Saturday, December 18, 2010

இன்று கூகிளில் தெரிவது! - இசையால் நாசிப்படைகளை வென்ற 'சிட்டுக்குருவி'


17 வருடத்திற்கு முன்பு, நியூயோர்க்கில் ஓர் டேக்ஸி வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்.
Grand Central Down, முன்பு வண்டி வந்த போது, ஒரு இளைஞன்.

பார்த்தாலே தெரிகிறது வாழ்க்கையை வெறுத்து ஒதுக்கிய ஒருவன். டேக்ஸியில் லிப்ட் கேட்டான். அனுமதித்தேன். கையில் ஓர் கேசட் பெட்டி. முதன்
முதலாக எடித் பியேஃப் (Edith Piaf) பாடல் நான் போடாமல், என் காதுகளுக்குள் ஒலித்த சந்தர்ப்பம் அது. அவன் திரும்ப திரும்ப பாடல் வரிகளை முணுமுணுதுக்கொண்டே  இருந்தான். 30 நிமிட பிரயாணமது. எடித் பியேஃப் பற்றி ஓரளவேனும் அறிந்துகொள்ள அந்த 30 நிமிடமும், அவனும் தான் காரணம். இறங்கும் போது கையில் இருந்த அந்த கேசட்டை கொடுத்துவிட்டு கூறினான். வாழ்க்கை வெறுத்த பலதடவைகளை வென்றுவிட்டேன். இந்த வரிகளை கேட்டுப்பாருங்கள்  உங்களது இளமை பருவம், தாய், தாய்நாடு எல்லாமே ஞாபகத்திற்கு வரும்! என்னைப்போலவே!

'Listening Room Blog'  - பிரபல இசைப்பிரியர்களின் வலைப்பதிவில் எழுதப்பட்ட ஓர் அனுபவம் இது!
இது தான் எடித் பியேஃப் இன் உன்னதமான சக்தி. அவருடைய யுனிக் வோகல் ஸ்டைல், இன்றுவரை பிரான்ஸுக்கு பெருமை சேர்ப்பவற்றில் ஒன்று!
பிரான்ஸில் முதன் முதலாக, ஓர் மரணமடைந்த நபரின் இறுதிக்கிரியைகள் பொது மக்கள் மத்தியில் மிகப்பிரமாண்டமாக நடத்தப்பட்டது என்றால், இவருடையது தான்! 1963 ம் ஆண்டு புற்றுநோயின் காரணமாக எடியேத் இறந்த போதுதான் அவருக்கு இவ்வளவு ரசிகர்கள் கூட்டமா என உலகம் வாய்பிளந்தது.

பிறந்தது பாரிஸில் பெல்வில் எனும் ஊர். பிறந்த ஆண்டு 1915 டிசெ.19. இதில் ஆச்சரியம் அவர் உலகம் முழுவதும் பிரபலமடைந்த போது, பிரான்ஸில் மட்டும்  தேசத்துரோகியாக கருதப்பட்டார். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது, அவரது இசைப்பாடல்கள் ஜேர்மனிய நாசி இராணுவத்தினரை குஷிப்படுத்தியதாம்.

அந்நேரம் அவர் பாடிக்கொண்டிருந்ததே பிரான்ஸில் இருந்து தான்.

ஜேர்மனிய நாசிக்களிடமிருந்து பிரான்ஸுக்கு ஆதரவான யூதர்களை காப்பாற்றவே எடித் அப்படி பாடினார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம், இரண்டாம் உலகமகாயுத்தம் முடிவடைந்த பிறகு தான் பிரான்ஸ் மக்களுக்கு வந்தது. அதன் பின்னர் தான் அவர் பிரபல்யமடையத்தொடங்கினார்.

பிரான்ஸின் மூலை முடுக்குவரை அவர் பாடல்கள் ஒலிக்கத்தொடங்கின. தனது வாழ்வின் பிரதிபலிப்பை பற்றியே அதிகம் பாடினார். ஆனால் கேட்பவர்கள் எல்லோருக்கும் அது  பொருந்தும்! அதிகமானவை பலேட் வகை இசையை சேர்ந்தவை. "La Vie en rose" (ரோஜாவினுள் ஓர் வாழ்க்கை - 1946), "Non, je ne regrette rien" (1960), "Hymne à  l'amour" (1949), "Milord" (1959), "La Foule" (1957) என்ற பாடல்கள், பிரான்ஸின் 40,50 களை அவரது இசையின் பின்னால் வரவழைத்த காலப்பகுதி.

பாரிஸ் எங்கிருக்கிறது என தெரியாத பிரான்ஸ் வாசிகளுக்கு கூட La Môme Piaf என்றால் சிம்பிளாக சொல்வார்கள். அது எடித் பியேஃபின் செல்லப்பெயர்.
பிரெஞ்சில் Môme என்றால் குழந்தை. ஏனைய நாட்டவர்கள் அவரை த லிட்டில் ஸ்பரோவ் (The Little Sparrow) சின்ன சிட்டுக்குருவி என
அழைப்பார்கள்.
நாசிப்படைகளை கூட தன் இசையால் இணங்கவைக்க முடியும் என பியேஃப் நம்பியது தான், அவர் இறந்தும் இறவாது  மக்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணமாக இருக்கமுடியும்!
இன்று வரை அவரை பற்றி தெரியாதவர்களுக்கும் கூகிள், தனது டூடிள் மூலம் வழி சமைத்துவிட்டது. 95 வது பிறந்தநாளை கொண்டாடும் பியெஃபுக்கு நாமும் வாழ்த்து கூறுவோம்!
முன்னைய ' இன்று கூகிளில் தெரிவது?' பதிவுகள்

No comments:

Post a Comment