நிதி நிலைமைகளை சீர் செய்வதில் அவருக்கு உதவியாக இருப்பது, அவருடைய கிறித்தவ மத நம்பிக்கை தான். அதற்காக அவர் அதை தோளில் அணிந்துகொண்டு திரிய முடியாது' என்று கூறியுள்ளார் பர்ட்டன். ஒபாமா, கென்யா தந்தைக்கும் அமெரிக்க தாய்க்கும் பிறந்தவர்.அவருடைய தந்தைவழி தாத்தா, பாட்டி ஹவாய் தீவில் உள்ளனர். பராக் என்றழைக்கப்பட்ட ஒபாமாவின் தந்தை ஆப்ரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தபோது ஒபாமாவுக்கு 2 வயது. ஒபாமா தன்னுடைய சுயசரிதையில், தன்னுடைய தாத்தாவான ஹூசைன் ஆன்யாங்கோ ஒபாமா ஒரு இஸ்லாமியர் என்று குறிப்பிட்டுள்ளார். மதம் மற்றும் பொதுவாழ்வு பற்றிய அமைப்பான பீயு பாரம் என்ற அமைப்பு சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது.அந்த ஆய்வின் முடிவில் அமெரிக்கர்களின் 5 இல் ஒருவர் ஒபாமாவை ஒரு இஸ்லாமியர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.10 இல் ஒரு அமெரிக்கர், ஒபாமா கடந்த ஆண்டு வரை இஸ்லாமியராக இருந்தார் என்று கூறியுள்ளனர். கடந்த ஆண்டு 10 சதவிகிதமாக இருந்த 'ஒபாமா ஒரு இஸ்லாமியர்' என்ற நம்பிக்கை அமெரிக்கர்களிடையே தற்போது 18 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இந்த ஆய்வறிக்கையின்படி பார்த்தால் கூட ஒபாமா ஒரு கிறித்தவர்தான் என்பது பெரும்பாலான மக்களால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள முடிவாக இருக்கிறது. இதையடுத்துதான் ஒபாமா கிறித்துவரா? இஸ்லாமியரா என்று விளக்க வேண்டிய நிலைமை வெள்ளை மாளிகைக்கு ஏற்பட்டுள்ளது. |
Wednesday, August 25, 2010
ஒபாமா கிறித்தவர்தான்!: வெள்ளை மாளிகை விளக்கம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment